Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு 60 : இன்றைய நாளின் சபதமாக இது இருக்கட்டும்...! #TamilNadu60

மிழ்நாடு தன் 60-வது உருவான தினத்தைக் கொண்டாடுகிறது. அது, என்ன மாநிலம் உருவான தினம்... மாநிலம்  எங்காவது உருவாகுமா? ஆம், மாநிலம் உருவாகும். சென்னை மாகாணம் நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, நம் எல்லைகளைக் களவாட அனைத்துத் தந்திரங்களையும் அண்டை மாநிலங்கள் கையாண்டன. சென்னையை எடுத்துச்செல்ல ஆந்திரமும், கன்னியாகுமரியைக் கைப்பற்றக் கேரளமும் துடித்தன... எல்லைகளை இருள் சூழ்ந்தபோது, ம.பொ.சி., சங்கரலிங்கனார், அண்ணா, நேசமணி போன்ற தலைவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்... மக்களைத் திரட்டினார்கள். அவர்கள், பிரசவம் பார்த்ததால்தான் தமிழ்நாடு பிறந்தது. அவர்கள் எமக்கேன் என்று ஒதுங்கி இருந்தால், வட சென்னை ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்... திருத்தணி முருகனை தரிசிக்க நாம் ஆந்திரம் செல்ல வேண்டி இருக்கும்... கோலார் போனதுபோல் ஓசூரும் கர்நாடகா வரைபடத்தில் இருந்திருக்கும். போராடிப் பெற்றதுதான் இன்று நாம் வாழும் நிலப்பரப்பு... அந்த நிலத்தை நாம் முறையாகக் காக்கிறோமா?

கழிவான ரத்தநாளங்கள்!

‘‘அண்டமே பிண்டம்’’ என்றார் திருமூலர். எப்படி இந்த உலகம் பஞ்சபூதங்களின் கலவையோ... அதுபோலத்தான் மனித உடலும். இதை நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. இப்போது, கொஞ்சம் உங்கள் விழிகளை மூடுங்கள்... உங்கள் பிண்டத்தில் ரத்தத்துக்குப் பதிலாக கழிவுநீர் ஓடுவதாக; உங்கள் நுரையீரல் முழுவதும் நஞ்சு படிந்து இருப்பதாக; உங்கள் கல்லீரலில் மெர்க்குரியின் துகள்கள் படிந்திருப்பதாக நினைத்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது அந்த நினைப்பே உங்களை அச்சுறுத்துகிறதா... மயக்கம் வருகிறதா?

சரி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துக்கொள்ளுங்கள். அய்யோ... அந்தத் தண்ணீராவது தூய்மையானதா? சாயப்பட்டறைகளின், தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்காததா...?

இப்படியாகத்தானே இருக்கிறது தமிழ்நாட்டின் நிலை...? உங்கள் பிண்டத்தில், ரத்தநாளங்கள் உங்கள் உடலுக்கு பிராணவாயுவை கடத்தும் உயிர்காப்பான் என்றால், இந்த அண்டத்தில் ஆறுகள்தானே ரத்தநாளங்கள். உங்கள் ரத்தத்தில் பில்ருபின் அளவு 5-ஐத் தாண்டினால் மரணம் என்கிறது மருத்துவம். அதுபோலத்தானே ஆறுகளுக்கும். நாம் கழிவுகளைக் குவித்துக்கொண்டேபோனால் அது மரணித்துவிடாதா...? ‘நதி மரணிக்குமா’ என்று கேட்காதீர்கள். ஏரல் கடலை (ஏரியை)-யே கொன்றவர்கள் மனிதர்கள்...!

 

நம் முன்னோர்கள் தமிழ்நாட்டு எல்லையில் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் மீட்க பெரும் போராட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்... குருதி சிந்தி இருக்கிறார்கள். ஆந்திர தலைவர்கள் கூவத்தை எல்லையாகவைத்து வட சென்னையை ஆந்திராகவும், தென் சென்னையை தமிழ்நாடாகவும் பிரித்துக்கொள்வோம் என்று பிதற்றியபோது பொங்கி எழுந்தார்கள் நம் பாட்டனார்கள். அப்படிப் போராடி பெற்ற கூவத்தை, கொசஸ்தலையை நாம் இன்று எப்படி வைத்திருக்கிறோம்...?  ம.பொ.சி-யின் ஆன்மாகூட நம் முகத்தில் காறி உமிழும்.

அண்டை மாநிலத்தின் குப்பைத்தொட்டி...!

ஆறுகள் பிராணவாயுவைக் கடத்தும் ரத்தநாளங்கள் என்றால், மலைகளும் காடுகளும்தான் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் கிடங்குகள். இன்று அந்தக் கிடங்குகளின் நிலை என்ன... கிரானைட், தாது என்று நாம் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்தானே...? நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு பி.பி.எம் மூச்சுக்காற்றிலும், மேற்குத் தொடர்ச்சி மலை கலந்திருக்கிறது. அந்த மலை சிதைந்தால் நாம் சிதைக்கிறோம் என்றுதானே அர்த்தம். இன்று  நாம் அதைச் சிதைத்துக் கொண்டிருக்கவில்லையா... இதை இன்று பார்த்தால் மார்ஷல் நேசமணிக்கு நெஞ்சடைக்காதா...?

 

தன் ஆற்றிலிருந்து ஒரு பருக்கை மண்ணைக்கூட எடுக்காத அண்டை மாநிலங்களுக்கு, லாரி லாரியாக இங்கு தமிழ் முதலாளிகள்தான் மண்ணை அனுப்புகிறார்கள். இதற்காகத்தான் உணவருந்தாமல் மாண்டுபோனாரா சங்கரலிங்கனார்...?

இதற்கெல்லாம் மேலாக, தமிழ் நிலத்தை அண்டை மாநிலங்கள் குப்பைத்தொட்டியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இங்கு ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி பயிர் வளர்க்கலாம்.... குப்பைக்கிடங்கைக் கட்டி அமைக்கலாமா? பாலக்காட்டிலிருந்து கோவை பகுதியில் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்ட வரிசையாக வண்டிகள் நிற்கின்றன... தினம் தினம் கோவையில் மட்காத ரசாயனக் குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்கின்றன. இதைப் பார்த்தால் நிச்சயம் தோழர் ஜீவானந்தம் மூச்சுமுட்டியே இறந்துபோயிருப்பார்.

ஆற்றை, கழிவுநீர் பெருவாய்க்காலாக மாற்றி, காடழித்து கல் சமைக்கவா நம் பாட்டனார்கள் தாய்நிலத்தை மீட்டார்கள்..? தமிழன் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பிரித்துவாழ்ந்தான்.

நிலம், பொழுது ஆகிய இரண்டும்தான் முதற்பொருள். இதன்மீதுதான் அனைத்தும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதை நவீன அறிவியலும் ஆமோதிக்கிறது. நிலம் இல்லை என்றால் வாழ்வில்லை; பண்பாடு இல்லை; நாகரிகம் இல்லை. ஆம், நிலம் இல்லை என்றால் இங்கு நமக்கு எதுவும் இல்லை. அது தெரிந்துதான் நம் பாட்டன்கள் நல்வாழ்வுக்காகப் போராடினார்கள்... நாளை நம் பிள்ளைகளும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புவோமாயின்... அந்த நிலத்தைக் காப்போம்!

இதுவே இந்த நாளின் சபதமாக இருக்கட்டும்...!

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close