Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்!

 

 

 

டிகர் சங்கத்தில் நடந்துவரும் களேபரங்கள் ஒரு நிஜ சினிமாவை விஞ்சி பல நுாறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமாக பல பாகங்களில் நடப்பதுதான் வேடிக்கை. முதல் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் பாண்டவர் அணி என அளப்பரையை தந்தன. இரண்டாம் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் புதிய நிர்வாகம் என ரவுண்ட் கட்டியது. மூன்றாவது பாகத்தில் புதிய நிர்வாகம் வெர்சஸ் வாராகி என்ற தனிநபர் என பட்டையை கிளப்பியது. இப்போது நான்காம் பாகத்தில் அதிரடி திருப்பம்...நிர்வாகிகள் மத்தியிலேயே புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

கலைவாணர், இயக்குநர் கே.சுப்ரமணியம், எம்.ஜி.ஆர்  உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் அவதுாறுகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருவது மூத்த உறுப்பினர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோடிகளில் வருமானம் ஈட்டும் நடிகர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் சில லட்சங்களில் மோசடி புகார்கள் எழுந்து அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டிருப்பது அவர்களை வருத்தம் கொள்ள வைத்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த உறுப்பினர் ஒருவர், ' தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது முழுக்க முழுக்க நலிந்த உறுப்பினர்களின் நலனுக்காக அன்றைய மூத்த கலைஞர்களால் உருவானது. ஆரம்ப நாட்களில் இதன் நிர்வாகிகளான புகழ்பெற்ற கலைஞர்கள், தங்கள் சக கலைஞர்களின் நலனுக்காக சங்க நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் காலத்தில் கலைஞர்களின் நலனில் நிஜமாகவே பங்கெடுத்தது சங்கம். ஆனால் பின்னாளில் நடிகர் சங்கம் தனிப்பட்ட சிலரின் விளம்பரங்களுக்காக பயன்பட ஆரம்பித்தது. தொடர்ந்து தாங்களே தேர்வானதால் ஒருகட்டத்தில் எதேச்சதிகார போக்கில் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். அதன் பின்னர்தான் சங்கம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரின் கட்டுப்பாட்டில் சென்றது. இதுதான் பல தவறுகளுக்கு வித்திட்டது.

சரியான கணக்கு வழக்குகள் பராமரிக்காதது, சங்க சொத்துக்களை தனிப்பட்ட சிலரின் லாபத்துக்காக கைமாற்றியது சங்க விஷயங்களில் குறிப்பிட்ட சிலரே முடிவெடுப்பது என எல்லை மீறிப் போனநிலையில்தான் விஷால் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்கள் இதை சங்க கூட்டங்களில் வெளிப்படையாக கேட்கத் துவங்கினர். அதன்பின் விஷால் தலைமையில் முந்தைய நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த நடிகர்கள் பாண்டவர் அணி என ஒன்று திரண்டனர். அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் விஷால் அணி சங்கத்தை கைப்பற்றியது.

ஆனால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் சரத் அணி மீது கூறப்பட்ட அதே ஊழல் புகார்களை விஷால் அணி சந்திக்க நேர்ந்தது. இந்த புகார்களை எழுப்பியதும் யாரோ அல்ல; தேர்தலில் விஷால் அணியுடன் தோளோடு தோள் நின்ற ஒருவர்தான். பெரிய நடிகர், நேர்மையானவர், வெளிப்படையானவர் என விஷாலுக்கு எத்தனை தகுதி இருந்தாலும் நிர்வாகி என்ற முறையில் அவர் சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டவர். உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜியே கூட சங்க விதிமுறைகளை மீறி நடந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாக நிர்வாக விஷயங்கள் தனிப்பட்ட முறையிலேயே முடிவெடுக்கப்படுகிறது.

பொதுவாக நிர்வாக விஷயங்களை செயற்குழு முடிவெடுத்து அதை பொதுக்குழுவின் அனுமதியின் பேரிலேயே செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே நிர்வாக நடைமுறை சிக்கல் கருதி ரெக்டிபிகேஷன் முறையில் மேற்கொள்ளப்படும். அதாவது  நடைமுறை சிக்கலைத் தவிர்க்க முடிவை செயல்படுத்திய பின் அதை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது. இது எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. ஆனால் புதிய நிர்வாகத்தில் எல்லாமே ரெக்டிபிகேஷன் என்றாகி விட்டது.

எந்த முடிவானாலும் அதில் பாதி தூரத்தை கடந்துவிட்ட பின்னரே செயற்குழுவுக்கும் பொதுக்குழுவுக்கும் சொல்வது என்றாகி விட்டது. எல்லா விஷயங்களையும் ஓரிருவரே முடிவு செய்கின்றனர்.

இப்போதும்கூட கணக்கு வழக்குகளை இணையதளத்தில் வெளியிட்டதிலும் இவர்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை. நட்சத்திர கிரிக்கெட்போட்டி நடத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக சொன்னதால்தான் கணக்கு வழக்குகளை இணையத்தில் போட்டுள்ளனர். ஆனால் அந்த போட்டியை நடத்தியது ட்ரஸ்ட் கமிட்டிதான், அவர்களிடம் ஒருவார்த்தையும் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லை. இப்படி தன்னிச்சையான முடிவெடுப்பதையே ஆரம்பத்திலிருந்து செய்து வருகிறார்கள் நிர்வாகிகள். நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளான நடிகர்கள்தான் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் சம்பளத்துக்குப் பணியாற்றும் ஒரு சிலர் நிர்வாகிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்து சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள். நேர்மையாக இருப்பது மட்டுமே தகுதியில்லை என்பதை விஷால் எப்போது புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை.
 

சங்கத்தின் முன் பிரச்னை எழுப்பியதாகக் கூறி, 20 நலிந்த துணை நடிகர்களை சஸ்பெண்ட் செய்த புதிய நிர்வாகம், அவர்களை நிரந்தரமாக சங்கத்தில் இருந்தே நீக்கும் வேலையை செய்கிறது. தங்களது சம்பள பிரச்னையை பேசியது தவறா...சங்கத்தில் பேச வேண்டியதை மீடியா முன் பேசியதுதான் அவர்கள் சஸ்பெண்ட்டுக்கு காரணமாக சொல்பவர்கள் கடந்த தேர்தலின்போது சங்கத்தைப் பற்றி மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் விஷால் பற்றியே மீடியாவில் பந்திவைத்த  ராதிகாவை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை. அதற்கு துணிவிருக்கிறதா அவர்களிடம்?...காரணம் அவரை சஸ்பெண்ட் செய்தால் எல்லா திசைகளிலிருந்தும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். ராதிகாவுக்கு ஒரு நீதி, நலிந்த கலைஞர்களுக்கு ஒரு நீதியா...? குட்டிபத்மினி, எஸ்.வி. சேகர் உள்ளிட்ட சிலர்தான் அந்த நடிகர்களுக்காக போராடி வருகின்றனர்.

பலரது உழைப்பில் கட்டி எழுப்பப்பட்ட நடிகர் சங்கத்தை விஷால் தரப்பு ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. முந்தைய நிர்வாகத்தினை தோற்கடித்தது வெறும் 146 வாக்குகளில்தான் என்பதை புதிய நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். ‘புதிய மொந்தை பழைய கள்‘ என்பதுபோல், முந்தைய நிர்வாகத்தின் தவறுகளையே இவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டனர். இப்படி அதிருப்திகளை பெருக்கிக் கொண்டே போனால் மீண்டும் பழைய கதைதான் நடக்கும் என எச்சரிக்கும் விதமாக பேசி முடித்தார் அந்த மூத்த உறுப்பினர்.

நலிந்த கலைஞர்களை மீண்டும் சேர்க்க முயற்சித்து வருவதாக சொல்லப்படும் எஸ்.வி சேகரை தொடர்பு கொண்டோம்.“ நுாறு சதவீதம் எதுவுமே சரியாக நடக்காது. நடக்கும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. சங்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இளம் தலைமுறை நடிகர்களுக்கு நிர்வாக விஷயங்களில் நடைமுறை அனுபவம் இல்லாததால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன... அவ்வளவுதான். இந்த 20 பேரை நானே சந்தித்து விசாரித்தேன். சங்க அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கும் தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறினார்கள். சங்கத்தைப் பற்றி புகார் கூறிவரும் வாராகி என்பவர் அன்றைய தினம் அங்கு வந்ததால் நிர்வாகிகளை சந்திக்க வந்த இவர்களும் அவர் தலைமையில் வந்ததுபோல் ஒரு பிம்பம் உருவாகி விட்டது. இதுதான் உண்மை.

நடிகர்களுக்கான சங்கம் என்றாலும் இது நலிந்த கலைஞர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. ரஜினிக்கோ, கமலுக்கோ ஒரு பிரச்னை என்றால் அதை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் நலிந்த கலைஞர்களுக்கு சங்கம்தான் ஒரே தீர்வு. தங்கள் சம்பளத்தைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லையா...தவிர தங்கள் தவறுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டபிறகு மன்னிப்பதுதானே முறை...

மன்னிப்பதற்குத்தான் சங்கம்; தண்டிப்பதற்கு அல்ல!... இதுபற்றி விஷாலிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறேன். நல்ல முடிவெடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். சங்கத்தின் தீபாவளி பரிசும் அவர்களுக்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது. சங்கம் செய்யவில்லையென்றால் நானும் இன்னும் சில மூத்த கலைஞர்களும் இணைந்து அவர்களுக்கு தீபாவளிப் பரிசு தர முடிவெடுத்துள்ளோம்” என்றார்.  

சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான நடிகர் ஸ்ரீமன், “நடிகர் சங்கத்தில் மற்றவர்கள் சொல்கிறபடி எந்த பிரச்னையும் இல்லை. எல்லா நடவடிக்கையும் வெளிப்படைத்தன்மையுடன்தான் நடக்கிறது. கணக்கு வழக்குகளுக்கான எல்லா ஆதாரங்களும் இருப்பதால்தான் சட்டப்படி எல்லா புகார்களையும் சந்தித்து வருகிறோம். ஊழல் புகார் சொல்பவர்கள் அதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் உரிய இடத்தில் கொடுக்கட்டும். மீடியாவிடம் இதுபற்றி பேசுவதிலிருந்தே அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியும். ஒரு சங்கத்தின் வரவு- செலவு கணக்குகளை இணையதளத்தில் வெளியிடும் அளவுக்கு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விரிவாக இதுபற்றி பேசமுடியாது” என்றார்.

நடிகர் சங்க களேபரங்கள் குறித்து பேச விஷாலை தொடர்பு கொண்டோம். “வாராகி என்பவர் வீண் விளம்பரத்துக்காக இப்படி செய்து வருகிறார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சொல்லவேண்டியவற்றை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்வோம். தனிப்பட்ட நபர்களிடம் பேசிக்கொண்டிருப்பதில் தேவையற்ற வதந்திகள்தான் பெருகிக்கொண்டிருக்கின்றன. விஷாலைப் பொறுத்தவரை சங்கத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவே விரும்புகிறார். நீங்கள் குறிப்பிட்ட 20 பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து மற்ற நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. செயற்குழு, பொதுக்குழுவின் முன்வைத்துதான் அதில் ஒரு முடிவெடுக்கமுடியும்.
 

இளம் தலைமுறை என்றாலும் மூத்த நிர்வாகிகளின் அறிவுரையில் சங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இணையதளத்தில் வரவு- செலவு கணக்குகளை பதிவிட்டது என்பது இன்றோ, நேற்றோ எடுத்த முடிவல்ல. போட்டியை அறிவித்த நாளிலிருந்து வெளிப்படையாகவே நிர்வாகிகள் சொல்லிவந்த விஷயம்தான். அதனால் அதை செயற்குழு பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இதில் எந்த உள்குத்தும் கிடையாது. எல்லாம் நேர்மையான  பரிவர்த்தனை என்பதால்தான் இதை துணிச்சலாக செய்ய முடிகிறது. வெளிப்படைத்தன்மைக்காக எடுத்த ஒரு நடவடிக்கையை பாராட்டுவதை விட்டு குற்றம்குறை சொன்னால் குறை சொல்பவர்களின் பார்வையில் குறை இருப்பதாகத்தான் அர்த்தம். நடிகர் சங்க விவகாரங்களில் உறுப்பினர்கள் யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் முறையாக கடிதம் கொடுத்து கேட்டால் அதை தெளிவுபடுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம்” என்றார் விஷால் சார்பாக நம்மிடம் பேசிய அவருக்கு நெருக்கமான ஒருவர்.

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் சீதை’ என்பார்கள். சீதைக் காவியத்தை மக்களுக்கு வெள்ளித் திரையில் காட்டிய திரையுலக கலைஞர்களின் சங்கமும் அப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பும்!

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close