Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலத்தில் இன்னொரு தங்கமகன்!’ தடைகளை தகர்த்து தேக்வாண்டோ போட்டியில் தங்கம்...!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சேலம் மாரியப்பன்; அதேபோல், அதே மாவட்டத்திலிருந்து ஜீவானந்தம் என்னும் மற்றொரு தங்கமகன் புறப்பட்டிருக்கிறார். இவர், தேக்வாண்டோ பூம்சே போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.

கடந்த 22 மற்றும் 23-ம் தேதிகளில் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் அஷாம்புசன் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச தேக்வாண்டோ பூம்சே போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக கலந்துகொண்ட 16 பேரில் 4 தமிழக வீரர்களும் அடக்கம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் சீனியர் கறுப்புப் பட்டை பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று தமிழகத்தும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூருக்கு அருகே உள்ள சின்னக்காவூரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். கடந்த 25-ம் தேதி பதக்கம் வென்று  திரும்பிய அவரை ஊர்ப் பொதுமக்களும், பெரியார் நகர் அன்னை குழும நண்பர்களும் மாலை அணிவித்து வரவேற்றனர். அத்துடன் அவரை, 2 கி.மீ தூரம் வரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். சேலத்தின் இன்னொரு தங்கமகனாய் ஜொலிக்கும் ஜீவானந்தத்தைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘நான் தேக்வாண்டோ போட்டிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவர் திருச்சி மண்டல காவல் துறை அதிகாரியும், தமிழ்நாடு தேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கமிட்டியின் தலைவருமான மயில்வாகனன் சார். அவர்தான் இன்றுவரை எனக்கு உதவியாக இருந்து என்னை வழிநடத்தி வருகிறார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். அதேபோல், துணைத்தலைவர் கர்னல் சதீஷ் சாருக்கும் பெரியார் நகர் அன்னை குழும நண்பர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். மன உறுதி, ஒழுக்கம், துணிச்சல் போன்றவை தேக்வாண்டோ தற்காப்புக் கலையில் இருப்பதால் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், அதில் சிறுவயதிலிருந்தே பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். சிறுவயதிலேயே என் அப்பா இறந்துவிட்டதால், அம்மாதான் சிறுசிறு வேலைகள் செய்து என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தார். இதற்காக நான் ஸ்கூல் போவதைக்கூட நிறுத்திவிட்டேன்.

 

முதன்முதலில் கணேசன் அவர்களிடம் என்னுடைய பயிற்சியைத் தொடங்கினேன். பின் அவருடைய உதவியால் மேட்டூர் கெம்பளாஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். 1996-ல் இருந்தே மாநில, மாவட்டப் போட்டிகளில் கலந்துகொண்டேன். அதன்பிறகு நடந்த பல தேசியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். 2007-08-ல் சர்வதேசப் போட்டியில் இந்தியா சார்பாக  செலக்ட் ஆனேன். ஆனால் பணம் இல்லாத காரணத்தால் கலந்துகொள்ள முடியவில்லை. 2009-ல் எகிப்து நாட்டில் நடந்த போட்டியில் நான் கலந்துகொள்ள என்னுடைய முழுச் செலவையும் மயில்வாகனன் சார்தான் ஏற்றுக்கொண்டார். அன்னை குழும நண்பர்களும் உதவி செய்தார்கள். ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை; லட்சியம். இந்த வெற்றி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நான் நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வாங்க வேண்டும்.

தற்போது பள்ளிக்கூடங்களுக்கு தேக்வாண்டோ ஆசிரியராக சென்றுகொண்டு இருக்கிறேன். இலவசமாகவும் சொல்லித் தருகிறேன். சர்வதேச பயிற்சியாளர் ஆவதும்  என்னுடைய கனவாக இருக்கிறது. என்னுடைய மாணவர்களையும் தங்கப் பதக்கம் வெல்ல வைக்க வேண்டும். என்னைப் போன்றும், மாரியப்பன் போன்றும் கிராமங்களில் எத்தனையோ திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்க வேண்டும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

வாழ்த்துகள் ஜீவானந்தம்!

- மா.விஜய் சூர்யா
மாணவப் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ