Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2000 கோடியை வழங்க ஆம் ஆத்மி வலியுறுத்தல் 

தனியார் மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு  கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 2000 கோடியை தமிழக அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மிகட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரும்பு விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளாக கரும்புக்கான தமிழக அரசின் பரிந்துரை விலையினை (SAP) கொடுக்க முடியாது என தனியார் சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதன் விளைவால் தனியார் சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய கரும்பு பணபாக்கி மட்டும் சுமார் ரூ.1650 கோடி நிலுவையில் உள்ளது. கூடுதலாக கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகை சுமார் ரூ.350 கோடி நிலுவையில் உள்ளது. இதனை பெற்றுத் தர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.

தொடர்ந்து பாக்கித் தொகை கிடைக்காததன் காரணமாக விவசாயிகள் மிகுந்த கஸ்டத்தில் உள்ளனர். விவசாயிகள் அடமானம் வைத்துள்ள நகைகள் ஏலம் போடப்படுகின்றன. டிராக்டர்கள் ஜப்தி செய்யப்படுவதால் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. அன்றாட வாழ்வுக்கே விவசாயிகள் அவதிப்படுகின்றனர், தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டுள்ள சூழ்நிலையில் விவசாயக் குடும்பங்கள் பண்டிகை கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இதற்காக போராடும் கரும்பு விவசாயிகளைக் கைது செய்யப்படுகின்றனர். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பண பாக்கித் தொகையினை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதற்கு மாறாக, நெருக்கடி தாங்க முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கைது செய்கிறது. தமிழக அரசின் இந்த போக்கிற்கு தமிழக ஆம் ஆத்மிகட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசு இனியும் காலதாமதமின்றி தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி பாக்கித் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத் தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்துவதுடன், போராடும் கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்