Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் அகராதியின் கர்த்தாக்களில் ஒருவர்... தமிழறிஞர் பேராசிரியர் து.மூர்த்தி மறைவு!


வேலூரைச் சேர்ந்த தமிழறிஞரும் பேராசிரியருமான து.மூர்த்தி உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையில் தமிழ் பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியராக 27 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் கடந்த திங்களன்று இரவு உயிரிழந்தார்.  65 வயதான பேராசிரியர் மூர்த்தி, கடந்த சில மாதங்களாக குடல் புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த 23-ம் தேதி அலிகர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு,  அவரது குடலில் இருந்த புற்று நோயால் வந்த கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்தச் சூழலில் அவரது கிட்னியில்  குறைபாடு ஏற்பட்டது. எனவே அவரது உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக  அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  ஆனால், உடனடியாக அவரைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. 6 மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டதால் உடல் நிலை மோசமடைந்து 24-ம் தேதி இரவு உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் தாமதத்துக்கான காரணம் குறித்து அலிகர் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மூர்த்தியின் உடல் வேலூர் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் வேலூர் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவரது மரணம் அறிந்து மூர்த்தியின் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். மூர்த்தியுடன் பழகிய சிலர் அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நேர்மையான மனிதர்...

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையின் முன்னாள் தலைவர் தெய்வ சுந்தரம் நயினார் தமது முகநூல் பதிவில், "பேராசிரியர் து. மூர்த்தி தனித்துவம் வாய்ந்த மனிதர். சமூக உணர்வுடைய தோழர். முற்போக்கு எழுத்தாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரகராதித் திட்டத்தில்  பணிபுரிந்தார். சில காரணங்களால் அவரது பதவி பறிக்கப்பட்டது. அவரது நேர்மையின் காரணமாகப் பழிவாங்கப்பட்டார்! பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்குள்ள, தொழிலாளிகளுக்காகப் போராடிய காரணத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துத் தஞ்சாவூரில் அன்று பல முனைகளில் முழக்கங்கள் ஒலித்தன. ஆனால் ஜனநாயகம் அற்ற அன்றைய அந்தப் பல்கலைக்கழகத்தின் காதுகள் மூடிக்கொண்டன. பின்னர், பல இன்னல்களுக்குப் பிறகு அலிகார் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

பெரியார் பற்றாளர். ஐயா ஆனைமுத்து அவர்களின் இயக்கத்துக்குத் துணையாக நின்று செயல்பட்டவர். தமிழகத்தில் 80-களில் தமிழகத்தின் மூன்றாவது அணியின் செயல்பாடுகளுக்குத் துணைபுரிந்தவர். மூன்றாம் அணியினரின் இலக்கிய, பண்பாட்டு இயக்கங்களில் பங்கேற்றவர்.ஈழத் தமிழர்களின் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் உதவிபுரிந்தவர்.

அவரது பாதிப்புகளுக்கு ஒரே காரணம். அவரது வெளிப்படையான சமூக உணர்வும் செயல்பாடுகளுமே ஆகும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு மனிதர். கொள்கைகளில் சமரசம் செய்யாதவர். மொத்தத்தில் ஒரு நேர்மையான மனிதர்! அதுபோன்ற மனிதர்களைக் காண்பது அரிது. அவரது எதிர்பாராத மறைவு... என்னைத் திணறவைக்கிறது! என் உயிரைக் காப்பாற்றி, இன்று நான் நடமாடுவதற்கு வழிவகுத்த மூர்த்தி மறைந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை!

சிறந்த மேடைப்பேச்சாளர்

பேராசிரியர் அ.மார்க்ஸ், "நல்ல மனிதர். வட ஆற்காடு மாவட்டத்தில் எம்.எல். இயக்கத்தில் தொடர்பில் இருந்தவர். பேராசிரியர் பணிக்கு வந்த பின்னர் இயக்க ரீதியான செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டார். அவர் தஞ்சைப் பல்கலைக்கழத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் சிறிது காலம் வேலையின்றி இருந்தார். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளராக இருந்தார். அவருடைய மேடைப் பேச்சில் தேவையில்லாத அடுக்கு மொழிகள் இருக்காது. ஆனால், இலக்கண சுத்தமாகப் பேசுவார். சாதாரணமாகப் பேசும் போதே இலக்கணச் சுத்தமாக பேசும் வழக்கம் உடையவர்"

இனிமையான மனிதர்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னாள் பேராசிரியர் ராமசுந்தரம், " கிரியா தற்கால தமிழ் அகராதியில் பணியாற்றினார். அப்போது நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் புலமை பெற்று விளங்கியவர். போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இந்தியவியல் துறையில் தமிழ் ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு மாணவர்களிடம் கவியரங்குகள் நடத்தி இருக்கிறார். போலந்து நாட்டின் இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருந்தார். தமிழ் இலக்கியங்களை போலந்து நாட்டின் மொழியில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டார். பெரியார், மார்க்சியம் இரண்டிலும் ஈடுபாடு உள்ளவர். அகங்காரம் இல்லாதவர், இனிமையானவர்"

-கே.பாலசுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close