Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யானைகளுக்குப் பிடித்ததைப் பயிரிடக் கூடாது என்பதுதான் தீர்வா...? (வீடியோ)

கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்த நிலையில், நேற்றிரவு மீண்டும் இரண்டாவது நாளாக வாழைத் தோட்டத்தில் நுழைந்து 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சூறையாடிய சம்பவம் பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.

திருமலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜூக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் வாழை, தக்காளி உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த தோட்டதுக்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழைத் தோட்டத்துக்குள்ளும் புகுந்து சில வாழை மரங்களையும் சாய்த்துச் சென்றன. பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையை காட்டுயானைகள் தாக்கி அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றை சாப்பிட்டுள்ளன.

 

 

 

பின்னர் அதிகாலையில் அங்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வீசி யானைகளை விரட்டினர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றிரவு சுமார் 9 யானைகள் கொண்ட கூட்டம், மீண்டும் அப்பகுதிக்கு வந்து, கோயாஸ் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் சுற்றுச்சுவரை தாக்கி சேதப்படுத்தின. மேலும் அங்கிருந்த வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து  அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 600 வாழை மரங்களை சாய்த்து, 3 மணி நேரத்துக்கும் மேலாக சூறையாடின. இதனால் பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசுகளை வீசி யானைகளைத் துரத்தினர். பின்னர் அந்த யானைகள் அனைத்தும் அப்பகுதியிலுள்ள மற்றொரு தோட்டத்தில் தஞ்சம் புகுந்தன.

வனங்களிலிருந்து ஏன் யானைகள் வெளியேறுகிறது? என்று ஆராயாமல் , மீண்டும் வனத்துறையினர் வன எல்லையை ஒட்டியுள்ள விவாசாயத் தோட்டங்களில் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை பயிரிட வேண்டாம் என்று அப்பகுதி மக்களை அறிவுறுத்துகின்றனர்.

யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்துவது சமீபகாலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து, பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

மத்திய-மாநில அரசுகள், வன ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத வரை , அனைவருக்கும் சேதம் தான்.

- தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்