Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”என்னை பேலியோ பிரம்மா என குறிப்பிட வேண்டாம்!” - நியாண்டர் செல்வன் பேட்டி

 


சென்னை புத்தகச்சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்ற புத்தகம் நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்" என்கிற புத்தகம்தான். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களின் உணவுமுறைதான் இன்றைய நவீன வாழ்க்கையின் பிரச்னையாக இருக்கும் நீரிழிவு மற்றும் ஒபிசிட்டிக்கு தீர்வு என அது முன்வைத்தது. பேஸ்புக்கில் தினமும் நூற்றுக்கணக்கில் ஆட்கள் இணையும் குழுவாக பேலியோ உணவு முறையை பின்பற்றும் 'ஆரோக்கியம் & நல்வாழ்வு' குழு உருவாகியுள்ளது. அந்த குழுவில் இணைந்து குறிப்பிட்ட லேப் டெஸ்ட் ரிசல்ட்டை பகிர்ந்தால் என்ன மாதிரியான உணவு சாப்பிடலாம் என டயட் சார்ட் அளித்து வந்தார்கள். நேற்று முன் தினம் இரவு முதல் பேலியோ குழுவின் நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர் என்றும் அதனால் இனி டயட் சார்ட் வழங்கப்போவதில்லை என்றும் அறிவித்தனர். இந்நிலையில் நியாண்டர் செல்வன் விகடனுக்கு அளித்த பேட்டி.

"என்னதான் ஆச்சு பேலியோ குழுமத்துக்கு?"

நாங்கள் குழுவை துவக்குகையில் குழு இத்தனை பெரிய வளர்ச்சி அடையும் என நினைக்கவில்லை. குழுவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐம்பதாயிரம் பேர் சேர்ந்தார்கள். ஏராளமான மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் வந்தன. முகநூலில் குழும மாடலில் கன்சல்டிங் செய்வதில் இருக்கும் சிக்கல் என்னவெனில் ரிபோர்ட்டுகளை பகிரங்கமாக தான் பகிரமுடியும். இது பிரைவசி சிக்கல்களை உருவாக்கியது. எனவே மெடிக்கல் ரிப்போர்ட்களை எங்களிடம் தனிப்பட்ட முறையில் பகிர வலைதளம் துவக்கும் முயற்சிகளில் இறங்கினோம்.

இந்தச் சூழலில் பொய்யாக ஒரு மெடிக்கல் ரிபோர்ட்டை தயார் செய்து பேலியோவால் பாதிக்கப்பட்டவர் என ஒருவரை முன்நிறுத்தும் முயற்சிகள் நடப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் மூலம் தகவல் வந்தது. நாங்கள் 30 பேர் இருந்த குழுமமாக இருந்த மாடலிலேயே இன்று 1.5 லட்சம் பேர் இருக்கும் நிலையிலும் இயங்கி வந்தோம். எந்த டயட் சார்ட்டுக்கும் கட்டணம் பெறாத இலவச சேவையை அளித்து வந்தோம். பேலியோவால் பாதிக்கப்பட்டவர் என ஒருவரும் இல்லை. அப்படி ஒருவரை கண்டுபிடிக்க பலர் தலைகீழாக நின்றார்கள். பலரும் பேலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமடல் அனுப்புங்கள் என முகநூலில் பகிரங்கமாக நிலைப்பதிவுகளை இட்டும் ஒருவர் கூட அவர்களிடம் தொடர்புகொள்ளவில்லை. ஏனெனில் அதன்பின் அவர்கள் அப்படி ஒருவரையும் கொண்டுவரவில்லை. ஆனால் இப்படி ஒரு தகவல் வந்ததும், அது நடக்கும் வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்தோம். அதன்பின் அப்படி ஒரு சிலர் முயல்வதாக ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்தன. அது குறித்து எச்சரிக்கை செய்து எழுதப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்டுகள் கிடைத்தன. அதனால் கன்சல்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறோம். இதை குழுவில் தெரிவித்தபோது குழுவினர் மிகுந்த உணர்ச்சி வசபட்டார்கள். உதவுவதற்கு பலர் முன்வந்தார்கள். மற்றபடி இதை எங்கள் சேவைகளை மேம்படுத்தவும், சீரமைக்கவும் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறோம்.  

"தனிப்பட்ட முறையில் குழு உறுப்பினர்களுக்கோ அட்மின்களுக்கோ மிரட்டல் வந்துள்ளதா? அப்படியெனில் யாருக்கு? மிரட்டியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா?" 

அடிப்பேன், உதைப்பேன் என ஆள்வைத்து மிரட்டுவது பழையபாணி. இன்றைய எதிர்ப்புகள் மிக நுட்பமாக அடி, உதையையே மிஞ்சும் நவீன தொழில்நுட்பத்தில் வருகின்றன. முன்பு பெண்களை ரோட்டில் துரத்திய ரோட்சைட் ரோமியோக்கள் இன்று முகநூலில், வாட்ஸ்அப்பில் அதை செய்யும் அளவு தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதே மாதிரிதான் பேலியோவை எதிர்ப்பவர்களும் இருக்கறார்கள்.
அடிப்பேன், தாக்குவேன் என கூறுவது மட்டும் மிரட்டல் அல்லவே? சட்டபூர்வமாக ஒருவருக்கு வக்கீல் நோட்டிஸை முறையாக அனுப்பி வைப்பதும் மிரட்டல் தானே? சட்டபூர்வமான மிரட்டல் என வைத்துக்கொள்ளலாம். அதன்பின் அதை வைத்து காவல்துறையிடம் புகார் அளிக்க முடியாது. எங்களுக்கு தனிபட்டு பர்சனலாக யாரும் மிரட்டல் கால் விடவில்லை. அதனால் போலிஸில் புகாரும் அளிக்கும் அவசியம் வரவில்லை.

"நீங்கள் பேலியோ முகநூல் பக்கத்தில் விளம்பரங்கள் வெளியிடப்போவதாக அறிவித்த பிறகு இப்படியான மிரட்டல்களும், புகார் வதந்திகளும் எழுந்துள்ளது குறித்து?"

"பேலியோ வெப்சைட் உருவாக்கும் முயற்சியில் பல குழும உறுப்பினர்கள் நிதி அளிக்கவும், வலைதளம் வடிவமைக்கவும் உதவமுன்வந்தார்கள். நீண்டநாள் நோக்கில் தற்சார்புடன் வலைதளம் இயங்கவேண்டும் எனும் நோக்கில் விளம்பரங்களை வெளியிட முன்வந்தோம். மற்றபடி இதற்கும் இம்மாதிரி முயற்சிகளுக்கும் தொடர்புள்ளதா என தெரியவில்லை. பேலியோ மக்களுக்கு உதவுவது யாருக்கு என்ன காரணத்தால் பிடிக்கவில்லை என எனக்கு தெரியவில்லை. அவர்கள் வணிகம் இதனால் ஏதும் இந்த குழுவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குழுவின் வெற்றி பிடிக்காத சில வயித்தெரிச்சல் கோஷ்டிகளாக இருக்கலாம்."


"சாதாரண சந்தேகம் கேட்டால் கூட உங்கள் பேலியோ பேஸ்புக் குழுவை விட்டு நீக்கி  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறீர்கள் என குற்றஞ்சாட்டப்படுகிறதே?" 

"சாதாரண சந்தேகம் கேட்பதால் யாரையும் நீக்குவதில்லை. முகநூலில் மொக்கை போட்டு பழக்கப்பட்ட சிலர் குழுவிலும் அதே நடைமுறையை கையாள்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் இன்னொருவரின் டயட் சார்டில் போய் மொக்கை, கடலை எனும் அளவுக்கு ஆகையில் நீக்கும் சூழல் வருகிறது."

"பேலியோ - குகை மனிதன் உணவு ஒகே. இதை விரிவுசெய்து செய்து வெஜ் பேலியோ, எக் பேலியோ,ஜெயின் பேலியோ என 'பேலியோவின் அடிப்படை'யையே விட்டு விலகி போவதுபோல் தெரிகிறதே?"

"உயிரே போனாலும் அசைவம் தொடமாட்டேன் என தீவிர சைவர்கள் இருக்கும் நாடு இது. அவர்களுக்கு உதவ தான் வெஜிடேரியன் பேலியோவை கொண்டுவந்தோம். இதனால் பல சைவர்கள் உடல்நலன் மேம்பட்டு வியாதிகளில் இருந்து விடுதலை அடைந்தார்கள். "சைவபேலியோ, அசைவபேலியோ போல 100% பலன் அளிப்பதல்ல". ஆனால் உடல் எடைக்குறைப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு அதில் தீர்வு இருக்கிறது. சைவர்கள், ஜெய்ன் என பல இன மக்கள் எங்கள் குழுவில் ஜெயின் பேலியோ, சைவ பேலியோ என அவரவர் பண்பாட்டு அடிப்படையில் டயட் எடுக்கிரார்கள். இஸ்லாமிய நண்பர்களுக்காக ரம்ஜான் சமயம் ரம்ஜான் வாரியர் என்ற டயட் முறையை அறிமுகப்படுத்தினோம். மக்களின் பண்பாட்டில் மாற்றம் செய்வது எங்கள் நோக்கமல்ல. அவர்கள் பண்பாட்டு நெறிகளுக்கேற்ப உணவு முறையில் சில மாற்றங்களை செய்கிறோம்".


"இந்த உணவுமுறை இன்று பரவலாகி வருகிறது. இதன் மூலம் யார் பாதிப்படைவார்கள். மேற்கு நாடுகளில் இப்படியான டயட் பாலோ செய்தவர்கள் எதிர்ப்புகளை சந்தித்தார்களா?"
 
"மேலைநாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என குப்பை உணவுகளை தயாரிக்கும் கம்பனிகளையும், ஆரோக்கிய உணவுகள் எனும் பெயரில் கண்டதையும் விற்கும் கம்பெனிகளையும் சொல்லலாம். பல பேலியோ மருத்துவர்கள் இவர்களால் மருத்துவ அகடமிகளின் நடவடிக்கைக்கு மேலைநாடுகளில் ஆளாகியுள்ளனர். ஒரு உதாரணம் தென்னாப்பிரிக்க மருத்துவ பேராசிரியர் டிம் நோக்ஸ். பேலியோவை ஆதரித்ததால் தென்னாப்பிரிக்க டயட் சங்கத்தின் விசாரணைக்கு ஆளானார். பேலியோவை ஆதரித்த பல விஞ்ஞானிகளுக்கு நிதி உதவு மறுப்பு, ஆய்வுத்தொகை மறுப்பு என எதிர்ப்புகள் அதிகார பீடங்களில் இருந்து வருகின்றன"

"உங்களை "பேலியோ பிரம்மா" என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே ?"
 
"தயவு செய்து அப்படி எல்லாம் என்னை குறிப்பிடவேண்டாம் என விகடன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.  நான் குற்றம், குறை நிரம்பிய ஒரு சராசரி முகநூல் பதிவர் தான். வேறு எந்த சிறப்பு தகுதிகளும் எனக்கு இல்லை. நான் கண்ட உண்மையை, ஆரோக்கியமான உணவு முறையை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே "

"உடல் எடை குறைப்பு , நீரிழிவுலிருந்து விடுதலை என நிறைய பேர்  பின்பற்றினார்கள். இப்போது இப்படி கண்ணுக்கு தெரியாத எதிரிகள் முளைத்துள்ளனரே . இனி உங்கள் குழுமத்தின் எதிர்கால ப்ளான் என்ன?"

"சர்க்கரை வியாதியை ஒழிக்கும் முயற்சிக்கு கூட எதிர்ப்பு வருகிறது என்றால் அப்படி எதிர்ப்பவர்கள் தம்மை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவர்கள் பிள்ளைகள், வருங்கால தலைமுறைக்கும் சேர்த்து நாங்கள் நடத்தும் போராட்டமே இது. யாரையும் நாங்கள் பகைவர்களாக கருதவில்லை. எங்கள் ஒரே நோக்கம் சர்க்கரைவியாதி இல்லாத தமிழகத்தை உருவாக்குவது. கடந்த 3 ஆண்டுகளில் அதற்கான விதைகள் தமிழகத்தில் பலமாக ஊன்றப்பட்டுவிட்டன. இனி யாராலும் பேலியோவுக்கு முன்பிருந்த நிலையை உருவாக்க முடியாது. இனி அடுத்தகட்டமாக பேலியோவை மருத்துவர்கள், நூல்கள் மூலம் முகநூலில் இல்லாத மக்களுக்கும் கொண்டு செல்வோம். எங்களுடையது வெறும் முகநூல் குழுமம் மட்டும் அல்ல. இதுவரை 20க்கும் மேற்பட்ட நேரடி சந்திப்புகளை நடத்தி ஆயிரக்கணகான மக்களை நேரில் சந்தித்து பேலியோவை பரப்பியுள்ளோம். அம்முயற்சிகள் தொய்வின்றி தொடரும். தமிழ்நாட்டில் கடைசி சர்க்கரை நோயாளி இருக்கும்வரை எங்கள் இயக்கமும் ஓயாது.


- வரவனை செந்தில் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ