Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தமிழிசை நன்றாக கனவு காண்கிறார்’ - தலைவர்களின் எதிர்வினை...!

மிழகத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க, எதிர்கட்சியான தி.மு.க என இரண்டு கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. இவர்களுடன் தே.மு.தி.க, பா.ம.க,பி.ஜே.பி ஆகிய கட்சிகளும்  இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. வெற்றியை எட்டிப் பிடிக்க தி.மு.கவும் அ.தி.மு.கவும் தீவரம் காட்டிவரும் நிலையில் மூன்றாவது இடத்தை நாம் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பிற கட்சிகள் உள்ளன.

இந்நிலையில்  தமிழக பி.ஜே.பி- தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் “ தமிழகத்தில் நடைபெற உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.கட்சி தனித்து போட்டியிடுகிறது. அங்கு பண பலம், அதிகார பலத்தை எதிர்த்து நம்பிக்கையுடன் நாங்கள் களமிறங்குகிறோம். அ.தி.மு.க, மற்றும் தி.மு.க விற்கு மாற்று நாங்கள் தான் என்பதை இந்த தேர்தலில் நிரூபிப்போம்” என்று தெரிவித்திருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே ஓரளவு கவுரவமான வாக்குகளை பெற முடிந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை நாடு முழுவதும் வீசிய நிலையில் தமிழகத்தில் அந்த கட்சியால் ஒரு இடத்தை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.

இந்நிலையில் தான் மூன்று சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க,மற்றும் தி.மு.க விற்கு மாற்றாக பா.ஜ.கட்சி இருக்கும் என தமிழிசை பேசியுள்ளார். தமிழிசையின் இந்த கருத்து குறித்து தமிழக கட்சியினர் மத்தியில் கேட்டபோது....

நாஞ்சில் சம்பத் (அ.தி.மு.க) - தமிழகத்தில் பா.ஜ.க வை  காலுான்றச்  செய்ய தமிழிசை துடிக்கிறார். அது பகல் கனவாகவே  இருக்கும். மோடியை முன்னிறுத்தி பொதுத்தேர்தலை பா.ஜ.க, சந்தித்த போது, அந்த தேர்தலில் காஷ்மீர்  வரை மோடியின் அலை வீசியது. ஆனால் தமிழத்தில் அ.தி.மு.க. என்னும் மலை மோடியின் அலையை தடுத்துவிட்டது. தந்தை பெரியாராலும், அண்ணாவாலும் பக்குவபடுத்தபட்ட பைந்தமிழ் நாட்டில் வகுப்பு வாத சக்தியான பி.ஜே.பி காலுான்ற நினைப்பது ஒரு போதும் நடக்காது.

இங்கே திராவிட இயக்கத்திற்கு மாற்றாக கால்ஊன்றிவிடலாம் என்று அவர்கள் நினைப்பது பகல்கனவாகி போய்விடும். தமிழிசை கனவு ஒருபோதும் நனவாகாது. கள்ளிப்பால் கண்நோய்யை போக்கினால் கூட போக்கும், தமிழகத்தில் பா.ஜ.க ஒரு போதும் காலுான்ற முடியாது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க)- தமிழிசையின் உரிமையை அவர் சொல்லியிருக்கிறார். மக்களுக்கு தான் தெரியும் எது மாற்றம் என்று. அவர்களால் இங்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது மக்களுக்கே தெரியும். தமிழகத்தின் நலனில் அக்கறையில் யார் பங்கேற்பார்கள் என்பதும்  மக்களுக்கு தெரியும்.

தமிழகத்தின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருவது தி.மு.க மட்டும் தான். திராவிட பூமியில் இவர்கள் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று சொல்கிறார்கள். அது அவர்கள் நோக்கத்திற்கு சொல்லபட்ட கருத்தாகத் தான் எடுத்து கொள்ள முடியும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)- தமிழிசை நன்றாக கனவு காண்கிறார் அவர் கனவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழகத்தில் அவர்களால் அரசியல் செய்ய முடியமா என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுடை சிந்தாத்தம்,  கொள்கை , கோட்பாடு என அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக அவர்கள் கட்சி இருக்கிறது. தமிழகத்தில் சில கட்சிகள் செல்வாக்கு, குறையலாம் கூடலாம் ஆனால் பா.ஜ.வினால் மட்டும் இங்கு ஒருபோதும் அடித்தளமிடவே முடியாது. அது தெரிந்தும் தமிழிசை கனவாக ஒரு பேச்சை பேசியுள்ளார். அவர் கனவு ஒரு போதும் நினைவாகாது




- அ.சையது அபுதாஹிர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ