Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநர், தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்: அறியாமை என்னும் இருளை போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் தீப ஒளி கொண்டு வரட்டும். தீபாவளித் திருநாள் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தட்டும்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்து மக்களை காத்தபோது நரகாசுரன் தன்னை வதைத்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்டவரத்தினால் வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி திருநாள். ஸ்ரீராமசந்திரமூர்த்தி இலங்கையில் ராவணனை அழித்து தனது வனவாசத்தையும் முடித்து சீதை, லெட்சுமணனுடன் அயோத்தி மாநகரம் வந்து முடிசூட்டி கொண்ட நாளை அயோத்தி மக்கள் வீடெல்லாம் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனார்.

இருளை அகற்றி ஒளி ஏற்றிய தீபாவளித் திருநாளை இன்றும் நம் நாட்டு மக்கள் கண்கூடாக கண்டு மகிழ்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி இன்று நம் நாட்டினை ஒளிநிறைந்த வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எல்லாத்துறைகளிலும் முன்னேற்றத்தை நாம் காண துவங்கியுள்ளோம். பிரதமரின் வழிகாட்டுதலில் நம் திறமைகளை வளர்த்து நாட்டின் வளர்ச்சியில் பணிபுரிந்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்றுவது நம் தலையாயக் கடமையாக அமையட்டும். தீபாவளி நாளில் வரும் மாசுகளை உடனே அகற்றி தூய்மையானதாக நம் வீட்டையும் நாட்டையும் உருவாக்குவோம். நாட்டுமக்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று நல்வாழ்வு வாழ இத்தீபாவளி திருநாளில் ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன். 

தமிழக பா.ஜ.க தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்றார் பாரதி, அனைவர் கண்களும் ஒளி கொண்ட கண்களோடு பிரகாசமான முகத்தோடு ஆரோக்கியமான உடலோடு வீரநடை போட வேண்டும் என்றால் இந்த பாரத தேசம் பொருளாதாரத்தில் பிரகாசமாக மிளிர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தான், அந்த வளர்ச்சியின் பிரகாசமும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மலர நம் பாரத பிரதமர் பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார் ஆக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குவது வாழ்த்துக்களில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் இடம் பெற வேண்டும், அது இந்த கால கட்டத்தில் சாத்தியமாக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகமும் மாநில உயிரோட்டத்துடன் தேசிய நீரோட்டமும் கலந்து ஒவ்வொருவர்  வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிர இந்த தீபா திருநாள் வழிவகை செய்யட்டும் என இறைவனை வழிபடுகின்றோம். உடல் நலமற்ற தலைவர்கள் உடல் நலம் பெறவும், சுயநலமற்றவர்கள் பொது நலம் உடையவர்களாக மாறவும் தமிழர்கள் அனைவரும் பல பல நன்மைகள் பெற்று நலமாக வாழவும் இறைவனை பிராத்திக்கிறேன்.

கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ்: இந்த இனிய தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும்,கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பாக மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழகத்தில் தீபாவளி என்றால் குதூகலம், மகிழ்ச்சி, கொண்டாட்டம்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. உலக மயமாக்கலால் தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்கள் பல, பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றன. இந்த தீபாவளி திருநாளில் தமிழக மக்களாகிய நாம் அனைவரும் தமிழகத்தின் மண்சார்ந்த தொழில்களுக்கும், உணவுப்பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். அவற்றை பயன்படுத்துவோம். பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்நன்னாளில் ஏற்போம். 

தமிழக ஆம்ஆத்மிகட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன்: தீபாவளி என்று நம் அனைவராலும் தமிழகத்தில் அழைக்கபடும் தீப ஒளி திருநாள் சிறியோர் முதல் முதியோர் வரை எல்லோராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் லஞ்சம் கொடுக்க மாட்டோம் லஞ்சம் வாங்க மாட்டோம், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்று பொது மக்களும், அரசு ஊழியா்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உறுதிமொழி ஏற்போம். தீபாவளி திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ஆம்ஆத்மிகட்சி அகில இந்தியா ஒருங்கினைப்பாளர் டெல்லி மாநில முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பில் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.


 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close