Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கித் தேர்விலும் வட இந்தியர்கள் ஆதிக்கம்!  -தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மற்றொரு அநீதி

' பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் ஜூனியர் அசோசியேட் தேர்வில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர்' எனக் கொதிக்கின்றனர் தேர்வர்கள். ' தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களே அதிகம் தேர்வாகியுள்ளனர்' எனவும் வேதனைப்படுகின்றனர். 

இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும், தன்னிச்சையாகவே கிளார்க் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு கிளார்க் அந்தஸ்தில் (ஜூனியர் அசோசியேட்) உள்ள 17,400 காலி பணியிடங்களை நிரப்புகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.

"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. இதற்கடுத்து, ஆந்திராவில் 1,385 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1,200 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நமக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால், மகிழ்ந்து போய் விண்ணப்பித்தோம். இதில், முதல்கட்டத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கும் மெயின் தேர்வு எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வில் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டன. இவற்றில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடந்தது. ஆனால், தமிழ்நாட்டு பிரிவுக்கு வட இந்தியா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னால் மிகப் பெரிய சதிவேலை நடந்திருக்கிறது" என வேதனையோடு தொடங்கினார் வங்கித் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர். 

"கிளார்க் தேர்வு தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தொடர்பாக வெளியிட்ட முதல் அறிக்கையில், ' தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தேர்வு எழுதலாம்' எனத் தெரிவித்திருந்தனர். அதேபோல், ' பாண்டிச்சேரியிலும் தமிழில் எழுதலாம்' என அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான இருபது நாட்களுக்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து மற்றொரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதலாம்' என தெரிவித்திருந்தனர். இது அப்பட்டமான மோசடி. ஆங்கிலம் என்றொரு பிரிவு வகைப்படுத்தப்பட்டதால், டெல்லி, கேரளா உள்பட பிற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாடு பிரிவில் தேர்வு எழுத விண்ணப்பித்துவிட்டனர். ஏனென்றால், காலிப் பணியிடத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக இடங்கள் வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எழுதும்போது 95 சதவீத இடங்களில் அவர்களே வெற்றி பெறவும் வாய்ப்பு அதிகம். இதனை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வரவில்லை. தற்போது வெளியான ஸ்டேட் வங்கித் தேர்வு முடிவில், கேரளா மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கமே தமிழ்நாட்டுப் பிரிவில் அரங்கேறியுள்ளது. நமக்கு எதிராக, மத்திய அரசின் துரோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக 50 எம்.பி.க்கள் இருந்தும் என்ன பயன்?" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார். 

திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். " ஸ்டேட் வங்கித் தேர்வு அறிவிப்பு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. மற்ற மாநிலங்களைவிடவும், தமிழ்நாட்டுப் பிரிவில் ஏராளமான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. கேரளாவில் உள்ளவர்கள் மலையாளத்தில் எழுதலாம் என்ற முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலம் என்றொரு பிரிவை கூடுதலாக சேர்ப்பதன் மூலம், அதிகப்படியான வட இந்தியர்களைத் திணிக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் செயல்பட்டது என்றே கருத வேண்டியுள்ளது. திட்டமிட்டே இப்படியொரு செயலை வங்கி நிர்வாகம் அரங்கேற்றியுள்ளது. வங்கிப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் காரணமே, கிராமப்புற சேவைகளில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்கள் இருந்தால், மக்களுக்குச் சேவை எளிதாகச் சென்று சேரும் என்பதற்காகத்தான். 

இப்போது அந்தப் பணிகளில் வடஇந்தியர்கள் அமர்வது என்பது நமக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகத்தான் பார்க்கிறோம். இந்த நடைமுறை மூலம், உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களும் கேரளத்தவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்வு எழுதுகின்றனர். ஆனால், நாம் அங்கு சென்று தேர்வு எழுத முடியாது. இது அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள சம உரிமைக்கு எதிரானது. இதைப் பார்க்கும் தமிழக மாணவர்கள் என்ன மாதிரியான மனநிலைக்கு இட்டுச் செல்வார்கள் என்பதைப் பற்றி அரசுகள் அக்கறைப்படவில்லை. எனவே, வங்கி நிர்வாகத்தின் நடைமுறைக்கு எதிராக அறவழியிலும் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்" என்றார் ஆதங்கத்துடன். 

மாகாணங்களின் நலனுக்காக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, 'தமிழ்நாடு 60' என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

- ஆ.விஜயானந்த் 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ