Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசல்! தப்பிப்பது எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை, பன்மொழி பேசும் வெவ்வேறு நாகரிகங்களைக் கொண்டவர்கள் வசிக்கும் பெருநகரம் என்றாலும், இங்கு வந்து 'செட்டில்' ஆனவர்களே அதிகம். தலைநகர் சென்னையில் வசிப்போரில் 90 சதவீதத்தினர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே. தீபாவளிப் பண்டிகை என்றாலே பிரபல நடிகர்களின் திரைப்படங்களும் ரிலீஸ் ஆவது வழக்கம். பண்டிகைகளை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.


அந்தவகையில், தீபாவளிப் பண்டிகைக்காக, பல்லாயிரக்கணக்கான பயணிகள் நூற்றுக்கணக்கான பேருந்துகளில், ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயற்கைதான். 
சமீபகாலமாக, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுடன் ஓரிரு நாள் அரசு விடுமுறையும் சேர்ந்து, தொடர்விடுமுறை என்றால் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளால் சென்னைவாசிகள் படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது. அதிலும் பேருந்துகள், ஒரேநேரத்தில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்லும் நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகின்றன. கோயம்பேடு, பெருங்களத்தூர்  வழியாக, வழக்கமான அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர் அனுபவிக்கும் போக்குவரத்து நெரிசல் கொடுமையிலும் கொடுமை. பேருந்துகளின் நெரிசல் காரணமாக, உரிய நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாத அவலம் சென்னையில் தொடர்கதையாகி விட்டது.

ஷாப்பிங் இடங்களாக ஏற்கெனவே சென்னை பாரிமுனை, தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் மட்டுமே வர்த்தக நிறுவனங்கள் அதிகமிருந்த நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் சென்னை மாநகரம், அதற்கேற்ப பெருகிவிட்ட மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அண்மைக்காலமாக ஆங்காங்கே 'ஷாப்பிங் மால்', வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்கள் பெருநகர சென்னை முழுவதும் ஏகமாக வியாபித்து விட்டன. தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், எங்குபார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் காண முடிகிறது. மக்கள் கூட்டத்துக்கேற்ப, அவர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

அன்றாடம் பணி நிமித்தமாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்வோர், இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசலால் அனுபவிக்கும் சிரமங்கள் அதிகம் என்று கூறுகிறார் செங்கல்பட்டில் இருந்து, புறநகர் ரயிலில் அன்றாடம் எழும்பூர் வரை வந்து செல்லும் மோகன் என்ற பொறியாளர். "வழக்கமாக இரவு 7 மணிக்கு பணி நிறைவடையும். தொடர் விடுமுறையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு, ஒரு மணி நேரத்துக்கு முன்பே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாலும், இதுபோன்ற பண்டிகைக்கு முந்தைய நாட்களில், மக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியவில்லை. அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிற்கக்கூட முடியாத நிலையை பல நேரங்களில் அனுபவிக்கிறோம்" என்று அங்கலாய்த்தார்.


 'சரி, இந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்னதான் வழி?' என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.."நாங்களும் என்ன செய்வது? போக்குவரத்து போலீசாரை விடுப்பு எடுக்காமல், அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ப பணியமர்த்தியுள்ளோம். ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் புறப்படுவதைத் தவிர்க்க, இந்த ஆண்டு, ஆந்திரா, நெல்லூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் சானடோரியம் மற்றும் பூந்தமல்லி என இம்முறை பேருந்து நிறுத்தங்களை பிரித்துள்ளோம். இதனால், ஓரளவு வாகன நெரிசல் குறைந்துள்ளது" என்றார்.

பேருந்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பண்டிகையின்போது, ஊருக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையானவற்றை, பண்டிகைக்கு சில நாட்கள் முன்பே வாங்கிக் கொள்ள பழக வேண்டும். முடிந்தவரை, நான்குசக்கர வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால், ஓரளவு கூட்ட நெரிசல், போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்பி, நிம்மதியடையலாம்.

- சி.வெங்கட சேது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close