Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா நலம்பெற தொண்டர்கள் செய்யும் பூஜை முறைகள் சரியா?

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அப்போலோவில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு சிறப்பு யாகங்களையும், பூஜைகளையும் நடத்தி வருகின்றனர். சில அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீச்சட்டி ஏந்தியும், முகத்தில் அலகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும், பால் குடம் எடுத்தும் முதல்வருக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்காக எந்த மாதிரியான பூஜைகள் செய்யவேண்டும், முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அ.தி.மு.க. தொண்டர்கள் மேற்கொண்டு வரும் பூஜை முறைகள் ஆன்மிக நியதிப்படி சரியானதுதானா என்று, சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சார்யரிடம் விசாரித்தோம்.

''ஆத்மார்த்தமாக- முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு எப்போதுமே சக்தி அதிகம். ஆக, தொண்டர்கள் அவரவர் விருப்பப்படி கூட்டுப் பிரார்த்தனையாகச் செய்யும் அவர்களது வழிபாடுகளும் நன்மையைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம், ஜாதக ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு அமைப்பு இருக்கிறது. அதனால், அந்தந்த ஸ்தானங்களில் அந்த கிரகங்கள் இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத தருணங்களும் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்ற வழிபாடுகளைச் செய்யும்போது, கூடுதல் பலன் உண்டு.


சிம்ம ராசியில் ராகு இருப்பதால்தான், முதல்வரின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலும் கடந்து, அவரின் உடல்நிலை நிச்சயம் பூரண குணமடையும். ஜாதக ரீதியாக முதல்வர் ஜெயலலிதா , சிம்ம ராசியாக இருப்பதால், ஜென்மத்தில் ராகு இருக்கிறார். ராகுக்கு அதிதேவதை துர்காதேவி. ஆகவே, அம்பாள் சம்மந்தமான வழிபாடுகள் செய்வது, அதீத பலனை பெற்றுத் தரும். அந்த வகையில், சாஸ்திரங்கள் கற்றறிந்தவர்கள் மற்றும் மந்திர பிரயோகங்கள் தெரிந்தவர்களை வைத்து சண்டி ஹோமம், துர்கா ஸ்தோத்திரங்கள், சப்தச்லோகீ - சப்த சதீ  ஸ்லோகங்கள், சண்டி பாராயணம் ஆகியவற்றைச் செய்யலாம். அதேபோல், ஒவ்வொரு நாளும் ராகுகாலத்தில் பூஜைகள் செய்யலாம்.

சண்டி ஹோமம்:

சண்டி ஹோமம் செய்தால், ராஜயோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவோருக்கு, சாபங்கள், நோய்கள், தடைகள் ஆகியவை அகன்று; செல்வம், இன்பம், சுகாதாரம் ஆகியவை சேரும் என்பது ஐதீகம். முக்கியமாக தீய சக்திகளின் இடர்ப்பாடுகளில் இருந்தும், அதன் மூலமாக ஏற்படும் துன்பத்திலிருந்தும் நம்மைக் காக்கும். 
சண்டி ஹோமம் 13 அத்தியாயங்களை கொண்டது. குறைந்தது 9 குருக்களை வைத்து செய்யப்படும் ஒரு மிகப்பெரிய ஹோமம் ஆகும்.

துர்கா ஸ்தோத்திரம்

துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ

துர்கையின் இந்த திருப்பெயர்களை அனுதினமும் சொல்லி வழிபடுவதன் மூலம், உடற்-உள்ளப் பிணிகளின் மூலம் ஏற்படும் துயரங்களை விலக்கலாம்.

துர்கா சப்தச்லோகீ - சப்த சதீ 

தேவியின் பெருமையை 700 ஸ்லோகங்களைக் கொண்டு விளக்குகிறது துர்கா சப்தச்லோகீ - சப்த சதீ மந்திரங்கள். சப்த சதீயை பாராயணம் செய்தால், அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடையலாம் என்பது ஐதீகம். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.

சண்டி பாராயணம் 

உயிருக்கு ஆபத்தான காலத்திலும், வழக்குகளில் இருந்து வெற்றி பெறவும்,   தோஷ பரிகாரத்துக்காகவும், சௌபாக்கியங்களை அடையவும் சண்டி பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தது என்கிறது தேவீ பாகவதம். ருத்ரன், செவ்வாய் முதலானோர் இதை பாராயணம் செய்து நினைத்த காரியம் நிறைவேறப்பெற்றனர்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிப்பது சிறப்பு. சண்டி பாராயணத்தை பொறுத்தவரை, 108 முறை பாராயணம் செய்வது மிகவும் விசேசம்.

ராகு கால பூஜை

ராகு கால நேரத்தில் ஆலயங்களுக்குச் சென்று அங்கே சந்நிதி கொண்டிருக்கும் துர்காதேவிக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்யலாம். முக்கியமாக இந்த விளக்கை நல்ல எண்ணெயிலும், நெய் ஊற்றியும் ஏற்றுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

பொதுவாகவே, ராகு காலத்தில் யாரும் எந்த நல்ல காரியங்களும் செய்வதில்லை. ஆனால், விசேஷ பூஜைகள் செய்வதற்கான ஏற்ற நேரமாக சாஸ்திர வல்லுநர்கள் இதைச் சொல்வார்கள்.
சர்ப்ப கிரகங்களான ராகுவும்–கேதுவும், துர்காதேவியை வழிபட்டதன் பலனாகவே கிரக நிலைக்கு உயர்ந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம். 
 
இதுபோன்று துர்கை மற்றும் அம்பாள் தொடர்பான மந்திரங்கள் பூஜைகளுக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும்.முதல்வர் நலம்பெற வேண்டும் அன்பர்களும் தொண்டர்களும் தொடர்ந்து துர்காதேவியை வழிபட்டு வரம்பெறலாம். முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப, பொதுமக்களுடன் சேர்ந்து, நாமும் பிரார்த்திப்போம்". என்று கூறினார்.


- ரா.வளன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ