Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடவுளே நான் என்ன பாவம் செய்தேன்..! பெண் காவலர் ராமுவின் கடைசி ஆடியோ

அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ராமு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு 13 நிமிடங்கள் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் தன்னை ஏமாற்றிய எஸ்.ஐ அருமைநாயகம் குறித்து அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார். (அந்த ஆடியோ மிகுந்த மனவிரக்தியில் அவர் பேசுவதால் அதை வெளியிடவில்லை)

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராமு கடந்த 10-ம் தேதி இறந்தார். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. அருமைநாயகத்தைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமுவும், அருமைநாயகமும் பேசிய போன் ஆடியோ மற்றும் ராமுவின் டைரி ஆகியவை போலீசிடம் உள்ளது. அதன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமுவின் டைரியில் அருமைநாயகம் மற்றும் 4 பேர் என்னுடைய சாவுக்கு காரணம் என்று எழுதியுள்ளார். இதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ராமுவின் டைரியில் அருமைநாயகத்துக்கு நெருக்கமான பானுமதி, மதுரையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரையும் ராமு, சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராமு விஷம் குடித்து தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் போனில் பேசிய ஆடியோ, மரண வாக்குமூலமாக போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதில் அவர் கண்ணீர் மல்க 13 நிமிடங்கள் பேசுகிறார். அதைக்கேட்கும்போது ராமு, எந்தளவுக்கு மனதுயரத்தில் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. அவரது மனமும், குரலும் உடைந்து விரக்தியில் பேசுகிறார். அவர் பேசிய ஆடியோவிலிருந்து சில வரிகள்.

"கடவுளே நான் என்ன பாவம் பண்ணினேன் என்று தெரியல. என்னை அவன் நம்ப வைத்து ஏமாற்றி விட்டான். செத்துருவேன் என்று சொல்லியே என்னை ஏமாற்றி விட்டான். என் வாழ்க்கையை கெடுத்து விட்டான். என் காலில் விழுந்தான். இப்படியொரு அயோக்கியனை ஏன்தான் நான் சந்தித்தேன் என்று தெரியல. அவனைப் பற்றிய உண்மையை தெரிந்த நாளிலிருந்து அழுது கொண்டே இருக்கிறேன். என்னுடைய லைப் போயிட்டு, இனி நான் இருந்து என்னஆகப் போகுது. உயிர் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது. அதையும் விட்டுவிட்டால் நிம்மதியாய் இருப்பல. அந்த அயோக்கியன் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டான். என்னால் வேதனையை தாங்கமுடியல. பரவாயில்லை. நல்லா இருக்கட்டும்" என்பதோடு அவரது ஆடியோவும், அவரது மூச்சும் நின்று போயிருக்கிறது.

ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பே அவரும், அருமைநாயகம் பேசிய ஆடியோவை ஒரு சிடியாக போட்டுள்ளார். மேலும் முக்கியமான உரையாடல்களைத் தனக்குத் தெரிந்தவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியும் இருக்கிறார். அடுத்து அவரது டைரியில் அருமைநாயகம் குறித்த அனைத்து விவரங்களையும் எழுதி வைத்துள்ளார். இந்த ஆதாரங்கள் அனைத்தும் வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளன.

ராமு, தன்னுடைய தற்கொலைக்கு காரணமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளவர்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர். இதனால் அவர்களிடம் போலீஸார் இதுவரை விசாரிக்கவில்லை. இந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அருமைநாயகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ராமு, தன்னுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தலாம். ஆனால் ஏனோ, அவர்களிடம் விசாரிக்காமல் விசாரணை அதிகாரி, அமைதியாக இருக்கிறார். மேலும், இந்த வழக்கில் அருமைநாயகத்தின் உறவினர்கள் மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பெயரளவுக்கு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களை வழக்கிலிருந்து காப்பாற்ற போலீஸார் முயல்வதாக ராமு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அருமைநாயகம் குறித்து போலீஸார் முழுமையாக விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் தெரியவரும் என்கின்றனர் ராமு தரப்பினர். 

- எஸ்.மனோ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ