Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதற்றமாக இருக்கிறார்... புரியாமல் பேசுகிறார்... ஸ்டாலினை விளாசும் தமிழிசை !

டைத்தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தமிழக பாரதிய ஜனதா கட்சி. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது அக்கட்சி. காவிரி பிரச்னை துவங்கி பல பிரச்னைகளில் மத்திய அரசு மீது அதிருப்தி நிலவி வரும் நிலையில், இதையெல்லாம் மீறி தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று விட வேண்டும் என தீவிரமாக இயங்கி வருகிறது பாரதிய ஜனதா. திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் ஶ்ரீனிவாசன் வேட்புமனுத்தாக்கலுக்காக மதுரை வந்திருந்த தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம்.

இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது.?

இடைத்தேர்தலை நாங்கள் துணிச்சலாக சந்திக்கிறோம். 89 உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, எதிர்கட்சிக்கான பணியை செய்யவில்லை. எங்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் சட்டமன்றம் சென்றால் பத்து உறுப்பினருக்கு சமம். எங்களுக்கு எம்.எல்.ஏ.ஆகும் தகுதி இல்லையா?. எந்த காரணத்தையும் சொல்லி தேர்தலை புறக்கணிக்க விரும்பவில்லை. தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால் நாங்கள் வெற்றி பெறுவோம்.  ராஜஸ்தான், குஜராத் போல தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்கும் கட்சியாக பி.ஜே.பி. தமிழகத்தில் திகழும். இப்பவே தமிழகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேறூன்றி விட்டோம். மக்களுக்கான கட்சி பி.ஜே.பி. தான்.

இடைத் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் கூறுகிறாரே...?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின்  சொல்வதில் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் உள் நோக்கம் உள்ளது.  இதை எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று ஸ்டாலின் விளக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோது அதற்கு எதிராக மனு தாக்கல் செய்த பி.ஜே.பி.அரசு, அதே நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை உத்தரவு போட்டபோது, அமைதியாக இருந்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

அது வேறு, இது வேறு. காவிரி விவகாரத்தில் உடனே மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, சிறிது காலமாகும் என்றுதான் சொன்னார்கள். இதில் சுப்ரீம் கோர்ட் ஆர்டராக போடவில்லை, ஒரு நோடிபிகேஷன்தான் கொடுத்தார்கள்.  ஆனால், ஜல்லிக்கட்டு வழக்கில் ஆர்டர் போட்டார்கள், அதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாத நிலை. இரண்டு விஷயமும் வேறு. இது புரியாமல் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். சமீபகாலமாக ஸ்டாலின் பதற்றமாகவே பேசுகிறார்.

தமிழக அரசுக்கு பி.ஜே.பி. மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டு உள்ளதை பற்றி?

அப்படியெல்லாம் இல்லை, அப்படீன்னா நாங்க ஏன் வேட்பாளரை நிறுத்தணும்.? மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல சேர்த்திருக்காங்க, இதுபோல பல நல்ல விஷயங்கள செய்றாங்க. அதை வச்சு அதிமுக அரசை ஆதரிப்பதாக சொல்வது தவறு.
(இந்த பேட்டி முடிந்த சில மணி நேரத்தில் புதுவை, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அம்மாநில பி.ஜே.பி. ஆதரவு தெரிவித்து அறிவிப்பு விட்டது.)

வேட்பு மனுத்தாக்கலுக்கான படிவத்தில் ஜெயலலிதா கைநாட்டு வைக்க அனுமதியளித்த தேர்தல் கமிஷனை , அதிக சலுகை அளிப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளாரே?

அவர் ஒரு டாக்டராக இருந்து கொண்டு இப்படி விமர்சிக்கக் கூடாது. முதல்வர் சுய நினைவோடு இருந்தாலும் அவரால் கையை தூக்க முடியவில்லை என்று டாக்டர்கள் உத்தரவாதம் அளித்துள்ள நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் முன்பு நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையிலும் அதை விமர்சிப்பது ஆரோக்கியமானது அல்ல.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பாவுக்கு பி.ஜே.பி. ஆதரவளிப்பதாக சொல்லப்படுகிறதே?

ஆதாரமற்ற புகாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.


- செ.சல்மான்.
படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close