Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்நடைகளும் கொண்டாடட்டும் தீபாவளி... சத்தத்தைக் குறைப்போம் பிராணிகள் வதை தடுப்போம்!

றவுகளைப் புதுப்பிக்கும் உன்னதமான தருணங்கள் திருவிழாக்கள். பொதுவாகவே தமிழர்களின் வாழ்வில் கொண்டாட்ட தருணங்கள் இன்பமானது. புத்தாடை உடுத்தி உற்றார் உறவினர்களை கண்டு அகமகிழ்ந்து நாவினிக்க பலகாரங்களை உண்டு களிக்கும் நன் நாள் அது. மனிதகுலத்துக்கு கேடு விளைவித்த நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட தினம் என்பதால் மற்ற பண்டிகைகளைவிடவும் தீபாவளி தினத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக அளிக்கப்படுகிறது.

மனிதர்களின் ஒருநாள் கொண்டாட்டத்துக்கு காரணமாகும் இந்த தீபாவளி அவர்களின் மற்ற நாட்களுக்கு ஆனந்தத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும் செல்லப்பிராணிகளுக்கு சித்ரவதையையே தருகிறது.


தீபாவளியின் 3 நாள் கொண்டாட்டத்துக்குப்பின் நம் செல்லப்பிராணிகளும் தெருவில் சுற்றுத்திரியும் பிராணிகளும் ஆரோக்கியக் குறைவுக்குள்ளாகின்றன. மனிதர்களின் ஒருநாள் கொண்டாட்டத்துக்காக பல பிராணிகள் தங்கள் ஆயுள்நாட்களையே அடமானம் வைக்கவேண்டிய அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கிறார், அரசு  கால்நடை மருத்துவர் வி.பி.சுதாகர்.

“முன்பெல்லாம் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை சம்பிரதாயமான ஒரு சடங்காக  அதேசமயம்  கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தவுமே வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் சமீப காலங்களாக அது  சமூகத்தில் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் அடையாளமாக  காட்டத்துவங்கியிருக்கிறார்கள் மக்கள். 3 நாள் கொண்டாட்டத்துக்காக அவர்கள் கொடுக்கும் விலை தங்கள் வீட்டுப்பிராணிகளின் ஆரோக்கியம்.  

இயல்பான ஒரு மனிதன் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகளை உணர முடியும். இதை கேட்கும் ஒலித்திறன் என்பார்கள். இதனால் நமக்கு இயல்பாக 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான சிறு ஒலியையும்,  20 000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமாக பெரும் ஒலியையும் கேட்க முடியாது. அதனால் பட்டாசு மற்றும் பெரிய வெடிச்சத்தங்கள் நமக்கு பெரிதும் அதிர்வுகளை தருவதில்லை. ஆனால் பிராணிகள் மனிதர்களை விட மிக துல்லியமான ஒலியை கேட்கும் திறனுடையவை. அவை 40,000 ஹெர்ட்ஸ் முதல் 1,00,000 வரையிலான அதிர்வலைகளைக்கூட உள்வாங்கும்.

அதாவது மிக நுண்ணிய குறைந்த ஒலியையும் அதேசமயம் 1 லட்சம் ஹெர்ட்ஸ் வரையிலான அதிகபட்ச ஒலியையும் உணரும் தன்மை கொண்டவை. இது விலங்குகளுக்கு தக்கபடி கூடலாம் அல்லது குறையலாம். அதாவது மனிதர்களைவிட பிராணிகளுக்கு  20 மடங்கு உணர்வு திறனும் நுணுக்கமான கேட்பு திறனும் அதிகம்.  அதனால்தான் சுனாமி போன்ற பேரழிவுகளை மற்றும் வானிலை சமிக்ஞைகளை  விலங்குகள் முன்கூட்டியே அறிய முடிகிறது. சிறப்பான இந்த திறன்தான் தீபாவளியின்போது அவற்றுக்கு எமனாகிவிடுகிறது.
தீபாவளியன்று தெருவில் இறங்கி நாம் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும் வழக்கத்துக்கு மாறான அதிர்வினாலும் பெரும் சத்தத்தினாலும்செல்லப்பிராணிகள் மற்றும் தெருவில் சுற்றுத்திரியும் விலங்குகள் அஞ்சி நடுங்குகின்றன. அங்கும் இங்கும் ஓடி நிலை கொள்ளாமல் தவிக்கின்றன.

வீட்டு நாய்கள் வீட்டின் ஏதோ ஓர் மூலையில் ஓடி அடைக்கலமாகிவிடும். ஆனால் அதுவும் முழுமையான பாதுகாப்பாக இருக்காது. கொண்டாட்ட மனநிலையில் உள்ள எஜமானர்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. தெருநாய்கள் நிலை இன்னும் மோசம். ஓடி ஒளிய இடமின்றி பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடி கண்டவர்களை கடித்துக்குதறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. சில பிராணிகள் அதிக சப்தம் காரணமாக வழி தெரியாமல் தறிகெட்டு தெருக்களில் ஓடி வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும். இதுதவிர கழுதைகள், நாய்களின் வாலில் பட்டாசு கட்டி கொளுத்தி வேறு  சில 'மனிதர்கள்' மகிழ்ச்சியடைவார்கள்.

தீபாவளி முடிந்து  இயல்பான வாழ்க்கை திரும்பிய ஒரு சில தினங்களுக்கு பின்னரே தங்கள் செல்லப்பிராணிகளின் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளை மனிதர்கள் கண்டுகொள்கின்றனர். நேற்று வரை மடியில் ஏறி தவழ்ந்து கொஞ்சி விளையாடிய தங்கள் செல்ல நாய், இப்போது  அவர்களைக் கண்டால் கூட அஞ்சி ஓடுவது விலங்கின் உரிமையாளருக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கும். உணவை மறுப்பது, எப்போதும் மிரட்சியான முகபாவத்தை வெளிப்படுத்துவது, உற்சாகமின்றி படுத்துக்கிடப்பது என அடுத்த சில நாட்கள், பிராணிகள்  தீபாவளியின் எதிரொலியாக வதைபடும்” என்றார்.

வெடிச்சத்தத்தினால் விலங்குகள் அடையும் பாதிப்புகள் என்னனென்ன என்றோம்.

“ காது கேளாமை, தூக்கமின்மை, பயம், உணவு உண்ணாமை, இதயக் கோளாறு, இரத்தக் கொதிப்பு சுவாசக் கோளாறு, கீழ்படியாமை, தசைபிடிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்றவைகளால் பிராணிகள் பாதிக்கப்படுகின்றன. மேற்சொன்ன அறிகுறிகளுடன் கால்நடை மருத்துவமனைக்கு வரும் பிராணிகளுக்கு முதற்கட்டமாக பயத்தை போக்கும் மாத்திரைகள் வழங்கி படிப்படியாக மற்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் மருத்துவர்கள். எனினும் இந்த பாதிப்புகளிலிருந்து  அவை முழுமையாக மீள பல நாட்கள் ஆகின்றன.

தெரு நாய்களின் நிலை இன்னும் மோசம். தீபாவளி முடிந்தபின்னரும் பலநாட்கள்வரை அந்த பயத்திலேயே இருக்கும். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களைத்தேடி ஓடிச்சென்று அடைக்கலமாகி சிறிதுகாலம் வரை மறைந்துவாழும். பலநாட்கள் உணவின்றி இறந்துவிடுவதும் உண்டு.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் நம்மை சார்ந்து வாழும் நாய், பூனை, பசு, எருமை மற்றும் பறவைகள் என வாயில்லா ஜீவன்களின் பாதுகாப்புக்கு உறுதி தருவது நமது கடமை  என்பதை மறந்துவிடக்கூடாது என்றவரிடம், தீபாவளி சமயத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பாதுகாக்கலாம்? என கேட்டோம்.

“பட்டாசு வெடிக்கும் நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு சப்தம் கேட்காதபடி தனி அறைகளில் விட்டு ஜன்னல் கதவுகளை மூடி விடவேண்டும். அச்சமயங்களில் அவைகளுக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகளை கொடுத்து அதன் கவனத்தை மாற்றி அமைக்கலாம்.

வீடுகளின் அருகிலேயே பட்டாசுகளை வெடிக்காமல் வெட்ட வெளியிலோ, திடல்களிலோ பட்டாசுகள் வெடித்து கொண்டாடலாம். முடிந்தவரை அதிக சத்தம் எழுப்பாத பட்டாசுகளை வாங்கி வெடிப்பது தெரு விலங்குகளுக்கு நல்லது.

இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமானால் முன்கூட்டியே கால்நடை மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனை பெற்று பயம் குறையக் கூடிய மருந்துகளை தரலாம். தீபாவளி மனிதர்களுக்கு மட்டுமல்ல; நம்மால் நேசிக்கப்படும் விலங்குகளுக்குமானதுதான் என்பதை உணர்ந்து பட்டாசுகளை வெடித்தால் நம்முடன் நம் செல்லப்பிராணிகளும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடும்“ என்றார்.
நரகாசுரன் இறந்த தினத்தை கொண்டடும் நாளில் பிராணிகளுக்கு நாம் நரகாசுரனாக இருக்கவேண்டாமே....

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ