Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நேரத்தில் தான் இடிக்கவேண்டுமாம்...! மவுலிவாக்கம் அப்டேட்

சென்னை புறநகர்ப் பகுதியான மவுலிவாக்கத்தில், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 11 மாடி கட்டடத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கட்டடத்தை ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதனை இடிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று (2.11.2016) இக்கட்டடம் இடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

உள்வெடிப்பு (Implosion) தொழில்நுட்ப உதவியுடன் மவுலிவாக்கம் கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.மவுலிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் வருவதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் சென்னை மாநகர காவல்துறை, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இடிக்கப்படவுள்ள மவுலிவாக்கம் கட்டடத்தைச் சுற்றி 100 முதல் 150 மீட்டரில் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, கட்டட இடிப்பு குறித்து முன்கூட்டியே தண்டோரோ மூலமும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமும் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்  மதனந்தபுரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்த்தில்  பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன்  இணைந்து செய்து கொடுத்துள்ளது. மேலும் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே, உறவினர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். மவுலிவாக்கம் பகுதியில் உள்ள எஞ்சிய பொதுமக்கள், கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவர்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிக்கப்பட உள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு நண்பகல் 12 மணி அளவில், பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், இணை ஆணையர் ஶ்ரீதர், துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர் பாலச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து, ஆய்வு செய்தனர். சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டடம் இடிக்கப்படும் நேரத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். 

கட்டடம் இன்று இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதலே பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர்களும் மவுலிவாக்கத்தில் குவியத் தொடங்கினர்.பத்திரிகையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்புக் குழு அமைத்து, ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.கட்டடத்தை இடிக்கும்போது, ஊடகத்துறையினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும், செய்தியாளர்கள் பார்வையிடுவதற்கும்,  கட்டடம் அமைந்துள்ள இடத்துக்கு 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒரு உயரமான கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தக் கட்டடத்தில் ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி ஒளிப்பட நிபுணர்களும் குழுமியுள்ளனர்.

ஏற்கெனவே அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் நேரம் காலையில் இருந்து, மாலை 4 மணி என்று மாற்றப்பட்டது. இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மாலை 4 மணிக்கு இடிக்கப்படவிருந்த நேரத்தை, மாலை  5 மணி என்று அதிகாரிகள்  மாற்றினர். மழை நீடிக்கும் பட்சத்தில் 5 மணி என்பது மீண்டும் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மழை விட்டு விட்டு பெய்துவருவதால், கட்டட இடிப்பின்போது, ஏதேனும் இடையூறு வந்து விடக்கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் மிகுந்த எச்சரிகையுடன் உள்ளனர்.

 - ந.பா. சேதுராமன், சி.வெங்கட சேது
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ