Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மவுலிவாக்கமும், உள்வெடிப்பு தொழில்நுட்பமும்....!

ஜூன் 28, 2014....மாலை...சென்னை புறநகரான மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டடம் திடீரென மண்ணுக்குள் புதைந்து இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடிகளுக்குள் சிக்கி, வட இந்திய தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கட்டட விபத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இந்த அளவு உயரமான கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எவ்வாறு அனுமதி அளித்தது? என்ற கேள்வி எழுந்தது. விபத்து குறித்து விசாரணைக்கு தமிழக அரசு ஆணையம் அமைத்தது. நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுத்தது என்றெல்லாம் கட்டட விபத்து தொடர்பான நிகழ்வுகள் பல்வேறு கட்டங்களாக போய்க் கொண்டிருந்தன.

நாம் அதற்குள் எல்லாம் போக விரும்பவில்லை. இடிந்த கட்டடத்துக்கு அருகில் ஏற்கெனவே கட்டப்பட்டு வானளாவ நின்று கொண்டிருந்த மற்றொரு 11 அடுக்கு மாடி கட்டடம் உறுதித்தன்மை இல்லாததால், அந்தக் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று மாலை அந்தக் கட்டடம் இடிக்கப்படுகிறது.

சரி.. மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில், அடுக்குமாடி கட்டடத்தை சேதாரம் இன்றி எப்படி இடிக்கப்போகிறார்கள்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி மாலை 4 மணிக்கு மவுலிவாக்கம் கட்டடம், அதிநவீன தொழில்நுட்பமான இம்ஃப்ளோஷன் முறை மூலம் இடிக்கப்பட உள்ளது.

உள்வெடிப்பு (Implosion) என்றால் என்ன?

பெரும்பாலும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த உள்வெடிப்பு முறை (இம்ஃப்ளோஷன்) தொழில்நுட்பம் தற்போது, இந்தியாவில் வடமாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஓரிரு சிறிய கட்டடங்களை இடிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அளவு 11 அடுக்கு கட்டடத்தை இடிக்க இம்ஃப்ளோஷன் தொழில்நுட்பம் இப்போதுதான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த 'மேக்லிங்க்' நிறுவனத்துடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

இம்ஃப்ளோஷன் முறையில், கட்டடத்தின் அனைத்து தூண்களிலும், ஒவ் வொரு தளத்தின் இணைப்பு மற்றும் பக்கவாட்டுத் தூண்களிலும் துளையிட்டு, ஆர்.டி.எக்ஸ் வகை வெடிப்பொருள் வைக்கப்படும். வெடிமருந்துகள் வைக்கும் பணிகள் மவுலிவாக்கத்தில் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் அதன் பக்கவாட்டிலும் வைக்கப்படும். ரிமோட் கருவி மூலம் ஒரே நேரத்தில் வெடிப்பொருள் வெடிக்கச் செய்யப்படும். இவ்வாறு வெடிக்கச் செய்வதால், கட்டடமானது மேல் தளத்திலிருந்து கீழாக ஒவ்வொரு தளமாக அடுத்தடுத்து, படிப்படியாக, சீட்டுக்கட்டு சரிவது போன்று அப்படியே கீழே விழுந்து விடும். மேலும் அக்கம்பக்கம் உள்ள கட்டடங்களுக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஒவ்வொரு தளத்திலும் தேவையான அளவு வெடிப்பொருள் அதன் தன்மைக்கேற்ப வைக்கப்படுவதால், கட்டடம் இடிக்கப்படும்போது. பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இம்ஃப்ளோஷன் முறை குறித்து, திருப்பூர் மேக்லிங்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்தியாவில் மிகவும் அரிதான முறையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும், தமிழகத்தில் அதிக அடுக்குகள் கொண்ட கட்டடம் இம்முறை மூலம் இடிக்கப்படுவது முதல்முறை. சுமார் 10 முதல் 15 விநாடிகளில் கட்டடம் இடிந்து தரை மட்டமாகி விடும். அப்பகுதி மக்கள் யாரும், கட்டம் இடிக்கப்படும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

மவுலிவாக்கம் கட்டடத்தைச் சுற்றி 200 மீட்டர் பரப்பளவுக்குள் யாரும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்ட பின்னர், வெளியேற்றப்பட்டோர் மீண்டும் வீடுகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டடம் இடிப்பையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிக்கப்படும்போது, மின்சார பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, கட்டடம் இடிக்கப்பட்டு முடியும் வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதிநவீன தொழில்நுட்பம் எல்லாம் சரி... மவுலிவாக்கம் கட்டத்துக்காக வங்கியில் கடன் வாங்கியும், சொந்தப் பணத்தையும் முதலீடு செய்தோர் நிலை என்ன? என்பதே இப்போதைய கேள்வி.

- சி.வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close