Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முத்துபாண்டியின் 'நவீன வயாகரா'! விபரீதத்தில் முடிந்த வில்லங்க வைத்தியம்

தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட வைத்தியர் உள்பட 4 பேர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலியான வைத்தியர் முத்துபாண்டி, மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து 'நவீன வயகாரா' என்ற மருந்து தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டம், தென்காசி மலையன்தெருவை சேர்ந்தவர் வைத்தியர் முத்துபாண்டி. தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இருளாண்டி, பாலசுப்பிரமணியன், சௌந்திரபாண்டியன். இவர்கள் அனைவரும் முத்துபாண்டி தயாரித்துக் கொடுத்த பச்சிலையை சாப்பிட்டு கடந்த 23-ம் தேதி பலியாகினர். இதில் வைத்தியர் முத்துபாண்டியும் இறந்தார். இதையடுத்து முத்துபாண்டி தயாரித்த மூலிகை மாதிரிகளை சேகரிக்க சித்த மருத்துவத் துறையில் உள்ள மருந்து பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்குள்ள மூலிகை பச்சிலையை சேகரித்து அவர்கள் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் முத்துபாண்டியிடம் வேறு யாரும் பச்சிலை மருந்து சாப்பிட்டார்களா என்றும் விசாரணையை போலீஸார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துபாண்டி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்துபாண்டிக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. இவர், தென்காசி அழகப்பபுரத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே குடியிருந்து வருகிறார். மாந்திரீகம் மற்றும் வைத்திய தொழிலை செய்து வந்தார். இதற்காக அடிக்கடி மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்று மூலிகைகளை சேகரித்து வருவதுண்டு. அப்போது வனத்துறையைச் சேர்ந்த சில ஊழியர்கள் முத்துபாண்டிக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களும் மூலிகை சேகரிப்பதில் முத்துபாண்டிக்கு உதவியுள்ளனர். 

கடையம் வனத்துறை சரகத்துக்குட்பட்ட அத்திரி வனப்பகுதிக்கு அடிக்கடி முத்துபாண்டி செல்வாராம். அடுத்து கேரள எல்லையில் உள்ள மேற்கரை வனப்பகுதியிலிருந்து முத்துபாண்டி கொண்டு வந்த மூலிகைகள் மூலம் பச்சிலை கசாயம் தயாரித்துள்ளார். அதை சாப்பிட்ட பிறகே 4 பேரும் பலியாகி இருக்கின்றனர். இதனால் மேற்கரை பகுதியில் உள்ள இரண்டு வனத்துறை ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மூலிகை மருந்து சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் வைத்தியர் முத்துபாண்டி மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலை திருட்டு வழக்கு இருக்கிறது. தென்காசி பகுதியை சேர்ந்த ஒருவருடைய மூன்றரை ஏக்கர் இடத்தில் உள்ள தோப்பை ஆக்கிரமித்த அவர், அங்கு காளிஅம்மன் சிலையை வைத்துள்ளார். திருட்டு சிலை என்று புகார் கொடுத்ததால் முத்துபாண்டியை கைது செய்தோம். முத்துபாண்டி, பள்ளிகூடத்துக்கே சென்றதில்லை என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவர் வைத்தியர் என்பதற்குரிய லைசென்சும் அவரிடம் இல்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் அழகப்பபுரம் கிராமத்தில் மருத்துவ முகாமை முத்துபாண்டி நடத்தியதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். அந்த முகாம்களுக்கு இளைஞர்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் இளைஞர்களை குறி வைத்தே முத்துபாண்டி மூலிகை மருந்து தயாரித்துள்ளார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "நெல்லை மாவட்டம் எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆண்மைக் குறைபாடுக்கு சிகிச்சை அளிப்பதாக ஏராளமான வைத்தியர்கள் உள்ளனர். அதுபோல முத்துபாண்டியும் ஆண்மைக் குறைபாடுக்கு சிகிச்சை அளித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் எதற்காக இளைஞர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினார் என்று விசாரித்து வருகிறோம். அந்த முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் குறித்த விவரங்களை சேகரித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தினால் வயாகரா போன்று ஏதாவது மூலிகை மருந்தை முத்துபாண்டி தயாரித்தாரா என்பது தெரியவரும். இதற்கிடையில் முத்துபாண்டி, மருந்து குடித்து மயங்கி கிடந்த விவரத்தை அவரது மகனுக்கு இரண்டு நபர்கள் சொல்லி இருக்கின்றனர். அந்த இரண்டு பேரும் முத்துபாண்டியிடம் சிஷியர்களாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சித்த மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், "நெல்லையில் உள்ள சித்த மருத்துவத்துறை குழு நேற்றே சம்பவ இடத்துக்குச் சென்று மூலிகை மாதிரிகளை சேகரித்து சென்னை அனுப்பி விட்டது. அந்த மாதிரிகள் இன்று சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. அந்த மாதிரிகளில் உள்ள மூலிகைகள் எந்த வகையானவை என்று கண்டறியப்படும். அடுத்து, ஏதாவது விஷம் கலந்துள்ளதா என்றும் சோதனை நடத்துவோம். பிறகு முத்துபாண்டி, பதிவு பெற்ற வைத்தியரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் முத்துபாண்டி, தயாரித்த மூலிகை மருந்தை அவர் சாப்பிட்ட பிறகு மற்றவர்களுக்கு கொடுத்துள்ளார். அந்தளவுக்கு கவனமாக செயல்பட்டுள்ள முத்துபாண்டியும் தற்போது உயிரோடு இல்லை. அவர் தயாரித்த மருந்தில் மீதியுள்ள மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கவனமாக மூலிகை மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி அதன் அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும். அதுவரை எதுவும் இந்த சம்பவத்தில் சொல்ல முடியாது. ஆண்மைக் குறைபாடுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உள்ளது. அதை சாப்பிட்டால் உயிர் இழப்பு ஏற்படாது. மருந்துடன் ஏதாவது விஷம் கலந்திருந்தால் மட்டுமே உயிர் இழப்பு ஏற்படும்" என்றனர். 

- எஸ்.மனோ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ