Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்தடுத்து கொல்லப்பட்ட 4 பெண்கள்... புதுக்கோட்டை திகில்!


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு சாட்சியாக உள்ளது.

மனைவியை கொன்ற கணவர்...

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை அடுத்த கொல்லுப்பட்டியில் கடந்த 19-ம் தேதி குளத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். விசாரணையில் அந்த பெண், திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பவானி என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அந்தப்பெண்ணின் கணவரே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது அம்பலமானது.
பவானிக்கும் செந்தில்குமாருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் நர்ஸாக வேலை பார்த்துள்ளார் பவானி. செந்தில்குமார் 7-வது முடித்துவிட்டு வெல்டராக பணியாற்றியுள்ளார். அதிகம் படித்த பவானி, திருமணத்துக்குப் பிறகு கணவரை மதிக்கவில்லையாம். கணவருடன் தாம்பத்தியம் நடத்த மறுத்ததோடு, அவரது திக்குவாய் பிரச்னையை கேலி செய்ய, கடுப்பான செந்தில், கடந்த 18-ம் தேதி குலதெய்வம் கோவிலுக்குப் போகலாம் என அழைத்துச் சென்று, மாத்தூர் கொல்லுப்பட்டி ஏரிக்கரையில் அருகே வைத்து கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு, பவானி வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது.

பெண்ணைக் கொன்ற இளைஞர்

இது தவிர புதுக்கோட்டை திருகோகர்ணம் கல்யாணராமபுரம் 2-வது தெருவில் குடியிருந்த அரிமளம் பஞ்சாயத்து யூனியன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரனின் மனைவி கிருத்திகாதேவி, தனது அடிக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கத்திக்குத்துக் காயத்தோடு மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். அதே மாடியில் குடியிருந்த அசன் முகமது என்பவர், கிருத்திகாதேவியை கொலை செய்தவர்கள், தடுக்கப்போன தன்னை டியூப் லைட்டால் குத்திவிட்டு ஓடிவிட்டதாக சொன்னார். விசாரணை நடத்திய திருக்கோகர்ணம் போலீசார், அசேன் முகமதுதான் கிருத்திகாதேவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதை மோப்பம் பிடித்தனர்.

கார்த்திகா தேவியின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் அசன்முகமது, வேலையில்லாததால், பணம் கேட்டு கிருத்திகாதேவியை மிரட்டி நகையை பறிக்க முயன்றிருக்கிறார். கார்த்திகா மறுப்புத் தெரிவிக்கவே, அவரை ஆத்திரத்தில் குத்தியுள்ளார். பக்கத்தில் கிடந்த டியூப் லைட்டால் தன்னைக் குத்திக்கொண்டு, நாடகமாயுள்ளார். இப்போது கார்த்திகா தேவியின் பிள்ளைகள் 3 பேர் ஆதரவின்றி நிற்பதுதான் கொடுமையின் உச்சம்.

கள்ளக் காதல் கொலை

இது மட்டுமல்லாமல் கடந்த 12–ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி வெள்ளையம்மாள், மாத்தூர்–ஆவூர் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வழக்கம்போல வேலைக்குச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் காலை மாத்தூர்–கும்பக்குடி அருகே உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக மாத்தூர் போலீசார், வெள்ளையம்மாள் வேலை செய்த கம்பெனியில் வெல்டராக வேலை செய்யும் கருப்பையா, சிங்காரவேலு மற்றும் பாண்டிச்செல்வி உள்ளிட்ட மூவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், சிங்காரவேலு பாண்டிச்செல்வி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிங்காரவேலு பாண்டிச்செல்வியிடம் நெருங்கிப் பழகினாராம். அதற்கு பாண்டிச்செல்வி, வெள்ளையம்மாள் உயிரோடு இருந்தால் உன்னோடு இருக்கமாட்டேன். அவளை கொன்றுவிட்டு வா என சொன்னராம். சிங்காரவேலுவும், அவனது நண்பன் கருப்பையாவும் சேர்ந்து வெள்ளையம்மாளை தீர்த்துக்கட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள். வெள்ளையம்மாளின் கணவர் ரவிச்சந்திரன் வெளிநாட்டில் இருப்பதால் அவரது 3 குழந்தைகளும் ஆதரவில்லாமல் வீதியில் நிற்கிறார்கள்.


தோட்டத்தில் நடந்த கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துத் துரையின் மனைவி திவ்யா என்பவர், ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23-ம் தேதி இரவு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தூங்கியவர், மறுநாள் காலை படுக்கையில் இல்லை. அடுத்து திவ்யாவை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடினர். ஆனால் பலனில்லை. இறுதியில் பக்கத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் திவ்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

எதற்காக திவ்யா கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணையை துவங்கியுள்ளார்கள். முதல்கட்ட விசாரணையில் திவ்யா உடல் கிடந்த இடத்தில் ஒரு செல்போன் கிடத்துள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

- சி.ய.ஆனந்தகுமார்.

படங்கள்: தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்