Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபெஸ்டிவல் மூட் என்பார்களே, இதுதானோ அது? #தீபாவளி வந்தாச்சு


மூன்று நாட்களுக்கு முன்பே அலுவலகத்தில் கொண்டாட்டம். முடிந்து, வீட்டுக்கு கிளம்பினால் ‛போற வழியில எக்மோர் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுரு’ என்றார் ஊருக்குச் செல்லும் நண்பர். வாழ்த்துகள் சொல்லி இறக்கி விட்டேன். வழக்கத்தை விட பிதுங்கி வழிந்தது பூந்தமல்லி ஹைவே. வண்டி நகரவே இல்லை. கோயம்பேடுவை நினைத்துப் பார்த்தபோதே கிறுகிறுத்தது. கொரட்டூர் சிக்னலில் நின்றிருந்தபோது, ‛ஊரெல்லாம் இப்படித்தான் இருக்கு’ என  டிராஃபிக்கை நொந்தது ஒரு பல்சர். 

வீட்டுக்குச் சென்றால், ‛பாத்ரூம்ல லைட் எரியலை’ என புகார் வந்தது. எலக்ட்ரீசியனுக்கு ஃபோன் அடித்தால், ‛தீவாளி கழிச்சுப் பாக்கலாம் தலைவா’ என ஸ்விட்ச் ஆஃப் செய்தார்.  நண்பரின் வீட்டுக்குச் சென்றால் ‛அங்கிள் இந்தவாட்டி ரெண்டு பாக்ஸ்’ என ஓட்டைப் பல் தெரிய பட்டாசுப் பெட்டியை திறந்து காண்பித்தான் அவரது மகன். ‛நாளைல இருந்தே  அவனுக்கு லீவு. அதான் இந்த ஆட்டம் போடுறான். நீங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க...’  என லட்டு பாக்ஸை நீட்டினார் நண்பரின் மனைவி. ‛நாளைல இருந்து கோர்ட் லீவு. அதான் இன்னிக்கே கிஃப்ட் குடுத்துட்டாங்க’ என விளக்கம் சொன்னார், 24x7 சேனலில் பணிபுரியும் அந்த நிருபர். 

அந்த காம்பவுன்டை விட்டு வெளியே வந்தால், ‛டேய்... கோயம்பேடு ஃப்ளை ஓவர்ல நாலு பக்கமும் வண்டி நகராம அப்படியே நிக்கிது. நான் நாளைக்குத்தான் கிளம்புறேன்’ என ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். ‛இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல. அதுக்குள்ள வாங்கிரலாம்டீ...’ என மனைவியிடம் கடுகடுத்தார் பக்கத்துவீட்டுக்காரர்.  அதைக் கடந்து சென்றால்,  ‛அங்கிள் உங்களுக்கு பட்டாசு வெடிக்கத் தெரியுமா’  என வத்திக்குச்சியுடன் நின்றது நான்கைந்து வாண்டுகள். 

வீட்டுக்குள் நுழைந்ததும் ‛நைட்டுக்கு என்ன வேணும்? தோசைன்னா... மாவு வாங்கிட்டு வந்திருங்க’ என உத்தரவு பறந்தது.  கடைக்கு வந்தால், ‛மாவு இல்லை தம்பி. பசங்க எல்லாம் ஊருக்கு கிளம்புறாங்க. அதான் சீக்கிரமே கடையைச் சாத்துரோம்’ என ஷட்டரை இழுத்து விட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர். பல்பு வாங்கி திரும்பினால், அடுத்த அசைன்மென்ட் ரெடி. ‛26-ம் தேதி தர்றதா சொல்லிருக்காரு. இப்பவே போயி அந்த டெய்லர்ட்ட சுடிதார் வாங்கிட்டு வந்திருங்க...’ 

சுடிதாரை வாங்கி விட்டு வரும் வழியில், ‛அம்பத்தூர்ல கடை போட்டிருக்கேன்ஜி. பட்டாசு வாங்குறதா இருந்தா வாங்க. பாத்து செய்யலாம்’ என போகிற போக்கில் அப்ளிகேஷனை போட்டது ஒரு தெரிந்த முகம். புன்னகைத்துப் பிரிந்தபோது மொபைல்ஃபோன் ஒலித்தது. ‛நீயும் ஊருக்கு போகலையா. ரெண்டு நாளா பெண்டு நிமிறுது. நான் அப்புறமா பேசுறேன்’ என கட் செய்தார்  ஸ்வீட் கடையில் கேசியராக இருக்கும் ஊர்க்காரர். 

தூங்கத் தயாராகும்போது, ‛வெள்ளிக்கிழமை லீவு போட முடியுமா? ஏகப்பட்ட வேலை கிடக்கு. அன்னிக்கு லீவுன்னு பத்து மணி வரைக்கும் தூங்கக் கூடாது. எனக்கு எட்டு மணிக்கே கறி வாங்கிட்டு வந்தரனும். குளோப் ஜாமுன், வடை, பஜ்ஜி ஓகேவா...’ என பலகார லிஸ்ட் போட்டு விட்டு தூங்கி விட்டாள் இல்லத்தரசி.  மொபைலை நோண்டினால், first-wishes.com-ல் இருந்து வாட்ஸ்அப்பில் ஏகப்பட்ட வாழ்த்து மழை. 

மறுநாள் அலுவலகம் வந்தால், ‛நீங்க ஊருக்கு போறிங்களா? போறதா இருந்தா, அந்த ரெண்டு நாலு வேலையை இன்னிக்கே முடிச்சி கொடுத்துட்டுப் போயிருங்க’ என டீம் லீடரிடம் இருந்து இன்ஸ்ட்ரக்சன்.  இதுவேறயா... என நொந்து டீக்கடைக்கு சென்றால் ‛எனக்கு 7.30 மணிக்கு பஸ். ஃபிரண்டே டிக்கெட் புக் பண்ணிட்டான். அதை விட ஆச்சரியம் ரிட்டர்ன் டிக்கெட்டும் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. கடவுள் இருக்கான் குமாரு’ என்றான், காற்றில் புகைவிட்டபடி ஒரு நண்பன்.  ‛உனக்கென்னயா... கொடுத்து வச்சவன். நான்தான் எப்படி ஊருக்குப் போவேன்னு தெரியலை. 4,000 ஸ்பெஷல் பஸ் விட்டுக்காங்களாம். அதுல நமக்கு ஒரு இடம் கிடைக்காமாலா போயிடும்’ என தேற்றிக் கொண்டான் இன்னொருத்தன்.

வரும் வழியில் நண்பன் கேட்ட ‛நீ ஊருக்குப் போகலையா?’ என்ற கேள்வியை சமாளித்து இருக்கையில் அமர்ந்தால்  அன்று முழுவதும் அலுவலகத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குரல்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது அந்த கேள்வி.  இன்னும் முழுமையாக ஒரு நாள் இருக்கிறது என்றாலும், இப்போதே தீபாவளி வந்து விட்ட ஃபீல்!


-  தா.ரமேஷ் 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close