Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகாரிகளின் அலட்சியத்தால் அடுத்தடுத்து பலியான பெண்கள்..! பதற வைக்கும் மரண மருதமரங்கள் (வீடியோ)

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், தாமிரபரணி ஆற்றாங்கரையில் தீப்பிடித்து எரிந்த மருதமரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் பரிதாபமாக பலியாகினர். இதற்கு அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி சபுராள்பேகம். இவர், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்த பிறகு தீபாவளியன்று அம்பாசமுத்திரம், ரயில்வே பாலம் அருகே உள்ள படித்துறையில் குளிக்கச் சென்றார். அப்போது, அங்குள்ள 150 ஆண்டுகள் பழமையான மருதமரம் திடீரென சரிந்து விழுந்ததில் சபுராள்பேகம் பலியாகினார். அவர் அருகில் குளித்த அம்பாசமுத்திரம், சங்கரன்கோயில் சாலையைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி லட்சுமியும் படுகாயமடைந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரும் சிகிச்சை பலனின்றி 30-ம் தேதி இறந்தார். இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மரம் விழுந்து இரண்டு பெண்கள் பலியான சம்பவத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "தீபாவளியன்று திடீரென ரயில்வே பாலம் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழமையான மருதமரம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு போனில் தகவல் கொடுத்தோம். அப்போது எதிர்முனையில் பேசிய தீயணைப்பு ஊழியர்கள் வண்டி வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதாக அலட்சியமாக தெரிவித்தனர். இதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் வரவில்லை. இதனால் மருதமரத்தின் அடிப்பாகம் எரிந்து விட்டது. அதுதெரியாமல் மரத்தின் கீழ் குளித்த இரண்டு பெண்கள் மீது மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து அவர்கள் இறந்து விட்டனர். தீயணைப்பு துறையினரும், பொதுப்பணித்துறை, வருவாய்துறை ஆகியோர் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டு இருந்தால் இரண்டு பெண்கள் பலியாகி இருக்க மாட்டார்கள். மேலும், ஆற்றாங்கரை ஓரத்திலும், சாலை ஓரத்திலும் உள்ள பழமையான மரங்களுக்கு சமூகவிரோத கும்பல்கள் அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆசிட் ஊற்றி அந்த மரத்தை பட வைக்கவும் செய்கிறார்கள். இதன்பிறகு அந்த மரங்கள் பட்டுப்போன பிறகு அதை அங்குள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது" என்றனர்.

 

 

 

இதுகுறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டோம். "மரம் தீப்பிடித்து எரிவதாக தீபாவளியன்று மாலை 3.31 மணிக்கு எங்களுக்கு போன் வந்தது. உடனடியாக அங்கு சென்றோம். மரம் எரியும் இடத்துக்கு தீயணைப்பு வாகனத்தால் செல்ல முடியாதளவுக்கு அந்த பகுதி குறுகலானது. இதனால் ஒரு கி.மீட்டர் நடந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம். நாங்கள் செல்வதற்குள் மரம் முறிந்து விழுந்துவிட்டது. கடந்த பொங்கல் தினத்தன்றும் அந்த மரத்துக்கு சமூக விரோத கும்பல் தீ வைத்துள்ளது. அந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று தீயை அணைத்தோம். அப்போதே மரம் முறிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதனால் அங்கு யாரும் குளிக்க கூடாது என்று எச்சரித்து விட்டு வந்தோம். எங்களது உயிரை பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார். 

'தீயணைப்பு துறை பல மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்ததும், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் அந்த மரத்தை அகற்ற எந்தவித முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இடத்தில் யாரும் குளிக்க வேண்டாம்  என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகையாவது வைத்திருக்கலாம். எதையும் சம்பந்த துறை அதிகாரிகள் செய்யவில்லை' என்கின்றனர் பலியானவர்களின் குடும்பத்தினர். 

பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்துறை ஆகிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள் தீபாவளியன்று பலியாகிய சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ