Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘சாமானியனுக்கும் தானே தீபாவளி’ - ரணம் தரும் ஆம்னி கட்டணக் கொள்ளை...!

  

"பண்டிகை கொண்டாட்டத்துக்குச் செல்லும் உற்சாக மனநிலையை ஆம்னி பேருந்துகள் காலி செய்து விடுகின்றன" என்று கொந்தளிக்கின்றனர் பயணிகள். பண்டிகை காலங்களை பயன்படுத்தி பல மட்டத்திலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவர்கள்  குற்றம்சாட்டுகிறார்கள்.

ரயில்களிலும், அரசு பேருந்துகள், அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் முன்பதிவு முடிந்த நிலையில் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் ஒரே சாய்ஸ் ஆம்னி பேருந்துகள்தான்.  எனவே, எந்தவிதத் திட்டமிடலும், முன்பதிவு செய்யாமலும் தீபாவளிக்குக் கிளம்பும் பொதுமக்களை குறிவைத்துத்தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

கட்டண உயர்வுக்குத் தடை 

சாதரண நாட்களில் 600 பேருந்துகளும் ,பண்டிகை நாட்களில் 1200  ஆம்னி  பேருந்துகளும்  இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் புகார்கள் தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே, இதுதான் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம்  கட்டணப் பட்டியலை வெளியிட்டது. இதற்கு மேல் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், அவர்கள் அதிகரித்த கட்டணம் வழக்கத்தை விட அதிகம் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த  நீதிபதிகள்  "ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கின்றனர். அதை வரையறுப்பதற்கான சட்டங்கள் ஏதும் உள்ளதா ? என்று கேள்வி எழுப்பினர். "மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வசூலித்த கட்டணத்தையே  அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இந்த தீபாவளியின்போதும் பயணிகளிடம் வசூலிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கட்டண உயர்வுக்குத் தடைவிதித்தனர். மேலும், இந்த உத்தரவை போக்குவரத்து ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.

நெல்லைக்கும்-நாகர்கோவிலுக்கும் ஒரே கட்டணம்

தெளிவாக  படத்தை காண படத்தின் மீது  கிளிக் செய்யவும்

இது குறித்துப் பேசிய ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அன்பு, "சென்ற ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். அதை மீறி கூடுதாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 70 பேர் புகார் தெரிவித்துள்ளார்கள் .அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது மட்டுமின்றி  ஆன்லைனில் மோசடி செய்யாதவாறு கண்காணிப்பு வேலையும் தொடங்கியுள்ளது" என்றார்.

எனினும்  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பாவி பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளின் நடத்துனர் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர். நாகர்கோயில் செல்லும் பயணி ஒருவரிடம் பேசியபோது, "ஆம்னி பேருந்து நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பே புரோக்கர்கள் வந்து மொய்த்து கொள்கிறார்கள். ஆளுக்கொரு கட்டணத்தை சொல்கிறார்கள். திருநெல்வேலி போனாலும் ஒரே கட்டணம். நாகர்கோயில் போனாலும் ஒரே கட்டணம். வாங்கப்படும் கட்டண விவரங்கள் தெளிவில்லாமல் உள்ளது" என்றார்.

கடந்த ஆண்டு கட்டணத்தையே  வசூலிப்பதாக  ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் கூறும் நிலையில் 27 -ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தமிழக அரசு புதிய கட்டணத்தை வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள கட்டணத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பின்பற்றுவார்களா  என்பது  கேள்விக்குரியானது. கட்டணம் விவரம் குறித்து முன்பே தமிழக அரசு வெளியிட்டு இருந்தால் பொதுமக்கள் பார்ப்பதற்கு அதனை  பின்பற்றுவதற்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். கடைசி நேரத்தில் வெளியிட்டுள்ளதால் இதனை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பின்பற்றுவார்களா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள்.

                                                                                தமிழக அரசு வெளியிட்டுள்ள  கட்டணம்

   

விதிமுறை மீறி இயக்குகிறார்கள்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தில் பணியாற்றும் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். "சுற்றுலா பேருந்து ஓட்டுவதற்கான அனுமதி வாங்கிவிட்டு, அரசு பேருந்துகள் போல இயக்குவது சட்டரீதியாக தவறு. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஸ்டேஜ் கேரேஜ் ஒன்றும் காண்டராக்ட் கேரேஜ் (ஒப்பந்த ஊர்தி) என்றும் உள்ளது. 

இதில் ஸ்டேஜ் கரேஜில் உள்ள பேருந்துகள், அரசு பேருந்துகள் ஆகும். ஆட்டோ, ஆம்னி, டாக்சி போன்றவை ஒப்பந்த ஊர்தியின் கீழ் வரும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து இன்னொரு குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து செல்வதே ஒப்பந்த ஊர்தி. ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுவதற்கான விதிகள் இல்லை. ஆனால், அவர்களுக்குத் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதாவது இது கள்ளச்சாரயத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது போன்றதுதான். அப்படி கள்ள சந்தையில் வந்தவர்கள் எப்படி அதிக கட்டணத்தை வாங்காமல் இருப்பார்கள். இந்தப் பண்டிகை காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் சந்திக்கிறார்கள். இந்தப் பேருந்துகளில் செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் சட்டரீதியாக வழக்குத் தொடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது. எனவே சட்ட விரோதமாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சென்னை இடம்பெயர்ந்தவர்களின் ஊர்...

சென்னையில் நீங்கள் வசிக்கும் தெருவில் இறங்கி 500 மீட்டர் நடந்து செல்லுங்கள் உங்கள் கண்களில் முதலில் தென்படும் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்... நிச்சயம் அவர்களுக்கு சென்னை சொந்த ஊராக இருக்காது. ஆம், இங்கு எல்லோரும் பிழைக்க வந்திருக்கிறார்கள்... லட்சங்களில் சம்பாரிப்பவர்கள் மட்டும் இங்கு வாழவில்லை... மாதம் ஐந்தாயிரம் சம்பாரிப்பவரும் பெருங்கனவுடன் இங்கு தான் வசிக்கிறார்.. அந்த சாமானியனால் எப்படி இந்த கட்டணத்தை தாங்க முடியும்....?  

கட்டண அட்டவணையையே இவ்வளவு தாமதமாக அரசு வெளியிடுகிறது என்றால், இதை நாம் எப்படி புரிந்துக் கொள்வது... பணம் படைத்தவர்கள் மட்டும் தம் பெற்றோர்கள், பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடினால் போதுமா...? சாமானியனுக்கு தீபாவளி இல்லையா...?

 

-கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ