Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா கார்டன் திரும்புவது தாமதமாவது ஏன்? - அப்போலோ அப்டேட்ஸ்

ப்போலோ மருத்துவமனையில் 36 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ' நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் பூரண நலம் பெற்றுத் திரும்புவார்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை கவனித்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கான உத்தரவுகள் அனைத்தும் அப்போலோவில் இருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. அன்றாடம் கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க, காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குத் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். டெல்லியில் உள்ள அ.தி.மு.க எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் கார்டன் கவனத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் செயல்பாடுகளை கவனித்து வருகிறார் சசிகலா. 

மருத்துவமனையில் எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? 

"லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அளித்த நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சையும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பினாலும் சிக்கலான நிலையில் இருந்து மீண்டுவிட்டார் முதல்வர். தற்போது 24 மணி நேரமும் நல்ல நினைவில் இருக்கிறார். தொடக்கத்தில், நுரையீரல் தொற்றுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து சிறுநீரகத் தொற்றுக்கான ஆன்டி பயாடிக் மருந்துகளும் அளிக்கப்பட்டன. தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் இயங்குவதில் அதிக சிரமங்கள் ஏற்பட்டன. கை, கால்கள் இயக்கத்தில் மிகுந்த சிரமத்தில் இருந்தார் முதல்வர். இந்த மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. முப்பத்தைந்து நாட்களாக எந்தவித இயக்கமும் இல்லாமல் இருக்கிறார். சிங்கப்பூர் மருத்துவர்கள் கொடுத்த பிஸியோதெரபி சிகிச்சையின் விளைவாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கையில் ஸ்மைலி பந்துகளைக் கொடுத்து கைகளில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிட்டனர்" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், தொடர்ந்து, 

"தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய்(tracheostomy) இன்னும் நான்கு நாட்களில் அகற்றப்பட இருக்கிறது. திட உணவுகளை அவர் எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவமனை வழங்கும் புரதச் சத்து உணவுகளை எடுத்துக் கொள்கிறார். அவரது உடல் எடையில் ஐந்து கிலோ அளவிற்கு மட்டுமே குறைந்திருக்கிறது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், தொடர்ந்து முதல்வரின் உடல்நிலையை கவனித்து வருகிறார். எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையும் அடிக்கடி பெறப்படுகிறது. அதிகாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் அனைத்தையும் முதல்வரிடம் தெரிவிக்கிறார் சசிகலா. எதாவது பேசுவதாக இருந்தால், மிகவும் சிரமப்பட்டுத்தான் ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறார். அவ்வளவு அழுத்தம் கொடுத்து அவர் பேச வேண்டிய தேவை இல்லை என்பதால், முழு ஓய்வில் இருக்கிறார். ஆன்டி பயாடிக் மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விரைவில் குணமாகும். இன்னும் இருபது நாட்களுக்குள் கார்டன் திரும்புவார் முதல்வர்" என்றார் மகிழ்ச்சியோடு. 

அதேவேளையில், நவம்பர் 3-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையில், அ.தி.மு.க வேட்பாளர்கள் அளிக்கும் பிஃபார்மில் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்து இடம் பெறுமா என்ற கேள்வியும் அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. " 1984-ம் ஆண்டு புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில், அவர் கையெழுத்திட்டாரா என்ற சர்ச்சை பெரிதாக எழவில்லை. அப்போது காங்கிரஸ் அரசுடன் மிகவும் இணக்கமான போக்கில் எம்.ஜி.ஆர் இருந்தார். அனைத்தும் மூடுமந்திரமாகவே நடந்து முடிந்தன. அப்போது தேர்தல் ஆணையமும் இந்தளவுக்கு தன்னிச்சையாக இயங்கியதில்லை. ஆனால், தற்போதுள்ள சூழல் வேறு. ஏற்கெனவே, கையெழுத்து போட்டு வைத்திருந்த பி ஃபார்ம்கள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்படுமா அல்லது புதிதாக இங்க் மையால் முதல்வர் கையெழுத்திடுவாரா என்பதும் மிக முக்கியமான கேள்விகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில், அவருடைய கையெழுத்தில் சிறு மாற்றம் இருந்தாலும், விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துவிடும் வாய்ப்புகளே அதிகம்" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். 

"இந்தக் கேள்வியே அவசியமற்றது. கண்ணாடி டம்ளரைக் கையில் தூக்கும் அளவுக்கு முதல்வர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். எனவே, பி ஃபார்ம் அளிப்பதில் எந்தவிதச் சிக்கல்களும் இருக்காது" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வர் பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என தொண்டர்களின் வழிபாடு தொடந்து கொண்டே இருக்கிறது. நவம்பர் 3 அன்று வேட்பு மனு பரிசீலனையை உற்று நோக்கும் கட்சிகள் ஒருபுறம் இருந்தாலும், முதல்வரையும் கவனித்துக் கொண்டு, அதிகாரத்தில் கவனமாகக் காய் நகர்த்துகிறது சசிகலா வட்டாரம். 

- ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close