Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழர்களை பிளவுப்படுத்தியதே இன்றைய தலைவர்கள்தான்...! - கொதிக்கும் பழ. நெடுமாறன்

ந்தியாவில், மொழிவாரி மாநிலங்கள் பிரிவில், தமிழர்களுக்கென தனி மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகளைக் கடந்து 60-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நந் நாள் இது!

இந்த நிலையில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழுந்த காலகட்டங்களில் தமிழகம் எதிர்கொண்ட எதிர்ப்புகள், 60 ஆண்டுகால தமிழக அரசியல் பயணம், தற்போது தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் என பல்வேறு வகையான கேள்விகளோடு தமிழர் தேசிய முன்னணித் தலைவரான பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தோம்.. இனி அவருடன்

''மொழி வாரிப் பிரிவினையில் உருவாக்கப்பட்ட தற்போதைய தமிழ்நாடு வரைபடம் உங்களுக்கு ஏற்புடையதுதானா?''

''சேர, சோழ, பாண்டியர்களில் ஆரம்பித்து பல்லவர், நாயக்கர், மராட்டியர் வரை அனைவருமே சிதறுண்டு கிடந்த தமிழ் மண்ணை ஆண்டார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும்கூட மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பேசும் பகுதிகளோடு சேர்த்து 'சென்னை மாகாணம்' என்ற சிறைக்குள்தான் தமிழ்நாடும் அடைபட்டுக் கிடந்தது. ஆக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைக்கப்படவே இல்லை.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று மொழிவாரிப் பிரிவினையின்போது வடவேங்கடம், தேவிகுளம்,  பாலக்காடு, சித்தூர், நெய்யாற்றங்கரை, கொள்ளேகால் எனப் பல பகுதிகளை நாம் இழந்திருந்தாலும்கூட கிட்டத்தட்ட பெருவாரியான தமிழ்பேசும் பகுதிகளை ஒருங்கிணைத்து தமிழ் மாநிலம் உருவாக்கப்பட்டது. இழந்த பகுதிகளை மீட்கவும் இருக்கும் பகுதிகளை காக்கவும் இந்நாளில் உறுதி கொள்வோம். ''

''சரித்திரப் பெருமைவாய்ந்த இந்த நிகழ்வினை தமிழகம் உரிய முறையில், போற்றிக் கொண்டாடுவதாக நினைக்கிறீர்களா?''

''தமிழகமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரை தமிழக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த எந்த அரசியல் கட்சிகளும் இந்த நன்னாளை அரசு விழாவாகக் கொண்டாடவே இல்லை. கட்சிகளும் கொண்டாடத் தவறிவிட்டன. 60-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளிலாவது கவனம் எடுத்து கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், கட்சித் தலைவர்களோ பெயரளவுக்கு வாழ்த்து அறிக்கைகள் கொடுத்ததோடு முடித்துக் கொண்டார்கள். ''

''தமிழ் மாநில உருவாக்கத்தில் அன்றைய அரசியல் கட்சிகள் அக்கறையுடன் ஒன்றுபட்டு நின்றது. இன்றைக்கு அந்த நிலை இல்லை என்கிறீர்களா?''

''நிச்சயமாக.... அன்றைக்கு அரசியலில் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டத் தலைவர்களும்கூட தமிழர் நலன் என்ற விஷயத்தில் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுத்தார்கள். ராஜாஜி முதல்வராக இருந்த காலகட்டத்தில், சென்னை மீது ஆந்திர மக்கள் உரிமை கொண்டாடினர். ஆனால், எந்தக் காலத்திலும் சென்னை ஆந்திராவுக்கு உரியதல்ல என்ற முடிவில் பிடிவாதமாக மறுத்து வந்தார் ராஜாஜி. அவரது நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக பெரியார், ம.பொ.சி. காமராஜர், அண்ணா, ஜீவா என அனைவரும் அவரோடு கைகோத்து உறுதியாக நின்ற காரணத்தினாலும் 'சென்னை தமிழகத்துக்கு சொந்தமானது' என சென்னை மாநகராட்சித் தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தினாலும்தான் இன்றைக்கு சென்னை தமிழ்நாட்டோடு இருக்கிறது. ஆக, அரசியலில் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும்கூட தமிழர் நலன் என்று வரும்போது அன்றையத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். போற்றத்தக்க இந்தப் பண்பு இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களிடம் கிஞ்சித்தும் இல்லை.''

''காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என இன்றைக்குத் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் எப்படி எதிர்கொண்டனர்?''

''தமிழகத்தில் காமராஜர் முதல்வராக பதவி வகித்தவரையில் தமிழகத்தில் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எழவே இல்லை. காரணம் அவர் அண்டை மாநிலங்களோடு நல்ல நட்புறவில் இருந்தார். அப்போது நீலகிரி ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்தில் ஓடும் பல்வேறு நதிகளைத் திருப்புவதற்கு பரம்பிக்குளம் ஆழியாறுத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த நதி நீரை இரு மாநிலங்களும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக திட்டம் தீட்டப்பட்டது. கோவையின் வறண்ட பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதியும் கேரள மக்களுக்கு மின்சார வசதியும் இந்தத் திட்டத்தினால் இன்றுவரை கிடைத்துவருகிறது. அன்றைக்கு கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஈ.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசும் தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசும் பொதுநலன் சார்ந்து ஒன்றுபட்டு இந்த முடிவை எடுத்ததால் கிடைத்த பயன் இது. ஆக, 1967-ம் ஆண்டுவரையில் தமிழகம் நதிநீர்ப் பிரச்னைகளால் பாதிக்கப்படவே இல்லை.''

''முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அன்றைய கேரள அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது?''

''ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பெரியாறு அணையில், மீன் பிடிக்கிற உரிமை, சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்தக்கூடிய உரிமை என அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு இருந்தாலும்கூட காமராஜர் அந்த உரிமைகளை கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தார். ஏனென்றால், அங்கே போய் நமது மக்கள் மீன் பிடித்து வருவது இயலாத காரியம். மேலும், கேரளா வழியாகத்தான் சுற்றுலாப் பயணிகள் பெரியாறுக்கு செல்லும் வழி உள்ள காரணத்தினாலும் இவ்வாறு விட்டுக் கொடுத்தார் காமராஜர். அதேநேரத்தில், பெரியாறு அணையில் இருந்து மின்சாரம் பெறும் உரிமையை தமிழகத்துக்கு எடுத்துக்கொண்டார். இப்படி இரு மாநில உறவும் ஆரோக்கியமான நிலையில் இருந்ததால், அன்றைக்கு எல்லாமே சுமூகமான நிலையில் தொடர்ந்தது.''

''இன்றைக்கு காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இரு மாநிலங்களுமே கடைப்பிடிக்க மறுக்கின்றனவே....?''

''உண்மைதான்.... முல்லைப் பெரியாறில் 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வந்துவிட்டது. காவிரி பிரச்னையிலும் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு வந்த பின்னரும்கூட மத்திய அரசு அதனை நிறைவேற்றத் தவறுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாநில அரசுகள் இப்படி மீறிக்கொண்டு இருப்பதை காங்கிரஸ், பி.ஜே.பி என மத்திய அரசுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தேசிய ஒருமைப்பாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  குறிப்பாக கர்நாடகாவில் ஆளும் கட்சியாக வரக்கூடிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் இப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறுவதைக் கண்டிக்கும் பொறுப்பு அக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைக்கு இருக்கிறது. 

சித்தராமையா தீர்ப்பை மீறுகிறார் என்றதும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு சித்தராமையாவைக் கண்டித்திருக்க வேண்டும். அதேபோல், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னபிறகும் அதை அமைக்காமல் காலம் கடத்தும் பிரதமர் மோடியின் தந்திரம் என்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரும் தீங்கிழைக்கும் செயல்; இதை பிரதமரும் உணர மறுக்கிறார். ஆக, இந்த இருபெரும் கட்சிகளுமே தங்களது சொந்தக் கட்சி நலனுக்காக நாட்டின் நலன்களைப் பலிகொடுக்கத் தயாராகிவிட்டனர்.''

''பிற மாநிலங்கள் தங்களது மாநில நலனில் ஒன்றுபட்டு நிற்கும்போது தமிழகக் கட்சிகள் மட்டும் சுயநல சிந்தனையோடு பிரிந்துபட்டு நிற்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''காமராஜர், ராஜாஜி, பெரியார், அண்ணா என அன்றையத் தலைவர்களிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட தமிழர் நலனை பாதிக்கக்கூடிய பிரச்னை என்று வரும்போது பரந்த மனப்பான்மையோடு ஒன்றுபட்டு நிற்கும் உயர்ந்த நோக்கம் இருந்தது. ஆனால், இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களிடம் அந்த நோக்கமோ, பண்பாடோ இல்லை.ஓற்றுமையாக இருந்த தமிழர்களை பிளவுப்படுத்திய பொறுப்பு இப்போதையத் தலைவர்களையே சாரும். 

அன்றைக்கு அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது உடல்நலமில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், அண்ணாவை சந்தித்து 'நீங்கள் தைரியமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்புங்கள். நீங்கள் திரும்பிவரும் வரை உங்கள் அரசுக்கு எதிராக எங்கள் கட்சி எந்தப் போராட்டமும் நடத்தாது. நீங்கள் நிம்மதியாக சென்று உடல்நலத்தை தேத்திக்கொண்டு வாருங்கள்' என்று சொன்னார்.  அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த உயரிய பண்பாடு இன்றைய தலைவர்களிடம் எங்கே இருக்கிறது?

முதல்வர் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால், அதையும் அரசியலாக்கி கொச்சைப்படுத்துகிற போக்குதானே இங்கே நடக்கிறது. ஒரு பெண்ணென்றுகூட பாராமல், புகைப்படத்தை வெளியிடுங்கள் என்றெல்லாம் மனிதாபிமானம் அற்று கேட்கும் தலைவர்கள்தானே இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை மக்கள் ஒற்றுமையோடும் நல்ல சிந்தனைகளோடும்தான் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் மட்டுமின்றி பல்வேறு தளங்களிலும் இன்றைய அரசியல் தலைவர்கள்தான் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தி விட்டார்கள்!''

- த. கதிரவன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close