Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அந்த' பிரச்னைக்கு 'இந்த' இடத்தில் நோட்டீஸ்! போலி வைத்தியர்கள் உஷார்

ஆண்மைக் குறைபாடு, சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகிய நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் ஒதுங்கும் இடங்களில் அந்த நோய் சம்பந்தமான நோட்டீஸ்கள் அதிகளவில் ஓட்டப்பட்டு வருகின்றன.

தமிழகம்-கேரளா எல்லையான நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் நாட்டு மருந்து வைத்தியர்களுக்கு பஞ்சமில்லை. மலையிலிருந்து சேகரிக்கப்படும் மூலிகைகளை கொண்டு இவர்கள் சிகிச்சை அளிப்பதுண்டு. இந்த மருந்துகளைச் சாப்பிட கிராம மக்களும் ஆர்வம் காட்டுவதுண்டு. நேற்று சர்க்கரை மற்றும் உடல் பருமன் நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கூறிய நெல்லை மாவட்டம், மலையன் தெருவை சேர்ந்த வைத்தியர் முத்துபாண்டியனால் இரண்டு உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் நாட்டு வைத்தியர் முத்துபாண்டியும் பலியாகி விட்டார். அடுத்து அதே பகுதியை சேர்ந்த சௌந்திரபாண்டியன் என்பவரும் இறந்தார். இதனால் ஒரே நாளில் நாட்டு மருந்து சாப்பிட்ட நான்கு பேர் பலியான சம்பவம் தென்காசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பொது மக்களும் பீதியடைந்துள்ளனர்.

பொதுவாக ஆண்மை குறைபாடு, மூலம், பௌத்தரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமா என்ற நோட்டீஸ், சிறுநீர் கழிக்கும் இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டு இருக்கும். அந்த நோட்டீஸில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட பிறகு சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஆண்மை குறைபாடுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பலர் அதுதொடர்பான விவரங்களை வெளியே தெரிவிப்பதில்லை. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்மைக் குறைபாடுக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரபலமான வைத்தியர்கள் புற்றீசல்கள் போல இருப்பதாக சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

"மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மூலிகைகளைக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் இந்த சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களிடம் மருந்து சாப்பிட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. இதனால் எந்தவித லைசென்சும் இல்லாமல் பலர் நாட்டு வைத்தியம் செய்கின்றனர். வைத்தியர் முத்துபாண்டியை பொறுத்தவரைக்கும் கடந்த சில ஆண்டுகளாக அவர் நாட்டு மருந்து வைத்தியம் செய்து வந்துள்ளார். அவரிடம் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். சிலர் குணம் அடைந்துள்ளனர். இந்த உயிர்பலிக்கு முத்துபாண்டி, செய்த மருத்துவ முறையில் தவறே காரணமாக இருக்கும் என்றே கருதுகிறோம். கேரளாவிலிருந்து அவர் சேகரித்த காட்டு வேம்பு உள்ளிட்ட சில பச்சிலைகளை கொண்டு அவர் மூலிகை மருந்து தயாரித்ததாக சொல்கிறார்கள். அந்த மருந்தை அவர் மண்பானையில் வைத்து பூமிக்கடியில் சில நாட்கள் புதைத்து வைத்ததாகவும் சொல்கிறார்கள். முத்துபாண்டிக்கு சர்க்கரை நோய் இருந்ததால் முதலில் அவர் அந்த மருந்தை குடித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். இதன்பிறகு அழகப்பபுரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி, பாலசுப்பிரமணியன், இருளாண்டி, சாமிநாதன் ஆகியோர் மூலிகை மருந்தை சாப்பிட்டுள்ளனர். வைத்தியர் முத்துபாண்டி உள்பட 5 பேரும் மயங்கி விழுந்தனர். இதில் முத்துபாண்டி, இருளாண்டி, பாலசுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரும் பலியாகினர். சாமிநாதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பாலசுப்பிரமணியனும், இருளாண்டியும் லாரி டிரைவர்கள் எனபது தெரியவந்துள்ளது. சௌந்திரபாண்டியன் இறப்பும் மர்மமாக இருப்பதால் அவரும் மூலிகை மருந்து சாப்பிட்டு இறந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முத்துபாண்டியைத் தவிர ஏராளமானவர்கள் நாட்டு மருந்து வைத்தியம் பார்த்து வருகின்றனர். இதில் சிலரிடம் ஆர்.ஐ.எம்.பி என்ற லைசென்ஸ் இருக்கிறது. ஆனால் பலரிடம் எந்தவித லைசென்சும் இல்லை. மேலும், பள்ளிகூடமே ஒதுங்காத சிலர் நாட்டு வைத்தியத்தில் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். கைராசிக்காரர் என்ற பட்டத்துடன் அவர் அளிக்கும் சிகிச்சைக்கு அங்கு அதிக மதிப்பு. குறிப்பாக ஆண்மை குறைபாடுக்கு தங்களிடம் சிறந்த மருந்து இருப்பதாக இவர்கள் பிரபலப்படுத்திக் கொள்வதுண்டு. அதை நம்பி பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூலிகை மருந்து மூலம் சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைத்துள்ளது. அவர்கள் இந்த சிகிச்சை குறித்து மற்றவர்களிடம் சொல்லும்போது சிகிச்சை அளித்த நாட்டு வைத்தியர் பிரபலமடைந்து விடுகிறார். அவரைத் தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. தற்போது இந்த உயிர்பலி சம்பவத்துக்குப் பிறகு இந்த பகுதியில் வைத்தியர்கள் பலர் மாயமாகி விட்டனர்.

ஆண்மை குறைபாடுக்கு சிகிச்சைக்கு வைத்தியர்கள் சொல்லும் பணத்தை தட்சணையாக கொடுக்க வேண்டும். வைத்தியர்களுக்கு சிஷியர்களும் இருக்கிறார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு அவர்களும் பிரபலமான நாட்டு வைத்தியர்களாக மாறுவதும் உண்டு. தென்காசி சுற்றுவட்டார பகுதியில் பரம்பரை பரம்பரையாகவும் நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கும் குடும்பங்களும் உண்டு. ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நாட்டு வைத்தியர்கள் பணத்தைப் பறிக்கும் ஆசையில் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் பணத்தையும் இழந்து உயிரையும் இழக்கும் மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், "சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு  10 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அறியாமையால் மக்கள் இன்னும் நாட்டு வைத்திய முறைக்கு செல்வது வேதனைக்குரியது. தென்காசி சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் வைத்தியர் உள்பட மருந்து சாப்பிட்டவர்கள் இறந்துள்ளனர். எனவே மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சர்க்கரை நோய் என்றவுடன் கசப்பான மருந்தை சாப்பிட்டால் அது குணமாகி விடும் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. இதனால் படித்தவர்கள் கூட பாகற்காயை சர்க்கரை நோய்க்காக சாப்பிடுகின்றனர். சர்க்கரை நோய்க்கான காரணம் வேறு என்பது மக்களுக்குத் தெரியவில்லை. எனவே, முறையாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் மெடிக்கல் கடைகளில் கூட மருந்து வாங்கிச் சாப்பிடக்கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் அவர்கள் உயிரோடு விளையாடுவதற்கு சமம்" என்றனர். 

"சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரைக்கும் பரம்பரை பரம்பரையாக நாட்டு மருத்துவம் பார்ப்பவர்களுக்கு சில தேர்வுகள் நடத்தி ஆர்.ஐ.எம்.பி என்ற லைசென்ஸ் வழங்கப்படும். இந்த லைசென்ஸ் நிறுத்தியே பல ஆண்டுகளாகி விட்டன. லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் சிகிச்சை அளிக்கலாம். தென்காசி சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் வைத்தியர் முத்துபாண்டி இந்த லைசென்ஸ் வைத்துள்ளாரா என்று விசாரணை நடந்து வருகிறது. அடுத்து அவர் கொடுத்த மருந்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். நாட்டு மருந்துகள் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகம் இருக்கிறது. இதனால் சித்த மருத்துவத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சித்த மருத்துவர்கள் தற்போது அனைத்து இடங்களிலும் சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவர்களின் படிப்பு மற்றும் சிகிச்சை முறையை குறித்து அறிந்தபிறகே அங்கு மக்கள் சிகிச்சை மேற்கொள்வது காலச்சிறந்தது" என்கின்றனர் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள். 


- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ