Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் நலம் பெற வேண்டி நடந்த ஊர்வலத்தில் பெண் பலியான பரிதாபம் !

திருவண்ணாமலை : தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் நெரிசல் ஏற்பட்டு, பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8 பேர் மயங்கினர்.

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்பக் கோரி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பலவித வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அன்றாட பணியாகவே இந்த வழிபாடுகள் மாறி விட்டன.

சிறப்பு பூஜையில் துவங்கி யாகம் வளர்ப்பது, பால் குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுவது என விதவிதமான வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுகவினர். அதன்படி முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெறக்கோரி, திருவண்ணாமலையில் நடந்த பால்குட ஊர்வலத்தில் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என வேண்டி, பால்குட ஊர்வல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த பால் குட ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தார்.

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு 5001 பேர் பால் குடம் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நெருக்கடி மிகுந்த சாலையில் ஊர்வலம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தனர். இந்த நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலாம்பாள் எனும் 60 வயது பெண் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மேலும் எட்டு பேர், மூச்சுத்திணறலால் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
நெரிசலில் சிக்கி கட்சித் தொண்டர் ஒருவர் இறந்த நிலையிலும் பால் குட ஊர்வலத்தை தொடர்ச்சியாக நடத்தி முடித்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. வேண்டுதல் முதல்வர் நலம் பெற வேண்டும் என்பது தானே!.

- அ.அச்சணந்தி,

படங்கள்: கா.முரளி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close