Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.நகரும் தீபாவளி கொண்டாட்டங்களும்! #Infographics

மாம்பலம், தியாகராய நகர் பகுதியை சென்னையின் நியூயார்க் எனலாம். 24 மணி நேரமும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் தியாகராய நகரும் ஒன்று. இப்பகுதியின் வருடாந்திர வருவாய் மட்டும் 2,00,000 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிட்டுள்ளனர். இது புதுதில்லியின் முக்கிய வியாபார மையமான கன்னாட் ப்ளேஸையும், மும்பையின் லிங்க் ரோடு பகுதிகளின் வியாபாரத்தை விடவும் இரண்டு  மடங்காகும். சாதாரண நாட்களே இப்படி என்னும் நிலையில் பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் சீசனில், குறிப்பாக 75 சதவீதம் அளவுக்கு ஜவுளி வியாபாரத்தை மட்டுமே நம்பி இயங்கும் இப்பகுதியில் இரண்டு மடங்கு விற்பனை அதிகரிக்கும் என்பதுதான் அனைவரது கணிப்பாகவும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்தது போல இந்த ஆண்டும் வியாபாரம் இருக்கிறதா? என்பதை பண்டிகைக்கால கூட்ட நெரிசலில் நீந்திச் சென்று, பெருநிறுவனங்களின் அதிபர்கள் முதல் சிறு முதலாளிகள் வரை  சர்வே செய்தோம். 

பெரிய கடைகளில் சேல்ஸ் எப்படி?

"பண்டிகைக் காலம் என்பதால் தனியாக பர்ச்சேஸ் செய்பவர்களை விட, சீட்டு கட்டுபவர்களுக்கு சேலை, வேட்டிகள் வழங்க மொத்தமாக கொள்முதல் செய்பவர்களால்தான் எங்களுக்கு லாபம்" என்கிறார் தி.நகரின் பிரபல துணிக்கடை ஒன்றின் விற்பனை மேற்பார்வையாளர்.  தரத்தை விட மக்கள், உடைகளில் இருக்கும் வேலைப்பாடுகளில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதால், அதற்கேற்ப ஆடைகளுக்கு  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது  என்பது பேச்சுவாக்கில் அவர் கசிய விட்ட செய்தி.

பண்டிகைக் காலத்தில் வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு குறைந்தது 5,000 பேராவது கடைக்கு வருவார்கள். வார நாட்களில் இந்த எண்ணிக்கை சற்று குறைகிறது என்பது விற்பனையாளர்களாகப் பணியாற்றும் பெண்களுடைய கணிப்பு. இந்த ஐயாயிரம் எனும் எண்ணிக்கை மாம்பலத்தின் மிகப்பெரும் துணிக்கடைகள் அத்தனைக்கும் பொருந்தும்.

 யாருக்கான ஆடைகள் அதிகம் விற்பனையாகிறது?

ஜவுளிகள் அதிகம் வாங்கப்படுவது பெண்களுக்கா? ஆண்களுக்கா? என்றுகேட்டபோது, "இரண்டுமே இல்லை; என்று குழந்தைகளுக்கு" என பதிலளிக்கிறார்கள் கடைக்காரர்கள். அதுவும் அவர்களுக்கான ஆடைகளின் குறைந்தபட்ச விலையே 1,000 ரூபாய் என்பது அதிர்ச்சி கலந்த தகவல்.

சின்னச் சின்னக் கடைகளின் நிலவரம் என்ன?

தி.நகரில் இருக்கும் மொத்தம்  67 சிறிய துணிக் கடைகளில் நாளொன்றுக்கு 200 பில்கள் வரை பதிவிடுகிறார்கள். மேலும் ஸ்டாக் வாங்கி வந்த இரண்டு நாட்களிலேயே அடுத்து 20 சப்ளைகளுக்கு ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் தி.நகர் துணிக் கடைகளுக்கான மொத்த சப்ளையர். அவரது கடையில் மட்டுமே நாளொன்றுக்கு 500 பில்கள் வரை செல்கிறது. இவற்றில் ஒரே மாதிரியான ஆடைகள், வெவ்வேறு தரத்தில்  கிடைப்பதும் அடங்கும். ”ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள ஆடையை பாதிக்கு பாதி விலையில் கேட்டால் நமக்குக் கட்டுப்படியாகுமா?” என்று ஆடைகளைப் பார்த்துச் சிரித்தபடியே பேசுகிறார் சப்ளையர். 

தையல்காரர்களின் நிலை!

சென்ற வருடத்தை விட இந்த வருடம் எங்களுக்கு நல்ல விற்பனை என்று இவர்கள் தரப்பு சொன்னாலும், இதனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ தையல் கடைக்காரர்கள்தான். முன்பு சுடிதார் மெட்டீரியல்கள், ஷர்ட் பிட்கள், ஜாக்கெட் பிட் துணிகளைத் தைப்பதற்கு என்றே ரங்கநாதன் தெருவில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த தையல்கடைகள் அத்தனையுமே தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கும் நிலைதான். தையல் கடைக்காரர்கள் கூறுகையில், “இப்பலாம் புதுசா நிறைய ரெடிமேட் டிசைன்ஸ் சினிமாப்பட பெயரில் மார்க்கெட்டில் படுவேகமாக சேல்ஸ் ஆகின்றது, பண்டிகைகளுக்கெல்லாம் துணி வாங்கி தைப்பவர்களும் தற்போது குறைந்து விட்டார்கள். ஒரு மணிநேரத்தில் சுடிதார் தைத்து தரும் ஐடியாவை உருவாக்கியவர்கள் தி,நகர் பகுதியில் இருக்கும் தையல்காரர்களாகிய நாங்கள்தான். ஒரு மணிநேரத்தில் தைத்துக்கொடுக்க முடியாத அளவுக்கு இங்கே ஒவ்வொருவருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது நிலைமையே வேறு, சாவகாசமாக தைத்து தரும் அளவுக்கு ஒவ்வொருவருக்குமே நேரம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் ரெடிமேட் துணிகளால் சரிந்துவிட்டது. முன்பு கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தையல் கூலி கொடுத்தது போக 400 முதல் 500 ரூபாய் வரை கையில் கிடைக்கும். தற்போது 100 ரூபாய் கையில் மிஞ்சினால் பெரிய விஷயமாக இருக்கிறது. தி.நகரில் இப்போதெல்லாம் தையற்காரர்களுக்கு ஏற்றதல்ல" என்கிறார்கள்.

தி.நகரும் கூட்ட நெரிசலும்

பண்டிகைக் காலம் என்றால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும் என நாம் அனைவரும் அறிந்ததே.. மக்கள் இருக்கும் இடத்திற்கே, இப்போது பல பிரபல ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டாலும் கூட, மக்கள் அனைவரும் விரும்பி வருவது தி.நகருக்குத் தான். பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஆடைகள் மற்றும் நகைகள் வாங்குவதற்கு ஆரம்பிக்கின்றனர். தீபாவளி, பொங்கலுக்கு ஆடைகள் வாங்க வருபவர்கள் பலரும் தன் குடும்ப உறுப்பினர்களோடு தான் பெரும்பாலும் வருகிறார்கள். அதனால் ஷாப்பிங் பகுதிகள் எப்போதும் கூட்டமாகவே காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஷாப்பிங் வரும் மக்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை அபகரிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது.  பலர் கவனமாக இருந்தாலும், சிலர் ஷாப்பிங் மீது உள்ள அதீத கவனத்தால் தங்கள் பொருட்களை இழக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. பொருட்கள் தொலைவது மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளையும் கூட்ட நெரிசலில் தொலைத்து விட்டு தேடும் நிலையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை பார்த்தவுடன் பெற்றோரையும் பொருட்படுத்தாமல் விட்டுச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, காவல்துறையும் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தெளிவாக படிக்க படத்தைக் க்ளிக் செய்யவும்

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து பேசினோம். “தி.நகரில் மட்டும் ஒரு நாளைக்கு வந்து செல்லும் கூட்டம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதனால், மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 1,000 போலீஸார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருக்கிறார்கள். இதில் 500 பேர் காவல் சீருடையில் தி.நகர் பகுதியில் பணியில் இருக்கிறார்கள். 100 பேர்  கொண்ட 3 குழுக்களாக பிரிந்து மஃப்டியில் வேலை பார்க்கிறார்கள். மற்றவர்கள் ஷிஃப்டில் வேலை செய்கிறார்கள். போன வருடம் மழை பெய்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அதனால், கட்டுப்படுத்துவது எங்களுக்குக் கொஞ்சம் எளிதாக இருந்தது. இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தால் மக்கள் தினமும் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக போலீசார்  பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். காவலர்கள் பிடியில் இருந்து யாரேனும் தப்பிக்க வாய்ப்புள்ளது என்பதால்,  225 சிசிடிவி கேமராக்கள், 35,000 பாதுகாப்பு எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள், சென்னை முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட பேனர்கள் தி.நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்  மக்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி நாள் முழுவதும் ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்படுகிறது. கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. தொலைவில் இருந்து நடப்பதை தெரிந்து கொள்ள 10 பைனாகுலர்கள் பயன்படுத்தப்படுகிறது. தி.நகர் பகுதியில் 3 போலீஸ் பூத்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் மக்களைப் பாதிக்கும் எந்தவித சம்பவங்களும் நடக்கக் கூடாது என்று முன்பு திருட்டு வழக்குகளில் பிடிபட்ட 10 பேரை முதலிலேயே ரிமாண்ட் செய்து விட்டோம். இந்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்ட பிறகு, எந்த ஒரு திருட்டோ, மக்களுக்கு இடையூறோ நடக்கவில்லை. ஆனால், கூட்டத்தில் குழந்தைகள் பலர் சிக்கி, பெற்றோர்களைத் தேடி அலைந்தனர்.  அக்டோபர் 23-ம் தேதி அன்று ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்தோம். மற்றபடி மக்களிடம் இருந்து ஒரு புகார் கூட வரவில்லை” என்று கூறினார் கிருஷ்ணமூர்த்தி.

-நந்தினி சுப்பிரமணி, ஐஷ்வர்யா  | இன்ஃபோகிராஃபி : ஆரிஃப் முகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close