Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகாசி வெடி விபத்தை மறைக்கவா இந்த பஸ் பயணம்? கலெக்டரின் 'திடீர் எளிமை' கிளப்பும் சர்ச்சை

டந்த சில தினங்களுக்கு முன்னர் சிவகாசியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த அதிர்வும், சோகமும் இன்னும் விருதுநகர் மாவட்டங்களில் தீர்ந்தபாடில்லை. பாதுகாப்பு குறைபாடு பெரும் சர்ச்சையையும், மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடியும் கொடுத்திருந்தது. இந்த வழக்கை தன்னிச்சையாக விசாரணைக்காக எடுத்துக்கொண்ட மதுரை உயர்  நீதிமன்றக்கிளை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வழக்கு விசாரணையில் பங்கேற்கவில்லை. மாறாக மக்கள் குறைகளை கேட்பதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார் கலெக்டர் சிவஞானம்.

விருதுநகர் மாவட்ட கலெக்டராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றவர் சிவஞானம். இதுவரை இதுபோன்ற முயற்சிகளை இவர் எடுத்ததில்லை. கலெக்டரின் இந்த திடீர் எளிமைக்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் கலெக்டர் அலுவலக வட்டாரங்கள்.

"சிவகாசியில் நடந்த விபத்து மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் கலெக்டர் ஆஜராகி இருக்க வேண்டும். அதற்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலரை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தான் கலெக்டரின் பஸ் பயணம் நடந்திருக்கிறது. இதுவரை இவர் இப்படி பஸ் பயணம் மேற்கொண்டதில்லை. இதுபோன்ற பஸ் பயணம் பாசிட்டிவ் செய்தியை உருவாக்கும் என்பதால் இந்த பயணம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இது செய்தியாகும்போது வழக்கில் ஆஜராகதது ஏன் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியும் என்பதும் காரணமாக இருக்கலாம்," என்றனர் விவரமறிந்தவர்கள்.

இந்த எளிமையே நாடகம் என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்க... இது எளிமையே அல்ல என்ற புகாரும் மறுபுறம் எதிரொலித்தது. "காரியாபட்டி அருகே பாஞ்சால் கிராமத்துல நடக்குற குறைதீர் கூட்டத்துக்கு தான் பஸ்சுல போனாங்க. ஆனால் வழக்கமாக அந்த ரூட்ல ஓடுற பஸ்சுல கலெக்டர் போகலை. விருதுநகர்ல இருந்து சிவகாசி போகுற ஸ்பெஷல் பஸ்ல தான் கலெக்டர் போனார். ஏன்னா வழக்கமா அந்த ரூட்ல ஓடுற பஸ் ரொம்ப மோசமா இருக்கும்.

அதுவும் இவர் பஸ் ஸ்டாண்ட் போய் திடீர்னு எல்லாம் பஸ் ஏறலை. எல்லாம் முன்கூட்டியே திட்டம் போட்டது தான். கலெக்டருக்காக காலையில கலெக்டர் ஆபிஸுக்கு பஸ் வந்துடுச்சு. அங்க இருந்து தான் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பஸ்சுல போனாங்க. என்ன சில ஸ்டாப்கள்ல நின்னு பயணிகளை ஏத்திகிட்டு போச்சு அவ்வளவு தான். கலெக்டர் பக்கத்துல கூட யாரும் உட்கார முடியலை. அப்புறம் என்ன சார் இதுல எளிமை," என அதிரவைத்தார்கள். அவர்கள் சொன்னதை நிரூபிக்கும் வகையில், குறைதீர் கூட்டம் முடிந்த உடன் ஏசி ஜீப்பை வரவழைத்து அலுவலகம் திரும்பினார் கலெக்டர் சிவஞானம்.

இதுதொடர்பாக கலெக்டர் சிவஞானத்தை தொடர்பு கொண்டோம். "விருதுநகர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்கள் அதிகம் இருக்கின்றன. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு அதிகாரிகள் தனித்தனி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் செலவாகிறது. எனவே அரசு பஸ்சில் அனைவரும் பயணம் செய்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்குச் சென்றோம். இதனால் பயணிகளுக்கு எந்த சிரமும் இல்லை. போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. தொலை தூர கிராமங்களுக்கு இனிமேல் அரசு பஸ்சில் செல்லலாம் என்று முடிவு செய்து அது பற்றி பரிசீலித்து வருகிறோம்," என்று மட்டும் சொன்னார்.

ஒரு செய்தியை மறைக்க இன்னுமொரு செய்தி சொல்லப்படுகிறது.

- எம்.கார்த்தி

எடிட்டர் சாய்ஸ்