Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கள்ளச் சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கைது!

நெல்லை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய வழக்கில் அ.தி.மு.க நெல்லை மாநகர மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம்க, கரிவலம்வந்த நல்லூர் அருகே இருக்கிறது, ராமநாதபுரம் கிராமம். ஜெயக்குட்டி என்கிற ஜெயகணேசன் என்பவர், அ.தி.மு.க.வில் நெல்லை மாநகர மாவட்ட மீனவரணி துணைச் செயலாளராக உள்ளார். இவருக்குச் சொந்தமான தோட்டம் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது. அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

தோட்டத்தின் உரிமையாளர் ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகியாக இருப்பதால் அங்கு சென்று சோதனை நடத்துவதில் போலீஸார் தயக்கம் காட்டி உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து, மதுவிலக்கு டி.எஸ்.பி.யான ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் அந்த தோட்டத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு, பேரல்களில் சாராய ஊறல்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. 
சில பானைகளில் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம், நவச்சாரம், பட்டை உள்ளிட்டவை கொன்ட கரைசல் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை அடுத்து சாராயம் தயாரிக்கும் பானைகள் இருந்துள்ளன. அவற்றை அழித்த போலீஸார், அங்கிருந்த சிலரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில வாரங்களாக அங்கு கள்ளச்சாராயம் தயாரித்து வந்ததை ஒப்புக் கொண்டு உள்ளனர். அத்துடன், ஜெயகணேசன் தலைமையில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்ட விவரமும் தெரிய வந்துள்ளது. இதனால் ஜெய கணேசனை கைது செய்ய அவரைத் தேடி போலீஸார் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்த அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உயரதிகாரிகளிடம் புகார் செய்யப்போவதாகவும் மிரட்டி உள்ளார். ஆனால், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததால் கடுப்படைந்த அவர், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து போலீஸாரை சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். சமயோசிதமாக செயல்பட்ட போலீஸார் அவரை கைது செய்தனர். 
ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகி, கள்ளச் சாராயம் காய்ச்சியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டனிராஜ்
 

எடிட்டர் சாய்ஸ்