Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உதய் திட்டத்தில் சேர்ந்தால் மின்வாரியத்துக்கு நிதி நெருக்கடி ஏற்படும்: ராமதாஸ் எச்சரிக்கை

மத்திய அரசின் உதய் திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நிதி நெருக்கடியை தமிழக அரசு எவ்வாறு சமாளிக்கும் என்பது குறித்த விளக்க அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்சார வாரியங்களை சீரமைப்பதற்கான மத்திய அரசின் உதய் (Ujwal DISCOM Assurance Yojana-UDAY) திட்டத்தில் இணைய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதி நிலைமை மேம்படும் என்ற போதிலும், ஏற்கெனவே தாங்க முடியாத கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டு நிலவரப்படி மின்வாரியத்தின்  கடன் சுமை ரூ.81,782 கோடியாகும். மின்சார வாரியத்தின் வருவாயில் பெரும்பகுதி கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே போதுமானதாக இருப்பதால், வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க அடிக்கடி மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் உதய் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இத்திட்டத்தில் சேர்வதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்த நிலையில், அதில் இணைவதை தமிழக அரசு தாமதித்து வந்தது. இப்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் உதய் திட்டத்தில் சேர அரசு முடிவெடுத்துள்ளது.

உதய் திட்டத்தில் ஒரு மாநிலம் சேர்ந்தால், அம்மாநிலத்தின் மின்சார வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்வதற்காக 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியிருப்பது தமிழகத்துக்கு சாதகமான அம்சம் தான். எனினும், இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடனில் 75 விழுக்காட்டை இரு கட்டங்களில் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; மீதமுள்ள 25% கடனை சமாளிக்க கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்பது தான். மின்சார வாரியம் அதன் கடன்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தி வரும் நிலையில், தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் கடனுக்கு 8% வட்டி செலுத்தினால் போதுமானது. இதனால் மின்சார வாரியத்துக்கு லாபம் கிடைக்கும் நிலையில், அதன் கடனை சுமக்க வேண்டியிருப்பதுடன், அதற்கான கூடுதல் வட்டியையும் அரசே செலுத்த வேண்டும்.

மின்சார வாரியத்துக்கு மொத்தம் ரூ.81,782 கோடி கடன் இருக்கும் நிலையில் இரு கட்டங்களில் தலா ரூ.32,660 கோடி வீதம் ரூ.65,320 கோடி கடனை தமிழக அரசு ஏற்கும். மீதமுள்ள ரூ.16,462 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.2,52,431 கோடியாக உள்ளது. மின்வாரியத்தின் கடனையும் சேர்த்தால் மாநிலஅரசின் கடன் அடுத்த ஆண்டில் ரூ. 3,17,751 கோடியாக உயரும். அத்துடன் அடுத்த ஆண்டில் அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்குவதாக வைத்துக் கொண்டால் அரசின் கடன் மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக  அதிகரிக்கும். நிதி பொறுப்புடைமை பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின்படி, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டுக்கும், மொத்த கடன் சுமை 20 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தால் கடன் சுமை ரூ.2.80 லட்சம் கோடிக்கு குறைவாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.46,666 கோடிக்கு குறைவாகவும்  இருக்க வேண்டும். ஆனால், கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறையை இந்த அளவுக்குள் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. நிதி பொறுப்புடைமை பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் அதிகபட்ச வரம்பைத் தாண்டி தமிழகத்தின் கடன் சுமையும், நிதிப்பற்றாக்குறையும் அதிகரித்தால் தமிழகத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு  தேசிய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தமிழக அரசே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, மின்சார வாரியம் வாங்கிய கடன்களுக்காக ஆண்டு தோறும் ரூ.3000 கோடி அளவுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். மேலும், மின்சார வாரியத்துக்கு இனி ஏற்படும் இழப்புகளையும், கடன் பத்திரங்களுக்கான வட்டியையும்  தமிழக அரசே ஏற்க வேண்டும் என்பதால் சமாளிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்படக்கூடும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்காக உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்ந்ததையும் குறை கூற பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதேநேரத்தில், மின்வாரியக் கடன்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் நிதி நெருக்கடியை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது. வாங்கிய கடன்களை அரசு எவ்வாறு திருப்பிச் செலுத்தப்போகிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை நிதி நெருக்கடியை சமாளிக்க 2017-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக வரி உயர்வு, கட்டண உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தால் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும். எனவே, உதய் திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நிதி நெருக்கடியை தமிழக அரசு எவ்வாறு சமாளிக்கும்? என்பது குறித்த விளக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஒருவேளை நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாது என்றால், உதய் திட்டத்தில் சேருவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசால் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு தளர்த்துவது குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வெற்றி பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ