Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எட்டாம் வகுப்பு வரை ’all pass’... வேண்டுமா... வேண்டாமா?

சமீபத்தில் நடந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையில் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் என்ற மாற்றத்தை தமிழக கல்வித் துறை அமைச்சர் ம.பா. பாண்டியராஜன் எதிர்த்திருந்தார். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது உண்மையில் நன்மை பயக்குமா? அல்லது பாதகத்தை விளைவிக்குமா என்ற விவாதத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் அனைவருக்கு கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர்.

யூனிசெப் நிறுவனத்தின் கல்வி உரிமை அமைப்புக்கான முன்னாள் ஆலோசகர் வித்யசாகர் "முன்னரே தேர்வு நடத்தி அடுத்த வகுப்பு என்று சொல்லும்போது நிறைய குழந்தைகள் இடையில் நின்று விடுகிறார்கள். இதனால் குழந்தை தொழிலாளர்கள் உருவாகிறார்கள். எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பது என்பது நல்ல விஷயம் தான். இதன் மூலம் மற்ற வகுப்பில் இடைநிற்றலை குறைத்துவிட முடியும். இன்றைக்கு 65% மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்று வருபவர்கள் தான். எல்லோரும் பாஸ் செய்வது, எல்லோரும் தகுதியுடன் தான் வருகிறார்கள் என்று பொருள். ஆனால் எட்டாம் வகுப்புக்கு முன்பு உள்ள வகுப்பில் படிக்கும் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்து பார்த்ததில் தமிழகம் மிகவும் பின் தங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த ஆராய்ச்சியில் எட்டாம் வகுப்பு மாணவருக்கு இரண்டாம் வகுப்பு புத்தகத்தில் உள்ளதை படிக்கத்தெரியவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆகையால் தரம் முக்கியம். எட்டு வகுப்பு வரை தேர்ச்சி என்பதை மட்டும் வலியுறுத்தாமல் அனைவரும் ஒரு மாதிரியான தகுதியினை வளர்ப்பதற்கான முயற்சியில் மேற்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியின் அடிப்படையில் இரண்டு பிரிவாக பிரிக்கிறார்கள். அதிக திறனுடைய குழந்தைகள், குறைந்த திறனுடைய குழந்தைகள் என்று பிரிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்பு எட்டாம் வகுப்பில் முடித்த பின்பு மீண்டும் இரண்டாக பிரித்து முதல் தரத்தில் உள்ளவர்களை அறிவியல் சார்ந்த படிப்புகளையும், இரண்டாவது தரத்தில் உள்ளவர்கள் தொழில் படிப்புக்கும் பிரிக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது மாணவர்களின் நலனுக்கு உகந்தது அல்ல. மேலும் பொருளாதார அளவில் மிகவும் சிறப்பாக இருப்பவர்கள் மட்டும் முதல் தர கல்வி என்ற நிலை உருவாகி விடும். இதனையும் எதிர்க்க வேண்டும்” என்று சொன்னார்.

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் "எட்டாம் வகுப்பு வரை பாஸ் செய்யப்படுவதால் எந்த நன்மையும் விளைகிறதா என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை. எட்டாம் வகுப்புக்கு பின்னர் மிகப்பெரிய இடைநிறுத்தல் ஏற்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் கற்றல் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு பல செயல்களைச் செய்ய வேண்டும். முதலில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க வேண்டும்.

அடுத்து கற்றல் குறைபாட்டை கண்டறிவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதன் பின்பு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து சிறப்பு பயிற்சியளிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 20 பிள்ளைகள்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் 30 பிள்ளைகள் வரை படிக்கலாம் என்று அரசு சொல்கிறது. ஆனால் உண்மை நிலையில் அவ்வாறு இருப்பதில்லை. இருபது பிள்ளைகள் மட்டும் இருந்தால் மட்டுமே கற்றல் குறைப்பாட்டை கண்டறிய முடியும். கும்பலாக அதிக குழந்தைகள் படிக்கும் போது குழந்தைகளின் கற்றல் குறைப்பாட்டை கண்டறிவது கடினம். 20 பிள்ளைகள் இருந்தால் அவர்களின் கற்றல் ஜாதகம் ஆசிரியர்களின் கையிலிருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு கண் பார்வை குறைபாடும் இருக்கும். இந்த குறைபாட்டை பிள்ளைகளுக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து நீக்கப்பட வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உள்ள குழந்தைகளுக்கு நல்ல கற்றலும், உடல்நிலையும் சிறப்பாக இருக்கும். இதனையும் புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வரும்போது, குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். அதற்குப் பதிலாக எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பதை மட்டுமே வலியுறுத்தி ஒரு நன்மையும் இல்லை” என்கிறார். வாசகர்கள் தங்களுடைய கருத்து என்ன என்பதையும் பதிவு செய்யுங்கள். எதிர்கால கல்விக்கு உதவிகரமாக இருக்கும்.

 - ஞா. சக்திவேல் முருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ