Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகம் எதிர்பார்ப்பதையே, மத்திய அரசு விரும்புவதையே... செய்கின்றன தமிழக அரசியல் கட்சிகள்...!

காவிரி பிரச்னை மீண்டும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த முறை எதிர்க்கட்சியான  தி.மு.க எப்படியும் இந்த விவகாரத்தில் ஸ்கோர் செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தியது. முதலில் விவசாய அமைப்புகளோடு ஆலோசனை நடத்தியவர்கள், அடுத்து அனைத்துக் கட்சி  கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். 

எதிர்க்கட்சியாக  இருக்கும் தி.மு.க-வின் அனைத்துக் கட்சி கூட்டம் எந்த அளவில் பலன்  அளிக்கும் என்ற கேள்வி விவசாய அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுந்தது. தி.மு.க தரப்பிலோ எப்படியும்  அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க அலுவலகத்திற்கும் கூட கடிதம் அனுப்பப்பட்டது. மக்கள் நலக்கூட்டணியினர் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று வைகோ அறிவித்தார். ஆனால் அந்த கூட்டணியில் இருந்த திருமாவளவன்  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மனநிலையில் இருந்தார். ஆனால் அவரையும் தடுத்துவிட்டார் வைகோ. இறுதியாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள இயலவில்லை என்று கடிதம் கொடுத்துவிட்டார். 

தி.மு.க வுடன் கூட்டணி வகிக்கும் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளோடு, கூட்டணியில் இல்லாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டன. தமிழக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் “காவிரி பங்கீட்டு பிரச்னை தமிழகத்தின் பொதுப்பிரச்னை என்பதால், ஓரிரு அரசியல் கட்சிகளை தவிர தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கி போராடத் துவங்கிவிட்டன. நாங்கள் கூட்டும் இந்த அனைத்துகட்சி கூட்டம் வெற்றி பெறக் கூடாது என சிலர்  ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு காவிரி பிரச்னைகளை விட தி.மு.க.மீது இருந்த காழ்ப்புணர்ச்சி தான் அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். அந்த நிலை இங்கு இல்லை என்பது வேதனை தான், ஆளுங்கட்சியிடம் நாம் பலமுறை காவிரி பிரச்னையில் பிரதமரை சந்திக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று இந்த கூட்டத்திற்கு வராதவர்களும், நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பேசினார்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், “நமது மாநிலத்தில் தான் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் கூட பிரிந்து நிற்கிறார்கள். நம் விவசாயிகளின் நிலையை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவின் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தது போல நமது சட்டமன்றத்திலும் தனித்தீர்மானம் கொண்டுவந்து, அதை வைத்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தால் தான் நமக்கான உரிமையை நாம் கைப்பற்ற முடியும்” என்றார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் பெரும்பாலானவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதையே தெரிவித்தார்கள்.”நாமாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால், அதற்கு வாய்ப்பு கிடைக்காது. ஆட்சியில் இருப்பவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம்,” என கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.

தி.மு.க தரப்பில் இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டால், அனைத்து கட்சி பிரதிநிதிகளோடு டெல்லி செல்லும் முடிவில் இருந்தார்கள்.ஆனால் காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகள் மட்டுமே பிரதான கட்சிகளாக பங்கேற்றதால் தி.மு.க.வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விவசாய அமைப்புகள் எதிர்பார்த்தன. ஆனால் அது நடக்கவில்லை. ”தி.மு.க இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது தேர்தல் ஸ்டன்ட் தான்.  ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டம் என்று அறிவித்து விட்டு அதை ஒரு பொது இடத்தில் நடத்தாமல் அவர்கள் கட்சி அலுவலகத்திலே நடத்தியது சரியா?,” என்ற  விமர்சனத்தை கூட்டத்திற்கு வராத கட்சிகள் தி.மு.க. மீது வைத்துள்ளனர். 

மொத்தமாக ஒரு மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் நான்கு  தீர்மானங்கள் நிறைவேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடத்தி அதில் காவிரி விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய அமைப்புகளோடு இணைந்து பிரதமரை சந்திக்க வேண்டும். அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட்டு, பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது, காவிரி டெல்டாவில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகளை பாதுகாக்க ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் காவிரி நீர் பங்கீடு குறித்து ஆராய வந்த மத்திய அரசின் குழு தமிழக விவசாயிகளின் உண்மைநிலையை வெளிப்படுத்தவில்லை என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக  பதிவு செய்வது” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தின் மூலமும், இந்த தீர்மானங்கள் மூலமும் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளே  வெளிப்படையாக பேசினார்கள்.  “காவிரி பிரச்னையை அரசியல் கடந்து பொதுப்பிரச்னையாக தமிழக அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். இதை தேர்தலுக்கும், அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்ளவும் கூடாது. அதே காரணத்தைச் சொல்லி பிரிந்தும் நிற்க கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது தான் நடந்து வருகிறது. காவிரி பிரச்னை பொதுப்பிரச்னை. தமிழகத்தின் நீராதாரப்பிரச்னை. இதில் கூட அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?. ஒரு புறம் இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி அக்கறையில்லாமல் இருந்து வருகிறது. மறுபுறம் எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றன. இப்போதைக்கு அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை தேவை.” என்றனர் விவசாயிகள்.

கர்நாடகாவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும், நீதிமன்றத்தை எதிர்த்து கை கோர்த்து நிற்கிறார்கள். இங்கே நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தக்கூட ஒன்று சேர முடியவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம் தான். கர்நாடகா நினைப்பதை, மத்திய அரசு எதிர்பார்ப்பதை தமிழக அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. ஆம் நம் ஒற்றுமையின்மை தான் அவர்களுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்- முத்துகுமார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ