Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடிகளுக்குப் பதிலாக செடி நடுவோம்... திருச்சியில் ஒலிக்கும் புதிய கோஷம்

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே  'தண்ணீர்' அமைப்பின் சார்பில், தீபாவளிப்  பண்டிகையை முன்னிட்டு, 'வெடிகளை குறைப்போம்; செடிகளை வளர்ப்போம்' எனும் வீதி நாடகம் மூலம் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

'தண்ணீர்' அமைப்பின் தலைவர் சேகரன், செயலாளர் நீலமேகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழிப்பு உணர்வு வீதி நாடகத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 'தண்ணீர்' அமைப்பின் இணைச் செயலாளர் சதீஷ்குமார், அபி, கண்ணன் தலைமையிலான கலைக்குழுவினர் பங்கேற்ற இந்த நாடகத்தில், சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

"இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மக்கள் இந்தப் பண்டிகையின்போது, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெடிவெடித்து கொண்டாடுகின்றார்கள். வெடிகளில் சுற்றுச்சூழலைப்  பாதிக்கக்கூடிய கேட்மியம், காரீயம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாஷியம் போன்ற  உலோகங்கள் உள்ளன. இதனால் மனிதர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தாமிரம் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தையும், காரீயமானது மனிதனின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. சோடியம், சருமத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல்  ரத்தசோகை, காய்ச்சல், வாந்தி, மனச்சிதைவு, நுரையீரல் தொந்தரவு உள்ளிட்டவற்றை இந்த தனிமங்கள் உண்டாக்குகின்றன. நைட்ரைட்டால், மனிதர்கள் கோமா நிலைக்குக்கூட போக வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு நாம் வெடிக்கும் இதுபோன்ற பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்லமால் நமக்கு நாமே நோய்களை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசுகளை வெடிப்பதால் மட்டும் 30 சதவிகிதம் அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதனால் மழைப்பொழிவு பாதிப்பதுடன், புவி வெப்பமடைதல் அதிகமாகிறது. பட்டாசுகளால்  எழும் அதிக சத்தம் காதுகளை பாதிக்கச் செய்வதோடு, மன உளைச்சலையும்  ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் பட்டாசுகள் எழுப்பும் அதிக சத்தத்ததால், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,  முதியோர்  பாதிக்கப்படுகிறார்கள். எனவே நாம் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து, மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம், புகையற்ற, சப்தமில்லாத தீபாவளியைக் கொண்டாட உறுதியேற்போம், நாம் ஒவ்வொருவரும் செடிகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடுவோம்" என அந்த விழிப்பு உணர்வு நாடகத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நாடகம் குறித்து அமைப்பின் செயலாளர் நீலமேகம், "தீபாவளிப் பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட வலியுறுத்தி பல்வேறு இடங்களிலும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம். திருச்சி செங்குளம் காலனி, சத்திரம் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம் என தொடர்ந்து விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகின்றோம். பட்டாசுகளில் உள்ள கந்தக டையாக்சைடு மற்றும் நைட்ரஸ் டையாக்சைடு போன்ற வாயுக்கள் நுரையீரல் தொந்தரவை உண்டு பண்ணலாம். கார்பன் டையாக்சைடும், நைட்ரஸ் ஆக்சைடும் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகின்றன. அதிக சத்தம் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் தீ விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வெடிகளற்ற தீபாவளி விண்ணுக்கு நல்லது. புகையற்ற, சப்தமில்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்பு உணர்வை இந்த நாடகங்கள் மூலம் உண்டாக்குகிறோம்" என்று தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

- சி.ய.ஆனந்தகுமார்.

எடிட்டர் சாய்ஸ்