Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரைம் ரேட்டைக் கண்டுகொள்ளாத காவல்துறை! அப்போலோவால் 'அடங்கிப்' போன மர்மம்

முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர, மாநில உளவு போலீஸாரும் பணியில் ஈடுபட்டுள்ளதால் வழக்கமான அறிக்கைகள் அரசுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், அனுமதிக்கப்பட்டு இன்றோடு 35 நாட்களாகின்றன. அப்போலோ மருத்துவமனையே மினி தலைமைச் செயலகமாகவும், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாகவும் மாறி விட்டது. மருத்துவமனை வாசலில் அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர். அடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தினமும் முதல்வரை சந்திக்க வந்தவண்ணம் உள்ளனர். இதையொட்டி அப்போலோ மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் இரண்டு கூடுதல் கமிஷனர்கள், 3 இணை கமிஷனர்கள், 7 துணை கமிஷனர்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இதுதவிர மாநில உளவுதுறை போலீஸார் (எஸ்.பி.சி.ஐ.டி) ஒரு ஷிப்ட்டுக்கு 30 பேர் உள்ளனர். அடுத்து மாநகர உளவு போலீஸார் (ஐ.எஸ்) 30 பேர் பணியில் உள்ளனர். ஒரு ஷிப்ட்டுக்கு 30 பேர் என்பதால் மாநகர போலீஸ் நிலைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை போலீஸார் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ளாததால் மாநகர போலீசுக்கும், தமிழக காவல்துறைக்கும் உடனுக்குடன் ரிப்போர்ட்கள் வருவதில்லை. இதனால் போலீஸ் நிலையங்களில் கல்லா கட்டும் பணிகள் ஜோராக நடப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

உளவுத்துறை கண்காணிப்பு சரிவர இல்லாததால் சென்னை மாநகர போலீஸில் பல்வேறு பஞ்சாயத்துக்கள் நாள்தோறும் நடக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள். கானத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கூட தெருவிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்த கழிவுநீர் லாரி, அங்குள்ள போலீஸ் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு இருந்த மின்கம்பத்தை இடித்துத்தள்ளியது. இதில் அந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் ஏனோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம், லாரியின் உரிமையாளர் தி.மு.க. பிரமுகர். அதோடு, அவர், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் பேரம் பேசி பிரச்னைக்குத் தீர்வு கண்டுள்ளனர் போலீஸார். பெயருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்து, அடையாறு சரகத்தில் பூட்டப்பட்டதாக கணக்குகாட்டிய ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கமிஷனர் ஜார்ஜ், நேரடி கண்காணிப்பில் அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது, அந்த சரக போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் நடத்தப்பட்டது. கமிஷனர் நடவடிக்கை எடுத்தப்பிறகு அந்த உயரதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த சரகத்தில் குட்கா கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையை மட்டும் மூடச்சொல்லி போலீஸ் உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணம் மாமூல் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

இதுதவிர சென்னை மாநகரில் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான போக்குவரத்து போலீஸார் கிரீம்ஸ் சாலை பணியில் ஈடுபட்டுள்ளதால் ஒருவழிபாதை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸார் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக தினமும் சுமார் 400 முதல் 500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுதவிர தனியார் செக்யூரிட்டிகளும் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போலோ நுழைவுவாயில் முன்புதான் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மாநகர உளவுப்பிரிவு போலீஸார், முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின்  வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றனர். 

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close