Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆரிடம் மறைக்கப்பட்ட இந்திரா காந்தியின் மரணச் செய்தி! #FlashBack

1984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்தியாவின் உறுதிமிக்க பெண்மணியான இந்திரா தமிழகத்துடன் மிக நேருங்கிய தொடர்பு கொண்டவர். அவற்றில் சில இங்கே....
இந்தியாவின் மக்கள் ஆதரவு பெற்ற பிரதமர் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

1966 ல் ரஷிய தலைநகரில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்ற லால்பகதுார் சாஸ்திரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போது அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர், இந்திராவை இந்தியாவின் அடுத்த பிரதமராக முன்னிறுத்தினார். மத்திய செய்தி ஒலிபரப்பு மந்திரியாக இருந்த இந்திராவை மொரார்ஜிதேசாய் என்ற கட்சியின் மிக மூத்தவரும் சக்தி மிக்க அரசியல்வாதியையும் மீறி தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்தியாவின் பிரதமராக்கி அவரை தலைவராக அங்கீகரிக்கச் செய்தவர் தமிழரான காமராஜர்தான்.

றைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மிகவும் பிடித்த உடை சேலை. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுச்சேலை. காஞ்சிப்பட்டின் டிசைன்களுக்கு அவர் பெரும் ரசிகர். தமிழகத்திலிருந்து அவரை மரியாதை நிமித்தம் சந்திக்கச் செல்கிறவர்கள் காஞ்சியில் நெய்த பட்டுச்சேலையைதான் அவருக்கு பரிசளிப்பார்கள். அவற்றிலுள்ள டிசைன்களை அவர்களிடம் விளக்கச்சொல்லி கேட்டு மகிழ்வார் அவர். சேலையணிந்த பூவும் பொட்டுமாக தலையில் பூச்சுடி ஒரு தமிழ்பெண்மணி போன்ற தோற்றத்தை அவர் பெரிதும் விரும்பினார்.

ன்னை எதிர்த்துநின்ற பெரும் அரசியல்தலைவர்களை தன் ஒரே கையெழுத்தில்  எமர்ஜென்சி கொண்டுவந்து சமாளித்த அதிரடி அரசியல் தலைவர் இந்திரா. இந்திரா கொண்டுவந்த எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். குறிப்பாக கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த பத்திரிகைகளும் தமிழகத்தைச் சேர்ந்தவையே.

தமிழகத்தில் வேரூண்றியிருந்த திராவிட இயக்கம்  நேரு காலத்திலிருந்தே காங்கிரசுக்கு குடைச்சல்தந்த விஷயம். தந்தையால் நான்சென்ஸ் என்று எரிச்சலான  வார்த்தையை பெற்ற திமுக, இந்திராவுக்கும் அதே படபடப்பை பின்னாளில் தந்தது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வலிவை குறைக்கும் முகமாகத்தான் இந்திராவின் சாணக்கியத்தனத்தால் திமுக எம்.ஜி.ஆர் பிளவு நிகழ்ந்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார் தன் நெஞ்சுக்கு நீதி நுாலில். பின்னாளில் திராவிட இயக்கங்கள் இந்திராவுக்கு சகலைகளானது வேறு விஷயம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஊறி வளர்ந்தவர் என்றாலும் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த குடும்பம் என்ற அடிப்படையில் நேரு குடும்பத்தின் மீது ஒருவித பாசம் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். இந்திரா கொண்டுவந்த 'இருபது அம்ச திட்டத்தை எல்லோரும் வசைபாடிக்கொண்டிருந்தபோது அதை மறைமுகமாக தம் படங்களில் காட்சிகளாக அமைத்ததோடு அதை வெகுவாக பாராட்டி பேசியவர் எம்.ஜி.ஆர்.

1984 ல் எதிர்பாராதவிதமாக உடல்நலம்குன்றிய எம்.ஜி.ஆரை சிறப்பு விமானத்தில் வந்து சென்னை அப்பல்லோவில் பரிவோடு பார்த்து சென்றவர் இந்திரா. இந்திராவின் விரைவான நடவடிக்கையால்தான் உடனடியாக அமெரிக்கா அழைத்துச்செல்லப்பட்டு எம்.ஜி.ஆரை காப்பாற்ற முடிந்தது.  அமெரிக்க மருத்துவமனையில் அரைகுறை உணர்வோடு அவர் இருந்தபோதுதான் இந்திராவின் கொடூர மரணம் நிகழ்ந்தது. ஆனால் தகவல் அவருக்கு சொல்லப்படவில்லை. காரணம் அவரது மனநிலையை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அவருக்கு தெரிவிக்கக்கூடாதென்ற மருத்துவர்களின் எச்சரிக்கை. பூரண நலம்பெற்று சில மாதங்களுக்கு பின்னரே இந்திராவின் மரணம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்தவர் அங்கிருந்தவர்களை அறையிலிருந்து வேளியேறச் சொல்லிவிட்டு கதறி அழுதார் என்பார்கள். அத்தனை பிரியம் இந்திராமீது அவருக்கு.

ந்திராவை அதிகம் அசைத்துப்பார்த்த தமிழக தலைவர் கருணாநிதி. அரசியல் களத்தில் வேறு எந்த தமிழக தலைவரும் இந்திராவுக்கு அந்தளவுக்கு டஃப் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஊடலும் கூடலுமாக திமுக- காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் பல அரசியல் சர்ச்சைகளை கொண்டது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த பிறிதொரு சந்தர்ப்பத்தில் சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில், 'கருணாநிதி நான் மதிக்கும் மனிதர்களில் விந்தையானவர். நண்பர் என்றால் நண்பர், விரோதி என்றால் விரோதி. ஒருவரைப்பற்றி இதில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் உறுதியாக நிற்பார் அவர்” என கடந்த காலங்களை அசைப்போட்டபடி கருணாநிதியை திரும்பிப்பார்த்தபடி குறிப்பிட்டார்.

ஞ்சை பெரிய கோவில் அரசியல்தலைவர்களுக்கு ராசியற்ற கோவிலாக கடந்தகாலத்தில் கூறப்படுவதுண்டு. அந்த கோவிலுக்குச் சென்று வந்தபின் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியதாகவும், கோவிலின் பிரகாரத்தில் வராஹி என்ற அம்மன் சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தபோதுதான் கருணாநிதியின் ஆட்சி பறிபோனதாகவும் பேசப்படுகிறது. இந்த வதந்தியில் சிக்கிய வட இந்திய தலைவர் இந்திராவும் ஒருவர். அதாவது அந்த புதிய வாராஹி அம்மன் சிலை அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டதனாலேயே தம் பிரதமர்  பதவியை அவர் இழந்தார் என்பார்கள்.

த்தியில் ஆட்சியை இழந்திருந்த இந்திராகாந்தி அன்றைய எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் போட்டியிடும் வாய்ப்பு ஒன்று உருவானது. ஆனால் அன்றைய அரசியல் சூழலினால் அந்த வாய்ப்பை தமிழகம் இழக்கநேர்ந்தது. ஒருவேளை தமிழகத்தில் அவர் போட்டியிட்டிருந்தால் மத்திய அரசில் தமிழகத்தின் மீதான பிம்பம் களைந்து தமிழகம் இன்னும் பலபடிகள் முன்னேறியிருந்திருக்கலாம்.

காங்கிஸ் உடைந்து இந்திரா காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என இயங்கிவந்தபோது காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சம் வலுவிழந்து போய்க்கொண்டிருந்ததை காமராஜர் வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். காமராஜரின் மனவேதனையை உணர்ந்து இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து செயல்பட இந்திராவிடம் துாது சென்றவர் ஒரு தமிழக பத்திரிகையாளர். மீண்டும் ஆட்சித்தலைமை மற்றும் கட்சித்தலைமை என இரண்டு அதிகார மையங்கள் உருவாவதை விரும்பாத இந்திராவின் இயல்பான குணம், அதை ஏற்கவில்லை. ஒருவேளை தமிழக பத்திரிகையாளரின் கோரிக்கைக்கு இந்திரா அப்போதே செவிமடுத்திருந்தால் காங்கிரஸ் இன்று ஆளும்கட்சியாகக்கூட தமிழகத்தில் வலுப்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close