Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறந்தபின்னும் மகளின் ஆசையை நிறைவேற்றிய சந்தியா; ஜெயலலிதாவினால் மறக்க முடியாத தீபாவளி

புகழ்மிக்க நடிகை, பரபரப்பான அரசியல்வாதி, அதிரடியான தலைவர் என தன் வாழ்நாளில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்நாளில் இந்த தீபாவளி மறக்கமுடியாதது. ஆம் கடந்த செப்டம்பர் மாதம் 22 - ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 38 நாட்கள் ஆகின்றன. ஆனால் இன்னமும் பூரண குணமடையவில்லை அவர். மருத்துவமனையின் அறிக்கையின்படி இன்னமும் அவர் நோயின் பிடியிலிருந்து முழுமையாக மீண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் தீபாவளி தினமான அக்டோபர் 29 ந்தேதியும் அவர் அப்போலோவில் தொடரும் நிலை உருவாகியுள்ளது.

ஜெயலலிதா என்ற உறுதிமிக்க ஒரு தலைவருக்கு துர்பாக்கியமான நேரம் இது. ஒரு முதல்வராக அவர் பொதுமக்களை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பார்க்கவில்லை. அவர் இன்னமும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லவில்லை. சொல்வாரா என்பதும் தெரியவில்லை. சம்பிரதாயமானது என்றாலும் அந்த வாழ்த்து கிடைக்கப்பெறாமல் தொண்டர்கள் பரிதவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அச்சத்தை போக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதிகாரபூர்வமாக அவர் சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படங்கள், அவரது அறிக்கைகளோ வெளியிடப்படவில்லை. இரட்டைவிரல் காட்டி சிறு புன்னகையுடன் அவர் தங்களை கட்சி அலுவலகத்திலும் பொதுக்கூட்ட  மேடைகளிலும் கடந்து சென்றதைத்தான் தொண்டர்கள் இந்த நேரத்தில் நினைத்துப்பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர். அப்போலோ வாசலில் நாம் சந்திக்கிற ஒவ்வொருவரும் தங்களது தலைவியை இறுதியாக சந்தித்த நிகழ்வைத்தான் பரிதவிப்போடு சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்கின்றனர் தங்களை. இப்படி எல்லாமே மூடு மந்திரமாகிவிட்ட நிலையில் இந்த வருட தீபாவளியை அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதா அனுதாபிகளும் மறக்கமுடியாது.

பட்டாசு சத்தம் இருக்காது, பகட்டான ஆடை இருக்காது, தீபாவளிக்கு பரிசு கொடுப்பதோ, பரிசு பெறுவதோ ஒரு சம்பிரதாயமானதாக இருக்கும். மொத்தத்தில் இந்த தீபாவளி கொண்டாட்டமாக இல்லாமல் ஒரு மெல்லிய துயரத்துடன் தான் அவர்கள் கடக்கவேண்டியிருக்கும்.

தொண்டர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தை மறக்கவியலாததாக்கிய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் ஒரு தீபாவளி துக்கரமானதாக அவர் மனதில் பதிந்துகிடக்கிறது. அது அவரது தாயார் சந்தியாவின் மறைவுக்கு முன் வந்த தீபாவளி. ஆம் அது 1971-ம் ஆண்டு அக்டோபர் மாதம். அந்த வருடத்தின் தீபாவளித் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த தாய் சந்தியா அந்த ஆண்டும் வழக்கம்போல் பிரபல கடைக்கு தானே நேரில் சென்று மகள் ஜெயலலிதாவுக்கு விருப்பமான டிசைன்களில் 10 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகளை பல மணிநேரங்கள் செலவிட்டு பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்திருந்த தன் மகளுக்கு அதை ஆசைஆசையாய் காட்டியபோது, தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகாக சேலைகளை தேர்வு செய்திருக்கமுடியாது என தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜெ. “இதெல்லாம் உனக்கு தீபாவளி ஆடைகள் என அன்போடு சொன்னார். “எல்லாம் எனக்காம்மா...உனக்கு இல்லையா” என்றார் ஜெயலலிதா.

“என் வயதில் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனிமேல் எனக்கு எதற்கு விலையுயர்ந்த ஆடைகள்...எல்லாம் உனக்காகவே வாங்கிவந்தேன்” என்றார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளவில்லையே என கோபித்துக்கொண்ட ஜெயலலிதாவை சந்தியாவால் தேற்ற முடியவில்லை. ஜெயலலிதா முடிவாக சொன்னார். “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இதில் ஒன்றைக்கூட தொடமாட்டேன்” என உறுதிபட சொன்னார். மகளின் பிடிவாதம் தெரிந்த சந்தியா வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டார். விறுவிறுவென களத்தில் இறங்கினார் ஜெயலலிதா.

வழக்கமாய் தான் துணி எடுக்கும் ராதா சில்க் எம்போரியத்துக்கு போன் செய்தவர், தன் தாயார் தனக்கு எடுத்த அதே எண்ணிக்கை அதை டிசைனில் பல மாதிரிகளில் புடவை எடுத்துவைக்கச்சொல்லிவிட்டு நேரில் அந்த கடைக்கு புறப்பட்டார்.

கடையில் தன் தாயாருக்கு தீபாவளி புடவைகளை வாங்கியவர் அதை அவரிடம் காட்டி மகிழ்ந்தார். “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள் எனக்கு?” என மீண்டும் முரண்டு பிடித்த அம்மாவை, 'தீபாவளி தினம் வரை தினம் ஒருபுடவை கட்டிக்கோ' என கட்டிப்பிடித்தபடி குறும்பாக கூறி சிரித்தார் ஜெயலலிதா.

பொதுவாக தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகைகளையும் கொண்டாடுவதில் ஜெயலலிதாவுக்கு பெரிய ஆர்வம் இல்லையென்றாலும் அந்த தினங்களை அவர் ஆவலுடன் எதிர்பார்க்க ஒரு காரணம் இருந்தது. அது தாய் சந்தியாவை சிறுவயதில் பல ஆண்டுகள் பிரிந்திருந்த ஜெயலலிதா என்ற மகளின் ஏக்கம். ஆம் சந்தியா பிரபல நடிகையாக இருந்தபோது எப்போதும் சூட்டிங் சூட்டிங் என்று அலைந்துகொண்டிருந்தார். மகளுடன் நேரம் செலவழிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது அவருக்கு. ஆனால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட மற்ற விசேஷ தினங்களில் தாய் சந்தியாவுக்கு விடுமுறை என்பதால்  அன்றுதான் ஜெயலலிதா தாயுடன் நேரம் செலவிடுவார். இதனால் பண்டிகை இரண்டாம் பட்சம்தான். தாயுடன் நேரம் செலவழிக்கப்போகிறோம் என்பதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்போது காலம் மாறிவிட்டிருந்தது. சந்தியா நடிப்பதை குறைத்துக்கொண்டு வீட்டிலிருந்தார். ஜெயலலிதா புகழின் உச்சியில் இருக்கும் நடிகை. இப்போது தாயுடன் பொழுதைக்கழிக்க மகளுக்குத்தான் நேரம் கிடைக்கவில்லை. தாயுடன் நேரம் செலவிடமுடியாத சிறுவயது ஏக்கம் ஜெயலலிதாவுக்கு இப்போதும் தொடர்ந்தது. இந்த வருட தீபாவளியன்று கால்ஷுட் கிடையாது என்பதால் தாயுடன் தான் செலவிடப்போகும் மகிழ்ச்சிகரமான நாளை உற்சாகத்துடன் வரவேற்றார் ஜெயலலிதா.

தீபாவளியன்று புதுப்புடவை கட்டி பட்டாசு வெடித்து உற்சாகமாக இருந்த தன் மகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தியா. ஆனால் மகள் வாங்கித்தந்த சேலையை அவர் அணிந்துகொள்ளவில்லை. தான் வாங்கித்தந்த புடவையை தாய் கட்டி தான் அழகு பார்க்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை, கடைசி பட்டாசு சத்தம் அந்த பகுதியில் கேட்கும் வரை நிறைவேறவேயில்லை. மகளின் ஆசையை நிறைவேற்றவில்லையே என்ற வருத்தம் சந்தியாவுக்கும் வர “விரைவில் அதில் ஒன்றை கட்டுகிறேன்” என அன்றிரவு மகளின் தலையை தடவிக்கொடுத்தபடி ஆறுதல் சொன்னார் அவர்.  

ஆனால் விதிவேறு மாதிரி விளையாடிவிட்டது. ஆம் தீபாவளி முடிந்த சில நாட்களில் சந்தியா மிகுந்த உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஜெயலலிதா படப்பிடிப்புக்கு சென்றுவிட்ட ஒருநாளில் சந்தியா ரத்த வாந்தி எடுக்க பதறிய உறவினர்கள் அவரை  பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் அவர் மரணமடைந்தார். உடல் இறுதிமரியாதைக்காக போயஸ்கார்டனில் கிடத்தப்படிருந்தது.

சடங்கு சம்பிரதாயங்களை செய்த புரோகிதர்கள் ஜெயலலிதாவின குடும்ப வழக்கப்படி இறந்தவரின் உடலில் புதுப்புடவை சாத்தவேண்டும் என்று சொல்ல, விறுவிறுவென உள்ளே சென்ற உறவினர்கள் சந்தியாவின் பீரோவிலிருந்து ஒரு புத்தம் புதிய புடவையை எடுத்துவந்தனர். ஹாலின் நடுநாயகமாக தாயின் உடல் அருகே அழுதபடி இருந்த ஜெயலலிதா தனது தாயின் உடலில் போர்த்த கொண்டுவரப்பட்ட சேலையைப்பார்த்தார். வானை முட்டும் அழுகை பீறிட்டுவந்தது அவருக்கு. ஆம் தாய் சந்தியாவுக்காக துணிக்கடைக்கு தானே நேரில் சென்று ஆசைஆசையாய் பார்த்துவாங்கிய சேலைகளில் ஒன்றுதான் அது.

தன் அன்புக்குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட சந்தியா தன் மகளின் தீபாவளி தின ஆசையை, தான் உயிருடன் இருக்கும்போது நிறைவேற்றமுடியாமல் போனாலும் மகளுக்கு அந்தக் குறை இல்லாதபடி இறந்தபின் அதை நிறைவேற்றிவைத்தார். அடுத்துவந்த பல தீபாவளி தினங்கள், ஜெயலலிதாவுக்கு இந்த  சோக நினைவுகளுடனேயே கடந்துபோயிருக்கும். அது ஒரு மறக்கமுடியாத தீபாவளி நினைவாகவே அவர் மனதில் நிலைத்துநின்றுவிட்டது.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close