Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியின் உடல்நிலை விவரம்!


 

தி.மு.க தலைவர் கருணாநிதி, அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்.  தமிழக அரசியலில் மட்டுமல்ல அகில இந்திய அரசியலில் ஒவ்வொரு அசைவையும் கவனித்து அதற்கு பதில் கொடுப்பார். பத்திரிக்கைகளில் அவரது அறிக்கை தினமும் இடம்பெறும். முரசொலியில் அவரது அறிக்கைத்தான் தினமும் தலைப்புச் செய்தியாக இருக்கும். ஆனால், கடந்த 15 நாட்களாக அவரிடம் இருந்து அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.

கோபாலபுரம் வீட்டில் மாடி அறையிலே  படுத்து இருக்கிறார் . ராஜாத்தி அம்மாள் வசிக்கும்  சி.ஐ.டி நகர், அறிவாலயம் என்று தினசரி சுழன்று வரும் கருணாநிதி, கடந்த 15 நாட்களாக கோபாலபுரம் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகிறார் .  வீட்டில் இருக்கும் தலைவரை காண கட்சி நிர்வாகிகள் வந்தால், அவர்களுக்கு சண்முகநாதன் தடை போட்டு விடுகிறார்.  கடந்த சில நாட்களாக காலையும் மாலையும், மருத்துவர்கள் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து செல்கின்றார்கள். இவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனதால்,  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல் அறிவாலயத்தில் நடந்த போது, அதற்கும் அவர் வரவில்லை.


வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் மரியாதை நிமித்தமாக கருணாநிதியிடம் ஆசி வாங்க விருப்பப்பட்டபோது அதையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.தி.மு.க தலைமையில் 25-ம் தேதி, அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டத்துக்கும் கருணாநிதி வரவில்லை. இந்நிலையில்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து, தி.மு.க தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதி  எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் ஒன்றால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். எனவே, பார்வையாளர்கள் தலைவரை நேரில் வந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

கருணாநிதிக்கு என்னாச்சு என்று தி.மு.க வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரால் சட்டை போட முடியவில்லை; கைகளிலும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. கை,கால்களில் லேசான வீக்கம் உள்ளது. எனவேதான் வெளியில் செல்லவில்லை. தினமும் காலை, மாலை என்று அவரது குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். தீபாவளிக்குள் வழக்கமான பணிகளை பார்க்க திரும்பிவிடுவார்’ என்று சொல்கிறார்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

எடிட்டர் சாய்ஸ்