Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதுகள் எத்தனை 'டெசிபல்' ஒலியைத் தாங்கும் ?

          

ந்தியாவில் பத்து பேரில் ஒருவருக்கு காதுகேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், நம் நாட்டில் உள்ள வாகன இரைச்சல், நீண்ட நேரம் அதிகச் சத்தத்துடன் டி.வி. பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை சொல்லலாம். அதிலும் தீபாவளி சமயங்களில் அதிகச் சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

எனவே குறைந்த ஒலியை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதே காதுகளுக்கு நல்லது. செவிடான பிறகு சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. காதொலி கருவிகள் பொருத்தினாலும் துல்லியமாகக் கேட்க இயலாது.

 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் போலீசார் தவறாமல் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாகவே இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில், " தீபாவளி பட்டாசை 125 டெசிபல் ஒலிக்கு அதிகமாக தயாரிக்கவோ, விற்கவோ தடை இருக்கிறது. மீறினால் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொல்லப் பட்டிருக்கும்.

பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல, அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது. ஒரு வாரகாலம் சென்ற பின்னரே, அந்த தாக்கத்தை உணர முடியும். முதலில் தலைவலியை உண்டாக்கும். பின்னர், மூளையின் செயல்பாடுகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதயம், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பட்டாசு வெடிக்கும்போது காதில் வலியும், இரைச்சலும் காணப்பட்டால் சாதாரண வலிதானே என்று இருந்து விடுவது நல்லதல்ல. காது, மூக்கு, தொண்டை மருத்துவ  நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒருவருடைய காது எந்த அளவுக்கு கேட்கும் திறனைப் பெற்றுள்ளது என்பதை பியூர்டோன் ஆடியோ மெட்ரிக் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.  நடு காது, உள் காது ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினையா என்பதையும் கண்டுபிடித்து விடலாம்.

 

ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளவர்கள், பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பிறர் பட்டாசுகளை வெடித்தாலும் அருகே நின்று பட்டாசு புகையை சுவாசிக்கக் கூடாது. பட்டாசு புகையானது, நல்ல உடல் நலத்துடன் இருப்போருக்குக் கூட ஆஸ்துமாவை உண்டாக்கும் ஆபத்து கொண்டது. சளி, இருமல் அலர்ஜியால் பாதிக்கப் பட்டவர்களும் பட்டாசு புகையை சுவாசிப்பது நல்லதல்ல.

    

80 டெசிபல் ஒலி எழும் அளவுக்கு பட்டாசு வெடிப்பவர்கள் விரைவிலேயே காது கேளாமையின் பிடியில் சிக்க நேரிடும். அதிக ஒலியைக் கேட்கும் சூழலில் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, காது கேளாமை கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மனிதனால் 60 டெசிபல் ஒலி அளவுக்குதான் கேட்க முடியும் என்கின்றனர் அவர்கள். 

அனீமியா, சிறுநீரகக் கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிக சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளை வாங்காமல் தவிர்த்தால் அதிக புகையை சுவாசிப்பதையும் தவிர்க்கலாம்.

தமிழகத்தின் நகரெங்கிலும் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு பட்டாசுகளை வெடிக்கப் போகிறவர்களே, இந்த நாட்களில் வீதிகளில் கால் நடைகளான ஆடு, மாடு, கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் உங்கள் கண்ணில் மாட்டுகிறதா பாருங்களேன். அவைகள் பட்டாசுப் பொறிக்கு பயந்து எங்கும் ஓடவில்லை. பட்டாசு வெடிச் சத்தத்தால், தங்களின் காதுகளை காப்பாற்றிக் கொள்ளத்தான் சத்தமே கேட்காத இடமாகப் பார்த்து, பதுங்கிக் கொள்கின்றன. நாமும் பதுங்கத்தான் வேண்டுமா ? பதுங்காமல் இருக்க வேண்டுமானால், நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து, ஒலி குறைந்த, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்கப் பழகுவோம் !

ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close