Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் நலம்பெற வேண்டி நடந்த ஊர்வலத்தில் இன்னுமொரு உயிரிழப்பு !

சேலம் : திருவண்ணாமலையைத் தொடர்ந்து, சேலத்தில் முதல்வர் உடல்நலம் பெற வேண்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் அ.தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்பக் கோரி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பலவித வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பு பூஜையில் துவங்கி யாகம் வளர்ப்பது, பால் குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுவது என விதவிதமான வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெறக்கோரி  நடந்த பால்குட ஊர்வலத்தில் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் பலியானார். இந்த சோகமே அடங்குவதற்குள் மீண்டும் ஒரு உயிரிழப்பு சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற வேண்டி 5008 பால்குட ஊர்வலம் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோயிலில் இருந்து உத்தமசோழபுரம் சிவன் கோவில் வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.

ஊர்வலத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் துவங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவர் மயங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆனால் பால்குட ஊர்வலம் தொடர்ந்து நடந்தது.

முதல்வர் நலம் பெற வேண்டி நடக்கும் ஊர்வலங்கள் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- வீ.கே.ரமேஷ்,

படங்கள்: எம்.விஜயகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ