Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தீபாவளி குமுறல்!


தீபாவளி போனஸ் கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 787 வாகனங்கள் 108 அவசர கால சேவையாற்றி வருகின்றன. இவற்றில், சென்னையில் மட்டும் 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 108 அவசர கால சேவையில், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழகமெங்கும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தீபாவளியின்போது ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2015-ல் ரூ.5 ஆயிரத்து 300 வழங்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டும் ரூ. 5 ஆயிரத்து 300 ஊக்கத்தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனஸ் தொகை, ஒருவரின் அடிப்படை ஊதியத்தில் இருந்து சராசரியாக 10 சதவீதம் ஆகும். ஆனாலும், ஊழியர்களில் சிலர் அதிக ஊக்கத்தொகை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மேலும், 25 சதவீதம் போனஸ் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தீபாவளியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதனால், வேலை நிறுத்தத்தை கைவிடக் கோரி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அக்டோபர் 28-ம் தேதி இரவு 8 முதல் 29-ம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி முதல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

108 அவசரக் கால சேவையை GVK EMRI நிறுவனம், தமிழ்நாடு அரசோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரசு - தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது. மேலும், 108 அவசரக் கால சேவையானது, லாப நோக்கின்றி சேவை நோக்கத்துக்காக மட்டுமே இயங்கி வருகிறது. அதனால், 'போனஸ் சட்ட விதிமுறைகளின் வரையறைக்குள்' வராத போதிலும், இந்த நிறுவனம் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கி வருவதாகவும் GVK EMRI நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ரா.வளன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ