Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பி.எஸ்ஸை ஆட்டிப் படைக்கிறாரா வைத்தி?!  -அமைச்சர் பங்களாவைவிட்டு நகராத பின்னணி 

முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் வசம் இருந்தாலும், அமைச்சர்களுக்குள் நிலவும் கோஷ்டி அரசியல் உச்சகட்டத்தில் இருக்கிறது. ' டெல்லிக்குச் செல்வதைவிடவும், அமைச்சர் பங்களாவில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார் வைத்திலிங்கம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா 36 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் திரும்பி வரும் வகையில் அவருடைய அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதையடுத்து, முதல்வரின் துறைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். " தலைமைச் செயலகப் பணிகளில் என்ன சொல்லப்படுகிறதோ, அதை மட்டுமே செய்கிறார் ஓ.பி.எஸ். மீண்டும் சசிகலாவின் குட்புக்கில் இடம்பெறுவதற்குக் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அப்போலோ மருத்துவமனையில் காலையிலும் மாலையிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். முன்பைவிட கூடுதல் பணிவைக் காட்டி வருகிறார். கட்சிக்காரர்கள் தொடர்பு கொண்டு பேசினாலும், சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறார். கடந்தவாரத்தில்கூட, ' அம்மா வைத்திலிங்கம் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். பார்க்கலாமா?' என்று கேட்கும் அளவுக்கு, பழைய பணிவுக்குத் திரும்ப முயற்சிக்கிறார் ஓ.பி.எஸ். அதேவேளையில், கட்சிக்குள் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வைத்திலிங்கத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" மன்னார்குடியின் முழு ஆசீர்வாதம் இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் நடைபெறும் விஷயங்களை தீவிரமாக கவனித்து வருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட கிரீன்வேஸ் சாலை பங்களாவில்தான் இன்றும் குடியிருக்கிறார். அந்த வீட்டைக் காலி செய்ய அவர் விரும்பவில்லை. அதிகாரிகள் சென்று கேட்டாலும்கூட, 'எல்லாம் எனக்குத் தெரியும். போய் வேலையைப் பாருங்க' எனத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இதனால், அங்கு குடியிருக்க வேண்டிய வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரும்பாக்கத்தில் மாத வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 'தனக்கு அரசு பங்களா இன்னமும் வழங்கப்படவில்லை' என அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லியிருக்கிறார். அவரும், 'அமைதியாக இருங்கள்' எனச் சொல்லிவிட்டார். அரசு பங்களாவில் குடியிருக்காத அமைச்சராக வலம் வருகிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். வைத்திலிங்கத்தை நெருங்கவே அதிகாரிகள் பயப்படுகின்றனர். கோட்டைக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் வைத்தியின் கவனத்துக்கு வந்துவிடுகிறது. 

அவர் மீது மன்னார்குடி உறவுகளுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ' தான் இன்னும் அமைச்சர்தான்' என்ற நினைப்பிலேயே வலம் வருகிறார். இதனால், சக அமைச்சர்களே வைத்தியைக் கண்டால் அலறுகிறார்கள். தஞ்சை இடைத்தேர்தலில் சீட் வாங்கிவிட்டு, மீண்டும் அமைச்சராக வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்களை போட்டியிடுமாறு தலைமை அறிவித்துவிட்டது. தற்போது இடைத்தேர்தல் பணிக்கான தஞ்சை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் பணிகளைக் கவனிப்பதைவிடவும், கோட்டை விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதையே அவர் விரும்புகிறார். ' சின்னம்மா குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சிகாலத்தில் நடந்த சில விஷயங்களுக்குப் பின்னால் வைத்தி இருக்கிறார் என்பதால், அவரை ஒதுக்கியே வைத்துள்ளனர் சசிகலா தரப்பினர். ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறார்" என்கிறார். 

"கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உதவி செய்வதில் வைத்திலிங்கம் போல் ஒருவரைப் பார்க்க முடியாது. அவரிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டுத்தான் அனுப்புவார். இதை மற்ற அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது. தற்போது கட்சிக்குள் இறுக்கமான ஒரு சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் கட்சிக்குள் தீவிரமாக வலம் வருகிறார் வைத்தி. முதல்வர் கார்டனுக்குத் திரும்பிய விறகு, அவர் டெல்லி பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிடுவார்" என்கிறார் தஞ்சை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close