Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இலங்கையில் உயிரையும் காக்கவில்லை...! டெல்டாவில் பயிரையும் காக்கவில்லை...!’ - திமுகவை விளாசும் தமிழிசை


குஷ்பு வாய் திறந்தாலே சர்ச்சைகளும் றெக்கை கட்டிக்கொள்கின்றன. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில், இஸ்லாமிய தலாக் (விவாகரத்து) முறைக்கு மாற்றாக அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான 'பொது சிவில் சட்டம்' வந்தால் வரவேற்பதாக கருத்து தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு காட்டிவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்தே இப்படியொரு கருத்து வெளியானதைத் தொடர்ந்து, 'இது குஷ்புவின் சொந்தக் கருத்து. இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை' என்று பதறியடித்துக்கொண்டு பதில் கொடுத்தார் திருநாவுக்கரசர். 'திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் எடுக்க வேண்டும்' என்றார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்படி குஷ்பு திரி கிள்ளிய இவ்விவகாரம் ஆதரவும் எதிர்ப்புமாக தமிழக அரசியலில், வெடித்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்....

''பொது சிவில் சட்டம் பற்றிய உண்மை நிலை தெரியாமல் குஷ்பு பேசியிருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறாரே?''

''உண்மை நிலை தெரியாமல் யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. முத்தலாக் எனப்படும் இஸ்லாமிய விவாகரத்துக்கு எதிராக இஸ்லாமியப் பெண்களே பலர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள். உலகில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளேகூட முத்தலாக் என்பது பெண்களின் உரிமைக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
இந்த நிலையில், குஷ்பு அந்தப் பழக்கம் உள்ள சூழ்நிலையில் வளர்ந்து தெரிந்து வந்தவர் என்பதால், அவர் உண்மை நிலை உணர்ந்துதான் பொது சிவில் சட்டத்தை வரவேற்றுப் பேசியிருக்கிறார். தன்னுடைய கட்சியின் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் துணிச்சலாக உண்மையைச் சொல்கிறார் குஷ்பு. திருமாவளவனுக்குத்தான் உண்மை நிலை தெரியவில்லை.

'துப்பட்டா அணிந்துகொண்டுதான் பெண்கள் கோவிலுக்குள் போகவேண்டுமா?' என்று பெண்ணுரிமை பற்றிப் பேசுகிற பெண்ணியவாதிகளும், திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்றோரும் இந்த விஷயத்தில் மட்டும் 'பெண்ணுரிமை'யை வசதியாக மறந்து போவதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பெண்களின் உரிமையாகப் பார்க்க வேண்டிய விஷயத்தை, மதம் - வாக்கு வங்கி சார்ந்த விஷயமாக ஏன் பார்க்கிறார்கள்? திருமாவளவனுக்கு பெண்களின் உரிமைகள் மீது அக்கறையில்லையா?

''ஆட்சிப் பொறுப்பேற்று 2 வருடங்களாக இதுபற்றிப் பேசாத பி.ஜே.பி அரசு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பொதுசிவில் சட்ட அமுல் குறித்துப் பேசுவது அரசியல் உள்நோக்கம்' என்றிருக்கிறாரே குஷ்பு?''

ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதுவும் அல்லாமல், இன்றைக்கு இந்த விவகாரத்தை  உச்ச நீதிமன்றம் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில், இப்படியொரு கேள்வியையும் கேட்க வேண்டிய அரசியல் கட்டாயத்தில் குஷ்பு இருக்கிறார் என்பதுதான் உண்மை. முத்தலாக் விவகாரத்தை எதிர்ப்பதோ, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதையோ பி.ஜே.பி இன்றைக்குத்தான் சொல்கிறது என்பதுபோல் ஒரு தோற்றத்தை  உருவாக்கப் பார்க்கிறார்கள். பி.ஜே.பி-யின் அடிப்படைக் கொள்கையே ஒரே நாடு, ஒரே சட்டம்  என்பதுதான். தமிழகத்தில் இருந்து பி.ஜே.பி சார்பாக 30 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகையின் பெயரே 'ஒரே நாடு; ஒரே சட்டம்' என்பதுதான். ஆதலால், நாங்கள் இன்று நேற்று பேசுவதல்ல.... இன்னொரு முக்கியமான விஷயம் 'முத்தலாக்' விவகாரத்தை சொல்லித்தான் பி.ஜே.பி ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலையில் இல்லை.  

காவிரி விவகாரத்தில், மத்திய பி.ஜே.பி அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறாரே?

நேற்று கூட அருகதை இல்லை; திராணி இல்லை என்றெல்லாம் ஸ்டாலின் பேசுகிறார். காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பது என்பது நீண்டகால செயல்முறை. உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு இதில் வழியில்லை.  காவிரி நதிநீர் ஆணையம் என்பது ஒரு நீண்டகால செயல்முறை. ஆணையம் அமைக்கவேண்டும், அதற்கு ஒப்புதல் வரவேண்டும், அதன்பிறகு பிரதமர் தலைமையில் நான்கு முதல் அமைச்சர்களும் கூடி விவாதிக்க வேண்டும். அதன்பிறகுதான் 'நீங்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என சித்தராமையாவுக்கு சொல்ல முடியும். ஆக இது ஒரு நீண்டகால செயல்முறை. இப்போது உடனடித் தீர்வுக்கு என்ன செய்யவேண்டும், நெடுங்காலத் தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் எங்களது அக்கறை. இதோ 2000 கன அடி நீர் திறந்துவிட்டாயிற்று. அட்டர்னி ஜெனரலே இவ்விவகாரத்தில் நடந்தது என்னவென்று தெளிவாக விளக்கிவிட்டார். அதனால்தான் உச்ச நீதிமன்றமும் அதன்பிறகு இவ்விஷயத்தில் வற்புறுத்தவில்லை.
இவ்வளவு பேசுகிற ஸ்டாலின் அவர்களிடம் நான் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.... 'ஆணையம் ஏன் அமைக்கவில்லை என்று கேட்கிற நீங்கள் மத்தியில் காங்கிரஸ் அரசில் பங்கேற்றிருந்த காலகட்டங்களில் என்ன முயற்சி எடுத்தீர்கள்? இப்போது இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் கடந்த ஆட்சியின்போது, நீர்வளத்துறை அமைச்சகத்தையோ அல்லது விவசாயத்துறை அமைச்சகத்தையோ மத்திய அரசிடம் கேட்டு வாங்கி காவிரிப் பிரச்னையை நீங்கள் தீர்த்திருக்கலாமே? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை வைத்துக்கொண்டு எதையுமே செய்யாமல், நீங்கள் செய்த துரோகத்தை மறைப்பதற்காக இன்றைக்கு நீங்கள் பி.ஜே.பி நோக்கி கை காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி-க்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி நடிகை கவுதமியை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கிறாரே என்ற குற்றச்சாட்டு எழுகிறதே...?

இது ரொம்ப ரொம்ப சாதாரணமா விளையாடுத்தனமா சொல்ற குற்றச்சாட்டு. பிரதமர் அன்றைக்கு ஏன் சந்திக்கவில்லை? பிரதமரின் பிரச்னை அதுவல்ல.... இது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை. அதுவும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிற விவகாரத்தில் பிரதமர் தலையிட முடியாது. தமிழக எம்.பி-க்களை மட்டுமல்ல... இதுவிஷயமாக சந்திக்க வந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவையும்தான் பிரதமர் சந்திக்கவில்லை. மத்திய அரசு, மாநில உரிமைகளில் தலையிட முடியாது என்று ஏற்கெனவே கருணாநிதி கூறியதால்தானே காவிரி பிரச்னை இன்று இவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் பிரச்னை வரும் என்று தெரிந்துதான் நாங்கள் தொலைநோக்கோடு நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டுவரவேண்டும் என்றோம். விவசாயிகளின் நல்வாழ்வுக்காக பயிர் பாதுகாப்புத் திட்டத்தைக்  கொண்டுவந்தோம்.

காவிரி, ஜல்லிக்கட்டு, நியூட்ரினோ என்று அத்தனைப் பிரச்னைகளும் கடந்த பத்தாண்டுகளிலும்தான் இருந்தன. ஆனால், அப்போதெல்லாம் அதைப்பற்றி சிறிதும் சிந்திக்காத தி.மு.க., இன்னும் சொல்லப்போனால், கையெழுத்துப் போட்டு நீங்களே ஆரம்பித்து வைத்த திட்டத்தையும் இப்போது நீங்களே எதிர்த்துக் கொண்டு இருப்பீர்கள். பயிர் செத்துப்போவதைக் காப்பதற்காக இன்று சர்வக் கட்சிக் கூட்டம் போட்டு அரசியல் செய்யும் நீங்கள் அன்று இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர் செத்துக் கொண்டிருக்கும்போது என்ன செய்தீர்கள்? தி.மு.க-வும் காங்கிரசும் இன்று ஆயிரம் மாய்மாலம் சொல்லலாம்.... ஆனால், பதவியில் இருந்த காலத்தில் நீங்கள் 'இலங்கையில் உயிரையும் காப்பாற்றவில்லை; டெல்டாவில் பயிரையும் காப்பாற்றவில்லை'. வரலாறு ஒருபோதும் இந்த துரோகத்தை மன்னிக்காது.

அன்று ஜல்லிக்கட்டுத் தடை விஷயத்தில், உச்ச நீதி மன்றம் தடை விதித்துவிட்டது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்ட மத்திய பி.ஜே.பி அரசு, இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று பின்வாங்குவதை எப்படி எடுத்துக்கொள்வது?

நீங்களும் ஸ்டாலின் மாதிரியே கேள்வி கேட்கிறீர்கள். ஜல்லிக்கட்டு வழக்கு என்பது முற்றிலும் வேறுபட்டது. அப்படிப் பார்க்கப்போனால் நான் கேட்கிறேன். அன்றைக்கு 2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயில் எல்லாம் போனார்களே.... இப்போது அந்த வழக்கெல்லாம் என்னாயிற்று? எல்லாவற்றையும் கிடப்பில் பொட்டுவிட்டார்களே என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சரியாக இருக்காது.

காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான  பிரச்னை வேறு, நர்மதா திட்டம் வேறு, கிருஷ்ணா நதி திட்டம் வேறு. இது 4 மாநிலங்களுக்கு இடையிலான, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது. அதனால்தான் மத்திய அரசு அமைக்க முடியாது என்று கூறியதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, அவை காட்சிப் பொருளாக்கப்படுகிறது, இரண்டாவது அவை துன்புறுத்தப்படுகின்றன என்று விலங்கின ஆர்வலர்கள் சொல்கிறார்கள். இதற்கு பிரகாஷ் ஜவடேகர் அப்போதே காளை காட்சிப் பொருளில் இருந்து எடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை அப்போதே கொடுத்துவிட்டார். இன்னொன்று, காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை; இவை குழந்தைகள் போன்று வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்பது பண்பாடு சார்ந்த ஒரு வீர விளையாட்டு. அது தடுக்கப்பட்டுவிடக் கூடாது' என்ற கருத்தையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியாகிவிட்டது.  இவ்வளவு இருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஏதேனும் தடை வந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக சட்ட அமைச்சகத்திடம் இருந்தும் ஒரு அறிவிப்பை வாங்கி வைத்தாகிவிட்டது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு வீரவிளையாட்டு அதைக்கட்டாயம் நடத்த வேண்டும் என பி.ஜே.பி கொள்கை ரீதியாகவே முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது.

அப்படியென்றால், வரும் வருடத்தில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கலாமா?

நிச்சயம் நடைபெறும்!

- த.கதிரவன்

எடிட்டர் சாய்ஸ்