Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவுதியில் அடிமையாக வேலை பார்த்த தமிழகப் பெண்!

வெளிநாட்டில் வேலை செய்றாங்க. நல்ல சம்பளம். அவங்களுக்கு என்ன? என நம்மில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அங்கே எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கான ஓய்வு சரியாகக் கிடைக்கிறதா என்பதெல்லாம் அங்கே பணிபுரிபவர்களுக்குத்தான் தெரியும். 2013 -ம் ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரேபியாவிலுள்ள கல்ஃபில் வீட்டு வேலைக்காக சென்றிருக்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த மல்லிகா.

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக அனுப்பப்படும் பெண்கள் பெரும்பாலும் அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மல்லிகா சேது, அரேபியாவிலிருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், 'ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரோக்கியமான உடல் நலத்துடன் சென்ற நான் இப்போது ஒரு நோயாளிப் போல திரும்பி வந்துள்ளேன். என்னால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை பெற்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்ஃப்பில் வேலை பார்த்தேன். என் குடும்பத்தின் வறுமை காரணமாக இந்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்துச் சென்றேன். வேலைக்கு சென்ற நான் அங்கே கொத்தடிமைப் போன்றே நடத்தப்பட்டேன்.. இன்று பலரின் உதவியுடன் இந்தியா திரும்பி வந்திருக்கிறேன். இதுபோன்ற பணத்துக்கு ஆசைப்பட்டு அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் செல்லவிருக்கும் பெண்கள் அங்கு வேலைக்காக செல்ல வேண்டாம். அங்கே சென்றால் அடிமையைப் போல நடத்துவதோடு, தவறான வேலைகளையும் ஈடுபடச் செய்து கொடுமைப்படுத்துகிறார்கள். 

வெளிநாட்டில் உள்ள ஒரு கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் எங்களை வேலைக்கு அமர்த்தினார்கள். அங்கிருந்து இடைத்தரகர்கள் வாயிலாக பல வீடுகளுக்குச் சென்று வேலை செய்ய ஆரம்பித்தேன். இரண்டு வருடம் நன்றாக வேலைப்பார்த்தேன். அப்போது எந்த சிரமமும் தெரியவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய உடல் நலமும் சரியில்லாமல் போனது. கூடவே, ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். அப்படி வேலையை தொடர்ந்து செய்யவில்லை என்றால் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட வீட்டில் அடைக்கப்பட்டு அடிமைப் போலவே நடத்தப்பட்டேன். என்னுடைய மூத்த மகன் இறந்தபோதுகூட என்னை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மறுத்துவிட்டார்கள். சரியான சாப்பாடு இல்லாமல் இருந்ததால் என்னுடைய உடல் வலுவானது குறைந்து விட்டது. கூடவே, காலிலும் வலு குறைந்தது. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. இருந்த போதும் அவர்கள் எனக்கு எந்த விதமான ஓய்வினையும் தர முன் வரவில்லை. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு யோசிக்க வைத்துவிட்டார்கள். 

இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்கிற முடிவில் மல்லிகாவை அழைத்து வந்த இடைத்தரகரிடம் தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடும்படி கெஞ்சிக் கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, தாராளமாக இந்தியாவுக்குத் திரும்பலாம் என கூறியுள்ளனர் இடைத்தரகர்கள். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லாத காரணத்தால் அவரை அனுப்ப யாரும் முயற்சி எடுக்கவில்லை. இந்நிலையில், அவருடைய மகள் மற்றும் மகன் இருவரும் 
தேசிய உள்நாட்டு தொழிலாளர்கள் இயக்கம் என்கிற NGO வின் உதவியுடன் மல்லிகாவை மீட்டுள்ளனர். 

நான் அணிந்திருந்த நகைகளை விற்றுவிட்டேன். எனக்கு என்னுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 'என கண்ணீர் மல்க கூறினார் மல்லிகா.

- வே. கிருஷ்ணவேணி  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ