Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி வரலாறும், பட்டாசு விபத்து பாதுகாப்பும் !

     

 

பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெறும் பிரதிநிதிதான் மக்களின் தலைவனாகி, முதல்வராக, பிரதமராக, அதிபராக அரசப் பதவியில் அமர முடிகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகைக்கும் அதன் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, வீரம் தோய்ந்த பல வரலாறுகள் வலுவாகி மக்கள் கொண்டாட்டத்துக்குக் காரணமாக இருந்து வருகின்றன.

'போனஸ் போட்டாச்சா ?' என்று ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளும் அளவுக்கு, தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளாக ஒளி வீசிக் கொண்டிருப்பது தீபாவளிதான்!. 

அசைவ தீபாவளியும், எண்ணை குளியலும் !

புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், வீட்டின் வாசற்படியில் விளக்கு ஏற்றுதல், அசைவப் பிரியர்களாக இருக்கும் பட்சத்தில் முதல்நாள் இரவே வெட்டுக் கடையில் முன்பதிவு செய்து ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வகைகள் என்று உணவுக்கான முன்னேற்பாட்டைச் செய்தல், அதிகாலையில் தலையில் எண்ணை வைத்து குளித்தல் என்று மப்பும், மந்தாரமுமாக தீபாவளி களை கட்டி விடும்.

சென்னையின் பொழுதுபோக்கு மெரீனா !

சென்னை மக்கள் பெரிதாய் பொருட்படுத்தா விட்டாலும் வெளிமாவட்ட மக்களின் 'நைல், தேம்ஸ்' நதி போன்று கொண்டாடப் படும் இடம் சென்னை மெரீனா கடற்கரை. தீபாவளிக்கு மெரீனாவை மட்டுமே பார்த்து விட்டுத் திரும்பும் குறைந்த வருவாய் குடும்பங்கள்தான் சென்னையில் அதிகம். பணத்தை செலவிட்டு சென்னை மெரீனாவைப் பார்த்துச் செல்லும் வெளியூர் மக்களும் உண்டு. கால்களால் கடற்கரை மணலை சிதறியபடி, துள்ளி விளையாடும் சிறுசுகளின் மனங்களில் நிறைந்திருக்கும் மணல் வெளியும், குவிந்திருக்கும் நடைபாதை திண்பண்டக் கடைகளும் மெரீனாவை கூடுதல் அழகாக்கிக் காட்டும்.

தலை தீபாவளியும், புதுப்பட ரிலீசும் !

ஜல்லிக்கட்டு, உறியடி, சந்தை கூடுதல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் தீபாவளியின் போது இருப்பதில்லை. மாறாக 'தீபாவளி ரிலீஸ்' சினிமாப் படங்கள், தீபாவளி தள்ளுபடிகள், தீபாவளி சுற்றுலா, 'தலை' தீபாவளி (100 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய கொண்டாட்டத்தில் தலை தீபாவளியே கிடையாது) ஆகியவை பண்டிகையின் முக்கிய அம்சங்களாகும்.

தீபாவளி வடநாட்டுப் பண்டிகையே !

'வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி' என்று தன்னுடைய 'மதுரை திருமலை நாயக்கர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்.

"தீபாவளி என்பது வடநாட்டு குஜராத்திகளுக்கு புதுக்கணக்கு திறப்பு விழா நாள். விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை 'நிக்கோலோ டிகாண்டி' என்பவர் குறிப்பிட்டுள்ளார். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரைக்கு குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை, தீப + ஆவலி = தீபாவலி. அச் சொற்றொடர்தான் பின்பு தீபாவளி என்று திரிந்தது. தீபாவளி, தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை" என்கிறார் தமிழ்க்கடல் மறைமலைஅடிகளார்.

'தமிழர் மதம்' என்ற நூலில்,"வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே தெரிந்த முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. 

      

வடநாட்டவர் அங்கிருந்து தென்னாட்டில் குடியேறிய பின்னர் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின், அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் கட்டிவிடப்பட்டதாகும்" என்று கூறப்பட்டுள்ளது. தீபாவளித் திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் எந்தவொரு இயைபும் இல்லை என்பது தெளிவாகிறது. 

'சமண சமயப் பண்டிகையே தீபாவளி' என்கிறார், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ள, 'சமணமும் தமிழும்' நூலில், "தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே இரவு முழுவதும் சொற்பொழிவு ஆற்றினார். மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.

அது முதல் இந்த விழா தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்திய படியால் 'தீபாவளி' என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப் படுகிறது" என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர் என்றும் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டின் கொண்டாட்ட விழாவானது !

தமிழர் பண்டிகையாக இல்லாவிட்டாலும் தீபாவளித் தள்ளுபடியில் ஆரம்பித்து, புதுப்படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது வரையில் தீபாவளி தமிழர் பண்டிகையாக ஆக்கமும் ஊக்கமும் பெற்று விட்டது வியப்பினும், வியப்பே ! 

அவரவர் சொந்த ஊருக்குச் செல்லவும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரவும் ஏற்றவாறு அரசே சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

திருநெல்வேலி அல்வாவும் தேவை !

தீபாவளி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்புகள்தான். திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அல்வாதான். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தீபாவளியை தித்திக்கும் அல்வாவுடன் கொண்டாட வேண்டுமானால், திருநெல்வேலிக்கு போக வேண்டும் என்பதில்லை. நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில், மொபைலிலோ அல்லது ஆன்லைனிலோ ஆர்டர் செய்தாலே, திருநெல்வேலி அல்வா வீடு தேடி வந்து விடும்.

ரூ. 50 லட்சத்தை தாண்டிய ஆடு வியாபாரம் !

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்ற மணப்பாறை சந்தையில் ரூ. 2000-க்கு விற்கப்படும் வெள்ளாடுகள் ரூ.2,800 வரை விற்கப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாயைத் தாண்டி ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

பாதுகாப்புடன் பட்டாசு கொளுத்தலாம்!

பண்டிகைகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த மகிழ்ச்சி சில நேரங்களில் துயரம் தரக் கூடியதாக மாறி விடுவதுதான் பரிதாபம். 

அமெரிக்கா, ஐரோப்பா, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் பட்டாசுகளை வீட்டிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ வெடிக்க முடியாது. வெடிவெடிப்பதற்கென தனி இடம் உண்டு. அங்கு தான் பட்டாசுகளை வெடிக்க முடியும்.

நம் நாட்டில் நினைத்த இடங்களில் எல்லாம் பட்டாசுகளை கொளுத்திப் போடும் செயல் சாதாரணமாக நடக்கிறது. வீட்டிலிருந்து வெளியே நடந்து போக முடியாத அளவிற்கு வீதிகளில் பட்டாசு குப்பைகளின் குவியல் குவிந்து விடும்.

        

பொதுவாக முகம், கை, விரல்கள் ஆகியவற்றில் தான் தீக்காயங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.  ஆனால், தீக்காயம் பட்ட கையைத் தண்ணீரில் நனைப்பதற்கு பலரும் தயங்குவார்கள். தீக்காயம் பட்ட உடல் பகுதியைத் தண்ணீரில் நனைத்தால், கொப்பளங்கள் ஏற்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும். கொப்பளங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

பட்டாசு வெடிக்கும்போது தீப்பொறியோ, பட்டாசு மருந்தோ கண்ணில் பட்டு விட்டால் சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, , கண்களை அகலமாகத் திறந்து 15 நிமிடங்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும். அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, கண்களை நனைத்து, இமைகளைத் திறந்து திறந்து மூடவேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால், அந்த நபரை  போர்வையாலோ, கம்பளியாலோ மூடி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். பின்னர் காற்றோட்டமான இடத்திற்கு அவரை மாற்ற வேண்டும். தீக்காயத்தின் மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து, தேன், எண்ணெய் போன்றவற்றைப் பூசுவது நல்லதல்ல. இவை காயம் குணப்படுவதைத் தாமதப்படுத்தும்.

தீக்காயம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!

ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close