Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜார்கண்ட் டூ தமிழ்நாடு..! பறிபோகும் ஏ.டி.எம் பாஸ்வேர்டுகள்! பின்னணி விவரம்


"ஹலோ.... நான் பேங்க் மேனேஜர்..... பேசுகிறேன். உங்க ஏ.டி.எம் கார்டு காலாவதியாகி விட்டது. உங்க 16 இலக்க ஏ.டி.எம் நம்பரைச் சொல்லுங்க" என்ற போன் அழைப்பு வந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் மக்களே. இந்த குரலுக்கு சொந்தக்காரர் கண்டிப்பாக ஒரு வடஇந்தியராக இருப்பார். அவர் பேசும் தமிழிலேயே அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

வடிவேல் சொன்னது போல 'ரூம் போட்டு யோசிக்கிறாங்க' இந்த ஏ.டி.எம் பாஸ்வேர்டு கொள்ளையர்கள். சமீபத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவருக்கு வந்த போன் அழைப்பு இது. அவர், போலீஸ் அதிகாரி என்பது எதிர்முனையில் பேசிய நபருக்கு தெரியாது. வழக்கம் போல தனக்கே உரிய குரலில் 'ஹலோ நான் பேங்க் மேனேஜர் பேசுகிறேன்' என்று சொல்ல... உஷாராகி விட்டார் அந்த போலீஸ் உயரதிகாரி. உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த குரலை பதிவு செய்தார். இருவருக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது.

சார்... உங்க ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. உங்களுடைய 16 இலக்க ஏ.டி.எம் நம்பரைச் சொல்லுங்க.. உடனே போலீஸ் அதிகாரியும் ஏதோ ஒரு 16 இலக்க எண்ணை சொல்கிறார். அதை குறித்துக் கொண்ட அந்த நபர், சார்.. உங்க ஏ.டி.எம் கார்டின் பின்பக்கத்தில் உள்ள கடைசி மூன்று இலக்க எண்ணை கொஞ்சம் சொல்லுங்க. அதற்கும் ஒரு போலியாக மூன்று நம்பரை போலீஸ் உயரதிகாரி சொன்னவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு போலீஸ் உயரதிகாரி அவரை கண்டறிய மீண்டும் அந்த நம்பருக்கு அழைத்தால் பதில் இல்லை. இந்த தகவல் சைபர் கிரைம் போலீஸாருக்கு தெரிவித்தவுடன், அவர்கள் இது எல்லாம் வழக்கமாக நடப்பதுதான் சார். நாமதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரி என்பதால் அந்த செல்போன் நம்பரை கண்டறிய முயற்சி நடந்துள்ளது. அது போலி முகவரி கொடுத்து வாங்கியதை கண்டுபிடித்தனர் சைபர் கிரைம் போலீஸ்.

இதுகுறித்து பைசர் கிரைம் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ஏ.டி.எம் கார்டு பாஸ்வேர்டுகளின் விவரங்களை கேட்டு ஹைடெக்காக திருடும் கும்பல் ஹரியானா மாநிலம் கர்ணல் என்ற இடத்திலும், டெல்லி நொய்டாவிலும், ஜார்கண்ட், ஜம்தாராவிலும் உள்ளனர். இவர்கள், செல்போன் நம்பர்களின் விவரங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு அந்த நம்பருக்கு வங்கி அதிகாரி போல பேசி தகவல்களை சேகரிக்கின்றனர். பிறகு அந்த நம்பர் மூலம் தங்களது கைவரிசையை காட்டுவதுண்டு.

கடந்த 2015-ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் 'கை' வைத்தது இந்த கும்பல். இதுதொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸிக்கு புகார்கள் வந்தன. செல்போன் நம்பர்களைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த நம்பர்கள் அனைத்தும் போலி முகவரியில் பெறப்பட்டவைகள் என்பது தெரிந்தது. இதன்பிறகு செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது, ஹரியானா மாநிலத்தில் கர்ணல் என்ற இடத்தின் செல்போன் டவரிலிருந்து போன் கால்கள் தமிழகத்துக்கு வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு முகாமிட்ட சைபர் கிரைம் போலீஸார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏ.டி.எம். கார்டு விவரங்கள் கேட்கும் கொள்ளை கும்பல் பெரும்பாலும் பிளஸ் 2 முடித்தவர்கள். இவர்களுக்கு தகவல்களை கொடுக்க சில ஏஜென்ஸிகளும் இருக்கின்றன. அவர்கள் வங்கியில் அதிக வரவு, செலவுகளை செய்யும் வாடிக்கையாளர்களின் விவரங்கள், அவர்களது செல்போன் நம்பர்களை சேகரித்து கொடுக்கின்றன. அதைப் பெற சில தொகை கைமாறுகிறது. அதன்பிறகு அந்த நம்பருக்கு பேசும் கொள்ளை கும்பல் விவரங்களை கேட்டு பெற்றுக் கொண்டு பணத்தை சுவாகா செய்து விடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு ஏ.டி.எம் பண மோசடி குறித்த புகார்கள் அதிகம் வந்தன. இதனால் போலீஸ் டீம், விசாரணை நடத்தி ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டம், கர்மட்டன் கிராமத்துக்கு சென்று தந்தை சம்சுதீன் மியான், மகன் பக்ருதீன் மியான் ஆகியோரை கைது செய்தது. அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்மட்டான் கிராமத்தில் ஏ.டி.எம். மோசடி செய்யும் கும்பல் இதற்காக இரண்டு மாத பயிற்சி அளித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்களின் வேலையே இந்த ஏ.டி.எம் மோசடி என்று சொல்லியுள்ளனர். இவர்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய், ஒரு செல்போன், 5 கிரெடிட் கார்டு,  ஒரு ஏ.டி.எம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏ.டி.எம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டின் பணத்தின் தொகையை அதிகரித்து கொடுப்பதாகவும் கூறி கார்டின் தகவலைப் பெற்ற கைவரிசையை காட்டுகிறது. இதனால் இதுபோன்ற போன் அழைப்புகள் வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து வங்கி தரப்பில் கேட்டபோது, "வங்கியிலிருந்து எந்த வாடிக்கையாளர்களையும் போனில் தொடர்பு கொண்டு கார்டின் விவரங்களை கேட்பதில்லை. அதுபோன்ற போன் அழைப்புகள் வந்தாலே உடனடியாக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும், போனில் தங்களுடைய ஏ.டி.எம் கார்டின் விவரங்களை சொல்லத் தேவையில்லை. இதில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு முழுஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்கின்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "இன்றைய காலக்கட்டத்தில் சைபர் கிரைம்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடமும், வங்கியிலிருந்து போனில் பேசுவதாக கூறும் நபர்களிடமும் தங்களது கார்டுகளின் விவரங்களையும், ரகசிய நம்பர்களையும் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. அவர்களிடம் அனைத்து விவரங்களையும் கொடுத்தப் பிறகு பணத்தையும் ஏமாந்தவர்கள் வங்கிக்கும், போலீஸ் நிலையத்துக்கும் வரும்போது நடவடிக்கை எடுக்க காலஅவகாசமாகும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களின் செல்போன் நம்பர்களின் முகவரிகள் போலியானதாகவே இருக்கும்.

அடுத்து, ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்யும்போது அந்த அக்கவுன்ட் விவரங்களை சேகரிப்பதிலும் சிக்கல் உள்ளது. ஏனெனில் வடஇந்தியாவில் பிச்சைக்காரர்களுக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்து வங்கி கணக்கை தொடங்கி கொடுத்து முன்எச்சரிக்கையாக செயல்படுகிறது இந்த மோசடி கும்பல். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறுவழியில்லை. அடுத்து ஆர்.பி.ஐ.யிடம் சில பரிந்துரைகளை போலீஸ் தரப்பிலிருந்து கொடுத்தோம். அதில் ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தும் போது ஓ.டி.பி என்றழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அடுத்து பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு மூலம் ஏ.டி.எம் கார்டுகளை உபயோகப்படுத்துவதை கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த முறையை தனியார் வங்கி அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும்போது கும்பலால் மோசடியில் ஈடுபட முடியாது" என்றார். 


- எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ