Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகாசியை நசுக்கும் சீனா ! #பட்டாசு கதை

இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 1922-ம் ஆண்டு வரை கொல்கத்தாவில்தான் தீப்பெட்டித் தொழில் நடந்து வந்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் சிவகாசியிலிருந்து பி. ஐயன்,ஏ. சண்முகம் போன்றவர்கள் தீப்பெட்டி தொழிலை கற்று வர கொல்கத்தா சென்றனர். சுமார் 6 ஆண்டு காலம் தீப்பெட்டித் தயாரிப்பு, பட்டாசுத் தயாரிப்பு போன்றவற்றை நுணுக்கமாகக் கற்றுக் கொண்டனர். தொடர்ந்து 1928-ம் ஆண்டு சிவகாசித் திரும்பிய இவர்கள் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்தனர். ஆனாலும் 1940-ம் ஆண்டுக்கு பிறகுதான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஓலை வெடித் தயாரிப்பில் தொடங்கி வாயில் வராத பெயர்களில் எல்லாம்  வெடி வகைகளை சிவகாசி தயாரித்து தள்ளத் தொட.ங்கியது.

தமிழகத்தைப்  பொறுத்தவரை பல நகரங்கள் ஏதாவது  ஒரு தொழிலில் சிறந்து விளங்கும். கோவை சிறு மோட்டார் தயாரிப்புக்கு முன்னணியில் உள்ள நகரம். கரூர் பேருந்து பாடி கட்டுவதில் புகழ் பெற்றது. திருப்பூர் பனியனுக்கு அந்த வகையில் பட்டாசுக்கு சிவகாசி. தென் மாவட்டங்களில் சிவகாசிக்கு சென்றால் 'பிழைத்துக் கொள்ளலாம் ' என்பது அப்போதும் இப்போதும் உள்ள நம்பிக்கை. குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேருக்கும் வேலை கிடைக்கும். வேலை இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதனால்தான் 'குட்டி ஜப்பான்' என்ற பெயரும் வந்தது. படிக்காத பெண்களுக்கு மாதத்துக்கு ஒரு குறிப்பிட்ட வருமானத்தை அளிப்பது தீப்பெட்டித்  தொழில். அதேபோல படித்த, படிக்காத கிராமத்து இளைஞர்களுக்கும் பட்டாசுத் தொழில் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது.

இந்தியாவின் பட்டாசுத் தொழில் விற்பனையில் இன்று சிவகாசிக்குத்தான் முதலிடம். நமது நாட்டின் 90 சதவீத பட்டாசுத் தேவையை சிவகாசிதான் நிறைவு செய்கிறது. கடுமையான உழைப்பை நம்பும் யார் வேண்டுமென்றாலும் இந்த தொழிலைத் தொடங்க முடியும். சில லட்சம் முதலீட்டில் கூட தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலையைத் தொடங்கலாம். சிவகாசியில் அப்படி 800க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமான பட்டாசு ஆலைகள் உள்ளன. அதில், 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பினைப் பெறுகின்றனர். மறைமுகமாக 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் தீபாவளிக்கு மட்டும்தான் பட்டாசுத் தேவை அதிகமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. தசரா, ஆயுதபூஜை, விநாயகர் சதூர்த்தி என ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டாசுத் தேவை அதிகரித்துள்ளது.  இதனால் ஆண்டு முழுவதுமே பட்டாசு உற்பத்தி முழு வீச்சாக நடந்து வருகிறது.

ஆனால், எந்த தொழில் எடுத்தாலும் அதற்கு சீன வடிவில் எதிர்ப்பு வந்து விடுமே. பட்டாசைக் கண்டுபிடித்த சீனா இதிலும் மூக்கை நுழைத்து சிவகாசியின் பொருளாதாரத்தையே நசுக்கத் தொடங்கியது. சீனாவில் விலை குறைவான பொட்டாசியம் குளோரைடை  மூலப்பொருளாக பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இது அதிக சத்தத்துடன் வெடிக்கும் தன்மையுடையது. விலையும் குறைவு. இதனால் மக்கள் சீன பட்டாசுப் பக்கம் சாயத் தொடங்கினர். பொட்டாசியம் குளோரைட் பயன்படுத்தி இந்தியாவில் பட்டாசுத் தயாரிக்கத் தடை உள்ளது. இந்தியாவில் சீன பட்டாசு விற்க தடை விதிக்கப்பட நிலையிலும் சட்டவிரோதமாக சீன பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. சிவகாசியில் பட்டாசுத் தொழில் நசுங்கத் தொடங்கியது. ஏகப்பட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்து வந்தனர். கிட்டத்தட்ட சிவகாசியின் பொருளாதாரமே நசிந்து விடும் நிலை.

இந்த சமயத்தில்தான் மத்திய தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாரமன், சிவகாசி பட்டாசு தொழிலுக்கு கைகொடுக்க முன்வந்தார். அனைத்து மாநிலங்களிலும் சீன பட்டாசுகளுக்கு எதிராக விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. துறைமுகங்களில் சீன பட்டாசு இறக்குமதி கண்காணிக்கப்பட்டது. கடந்த 2015-16ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 315 டன் சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டெல்லியில் 12 கோடி மதிப்பிலும் மும்பையில் 7.2 கோடி அளவுக்கும் சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சீன பட்டாசுகள் அடங்கிய கன்ட்டெய்னர்கள் வந்து கிடப்பதாக சிவகாசி பட்டாசுத் தொழில் அதிபர்கள் கணித்துள்ளனர். இது தவிர 2 ஆயிரம் கோடி அளவுக்கு இந்திய மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள்  புழங்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட சிவகாசியின் இந்திய சந்தை மதிப்பில் 35 சதவீதத்தை  சீன பட்டாசுகள் பிடித்துள்ளதாக  கூறப்படுகிறது.

சீன பட்டாசுகள் வைத்திருந்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதால், இப்போது, மக்கள் மத்தியிலும் ஓரளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் சீனாவுக்கு எதிரான சுதேசி விழிப்பு உணர்வு வந்துள்ளதால்,  சிவகாசி பட்டாசுத் தொழில் விரைவில் மறுமலற்சியை சந்திக்கும் என்று நம்புகின்றனர். தற்போது தீபாவளிப் பண்டிகையையொட்டி 1,500 கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்திருக்கிறது. ஆண்டுக்கு சிவகாசியின் டர்ன் ஓவர் 5 ஆயிரம் கோடி ஆகும்.

அது மட்டுமல்ல சிவகாசியில் மட்டும்  2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. அது தவிர இயந்திர தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் எல்லாம் 90 சதவீதம் பெண்கள்தான் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் பீடி சுற்றும் தொழில் போல சிவகாசி பெண்களுக்கு தீப்பெட்டித் தொழில்தான் பொருளாதாரம். தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, அட்டை, வஜ்ரம், பொட்டாசியம் குளோரைடு, குச்சி  போன்றவைகளின் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது. இப்படி தீப்பெட்டித் தொழிலும் நசிவையே சந்திக்கும் நிலையில் உள்ளது. ஆள் பற்றாக்குறையும் உள்ளது.

இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்திருந்தாலும் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  ஒரு ரூபாய் விலையில்தான் விற்கப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கி கடன், மின்கட்டண உயர்வு, லாரி வாடகை,  உயர்வான கூலி  போன்றவைகளாலும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இதுவெல்லாம் ஒருபுறம் என்றால், மெழுகு பெற வேண்டுமென்றால் லஞ்சம். வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலருக்கு லஞ்சம். வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம். தீயணைப்புத்துறையினருக்கு லஞ்சம். இப்படி ஒவ்வொரு துறைக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சக் கணக்கு தனி. அதையும் தாண்டி சிவகாசி உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கு மேலாக உயிரைப் பணயம் வைத்து வயிற்றுப்பாட்டை நிரப்பும் பரிதாப மக்கள் வாழும் பூமி இது... அதனால் சிவகாசி எழ வேண்டும்!

- எம். குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ