Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருமந்தி, மலைஉடும்பு, மயில் எண்ணெய்! 'அதற்கு'த்தான் இதெல்லாமா?

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கருமந்தியை வேட்டையாடி, அதை எய்ட்ஸ் மருந்தாக பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் போலி வைத்தியர்கள் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியே தெரிந்துள்ளது. இவர்கள் அளிக்கும் சிகிச்சைகளும், அதற்காக கடைப்பிடிக்கும் முறைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.

இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத வைத்தியர் ஒருவர் கூறுகையில், "மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. அந்த மூலிகைகளை சேகரித்து லைசென்ஸ் பெற்ற வைத்தியர்கள், நாட்டு மருந்துகளை தயாரிக்கின்றனர். அதை சாப்பிடும்போது நோய்கள் குணமாகுவதுடன் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. இதனால் இந்த மருத்துவ முறையை கேள்விப்பட்டு எங்களிடம் பலர் சிகிச்சை பெறுகின்றனர். அதற்கு மக்கள் தாங்களாக கொடுக்கும் தட்சணையை பெற்றுக் கொள்கிறோம்.

இதற்காக இங்கு பல வைத்தியசாலைகள் உள்ளன. அதில் சில வைத்தியசாலைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் புற்றீசல்கள் போல வைத்தியர்கள் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளனர். அவர்களை நம்பி சென்று மருந்து சாப்பிட்டவர்களுக்குத்தான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுபோல முத்துபாண்டி கொடுத்த மருந்தை சாப்பிட்ட 4 பேர் பலியாகியுள்ளனர். வைத்தியர்கள் என்ற போர்வையில் உலாவரும் போலி நபர்களால் முறையாக லைசென்ஸ் பெறும் வைத்தியர்களுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது. இத்தகைய போலி வைத்தியர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கருமந்தியை (குரங்கு) வேட்டையாடி, அதன் ரத்தத்தை எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையின் பேரில் குடிக்கச் சொல்லுகிறார்கள். அடுத்து, சாரைப்பாம்பை கொன்று அதிலிருந்து கொழுப்பை எடுத்து உடல் வீக்கம், வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர். மயிலை வேட்டையாடி அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கின்றனர். அந்த எண்ணெயை உடல் வலிக்கு மருந்தாக கொடுக்கின்றனர். மலை வவ்வால், ஆஸ்துமா நோய்க்கும், ஆண்மைக் குறைபாடுக்கு மண் உடும்பின் கறியை (மலை உடும்பு) சமைத்து கொடுக்கிறார்கள். இதுபோன்ற சிகிச்சைகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மறைமுகமாக நடக்கிறது" என்றார்.

இதுகுறித்து வனத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வனவிலங்கு வேட்டையாடுவதாக சொல்லப்படுவது உண்மையல்ல. இங்குள்ள வனவிலங்குகள் பாதுகாப்பாக உள்ளன. அவ்வாறு வேட்டையாடுபவர்கள் மீதும் வனத்துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற நம்பிக்கை கிராம மக்களிடையே அதிகம் நிலவுகிறது" என்றனர். 

இதுகுறித்து சித்த மருத்துவ அலுவலர் மாணிக்கத்தாய் கூறுகையில், "குறிப்பிட்ட சில நோய்களுக்கு வனவிலங்குகளை மருந்தாக சாப்பிடும் பழக்கம் மக்களிடையே இருக்கிறது. இது தவறானது. ஆராய்ச்சிபூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. எனவே மருந்துக்காக வனவிலங்குகளை சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். படித்த சித்த மருத்துவர்களிடமே மக்கள் சிகிச்சை பெற வேண்டும்" என்றார். 

எஸ்.மனோ

எடிட்டர் சாய்ஸ்

MUST READ