Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘எம்.ஜி.ஆர் தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்!’  -தி.க-வை சீண்டிய நூற்றாண்டு கலகம்

 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளன திராவிடர் கழகமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். ‘இந்து மதத்தின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டவர் எம்.ஜி.ஆர். அவரை நாங்கள் முன்னிறுத்துவதைக் கண்டு பயந்து போய்விட்டார் வீரமணி’ என அதிர வைக்கின்றனர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள். 

தி.மு.க.விலிருந்து முரண்பட்டு 1972-ம் ஆண்டு அண்ணா தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அதன்பிறகு, 1977-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். 1987 டிசம்பர் 24-ம் தேதி அவர் மரணத்தைத் தழுவும் வரை, அரசியல்ரீதியாக யாரும் அவரிடம் நெருங்க முடியவில்லை. அந்தளவுக்கு மிகுந்த மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தார். அவருடைய நூற்றாண்டு விழா வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான கொண்டாட்டப் பணிகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘விஜயபாரதம்’ இதழில், எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து ஒரு கட்டுரை வெளியானது. ‘இந்துக்கள் மீது எந்தளவுக்கு எம்.ஜி.ஆர் கரிசனமாக இருந்தார்’ என்பதையும் அந்தக் கட்டுரை விளக்கியது.

 

இதனால் கொந்தளித்துப் போன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘சமூக நீதிக் கொள்கைகளைச் செயல்படுத்திய எம்.ஜி.ஆர், திராவிடர் கழக பாசறையில் இருந்து உருவானவர். சிறந்த பகுத்தறிவாளராக விளங்கியவர். ஆனால், அவர் இந்துத்துவ கொள்கையை ஆதரித்தவர் என்று சொல்லி, ஆர்.எஸ்.எஸ் அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது. முன்பு திருவள்ளுவர், ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினார்கள். அதில் தோல்வி கிடைக்கவே எம்.ஜி.ஆரைக் கையில் எடுக்கிறார்கள். இந்த சதியை நாங்கள் முறியடிப்போம். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்’ எனக் கொந்தளித்தார். 

‘எம்.ஜி.ஆரை இந்துத்துவ வட்டத்துக்குள் அடைப்பது சரிதானா?’ என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் சடகோபனிடம் கேட்டோம்.

"எங்களுடைய விஜய பாரதம் இதழில் ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். 'இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியெல்லாம் எம்.ஜி.ஆர் செயல்பட்டார்' என்பதைப் பற்றி அவர் அதில் விளக்கியிருந்தார். இதைப் பார்த்து வீரமணி அரண்டு போய், அவர்களுடைய 'உண்மை' என்ற இதழ் முழுக்க, எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதித் தீர்த்துவிட்டார்கள். இதற்காக ஒரு கூட்டம் போட்டு, 'நூற்றாண்டை நாம் கொண்டாடுவோம்' எனப் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் குறித்து வெளியில் வராத பல தகவல்கள் உள்ளன. எங்களுடைய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் அவர் பேசியிருக்கிறார். கதீட்ரல் சாலையை டி.டி.கிருஷ்ணமாச்சாரி சாலை என்று மாற்றியபோது, தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரச்னை செய்தார்கள்.

அப்போது, ‘அவர்கள் ஆர்கனைஸ்டு வோட் பேங்க் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடம் அவ்வாறு ஓட்டு வங்கி இல்லை. அதைப் பெருக்க முயற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்தால் நானே மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவேன்’ என இந்து இயக்கத் தலைவர்களிடம் உறுதி அளித்தார் எம்.ஜி.ஆர். மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தானுலிங்க நாடார், ராமகோபாலன் ஆகியோர் பார்க்கச் சென்றபோதும் அவர் இவ்வாறு பேசினார். அவர் இந்துக்களுக்கு எதிராக எதுவும் பேசியது கிடையாது. மற்ற மதத்தவர்களுக்கு எதிராகவும் அவர் செயல்பட்டது கிடையாது. தீவிரமான தேசியச் சிந்தனை கொண்டவராகத்தான் இருந்தார். அந்த அடிப்படையில்தான் அவரைப் பற்றி கட்டுரை எழுதினோம்".

‘பகுத்தறிவாளர் எம்.ஜி.ஆரை அபகரிக்கப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்’ என்கிறாரே வீரமணி? 

"அப்படியெல்லாம் இல்லை. ஒருமுறை கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு விஜயம் செய்தார் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படத்தில் கிடைத்த வாளை, அங்கு பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தார். இன்றும் அந்தக் கோயிலுக்குச் சென்றால் பார்க்கலாம். அப்போது அவரிடம், ‘நீங்கள் திராவிட கொள்கையைச் சேர்ந்தவர்தானே?’ என்றபோது, ‘நான் எப்போது கடவுளைக் கும்பிட மாட்டேன் என்று சொன்னேன்’ என்று கேட்டார். அவர் சென்று வந்தபிறகுதான், மூகாம்பிகை கோயிலுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதுகுறித்து பின்னாளில் அவர் பேட்டி கொடுக்கும்போதும், ‘நான் நாத்திகன் கிடையாது. எனக்கும் சில நம்பிக்கைகள் உண்டு. அதைக் கடைபிடிக்கிறேன். அதைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்". 

அதற்காக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை நீங்கள் கொண்டாடுவது சரிதானா? 

"அதிகாரபூர்வமாக அப்படி எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. அவருடைய நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவரைக் கொண்டாடும் வகையில், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த விழாவும் நடத்தப்படவில்லை. அவருடைய கொள்கைகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்,  ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களைப் பற்றி அவர்களது நூற்றாண்டு விழாவில் கட்டுரைகள் உள்பட சில நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டோம். அப்படித்தான் எம்.ஜி.ஆரைப் பற்றியும் எழுதினோம்". 

எம்.ஜி.ஆர் இறந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு சர்ச்சை அவசியமா? 

" எந்த சர்ச்சைக்குள்ளும் அவரை நாங்கள் இழுக்கவில்லை. அவர் எந்தக் காலத்திலும் இந்துக்களுக்கு விரோதமாகவோ, இந்து நம்பிக்கைக்கு விரோதமாகவோ பேசியதில்லை. அதுமட்டுமல்ல, திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் கண்ணதாசனின் இயேசு காவியம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய எம்.ஜி.ஆர், ' இந்துக்களின் பெருந்தன்மை காரணமாகத்தான், இந்தியாவில் கிறிஸ்துவம் வளர்ந்தது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது' என்றார். கருணாநிதி இந்துக்களை மட்டம் தட்டிப் பேசுகிறார். லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கேலி செய்வது, பக்குவமான அரசியல் தலைவருக்கு அழகா?

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்குப் பெரியாரைப் பிடித்திருக்கலாம். எங்களுக்கும் சில விஷயங்களில் பெரியாரைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த தேசியவாதி. 1962-ம் ஆண்டு போருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தார். இதைக் கண்டு வியந்த நேரு, தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். கஷ்டப்படுபவர்களைத் தேடிப் பிடித்து உதவி செய்பவர் அவர். அந்த அடிப்படையில் நாங்கள் எழுத ஆரம்பித்ததும், 'எம்.ஜி.ஆரை இந்துத்துவவாதி' என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சம் வீரமணிக்கு வந்துவிட்டது. இந்து இயக்கங்கள் வளர்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை." 

உங்கள் கூற்றுப்படியே பார்த்தால், எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராகத்தானே காட்ட முயற்சி செய்கிறீர்கள்? 

"தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். குடிமக்களை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தவர் அவர். இந்து இயக்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று எதையும் அவர் பிரித்துப் பார்க்கவில்லை. எங்கள் இயக்கத்துக்கு அவர் எந்த சிரமமும் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால், ' எங்கள் இயக்கத்தை ஒடுக்க வேண்டும்' என நினைக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளில்   நாங்கள் கூட்டம் நடத்துவதற்கு எந்த அனுமதியையும் அரசு கொடுக்கவில்லை. அப்படியே அனுமதி கிடைத்தாலும், கோர்ட்டுக்குச் சென்று தடை வாங்கினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தேச விரோத சக்திகள் அமைதியாகத்தான் இருந்தார்கள். அண்டை மாநில அரசுகளோடு தனிப்பட்ட நட்பின் காரணமாக, பிரச்னைகளைத் தீர்த்தார். மிக அமைதியாகவே பல காரியங்களை அவர் சாதித்தார். அந்த வகையிலேயே அவரை நாங்கள் நினைவு கூர்கிறோம்" என்றார் விரிவாக. 

ஆர்.எஸ்.எஸ் கருத்து குறித்து, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வும் வழக்கறிஞருமான கோ.சமரசத்திடம் கேட்டோம். "சமய நெறியில் எம்.ஜி.ஆர் ஈடுபாட்டுடன் இருந்தது உண்மை. இதற்காக, அவரை ஓர் ஆர்.எஸ்.எஸ் என்று சொல்வதை ஏற்க முடியாது. உண்மையான ஆன்மிகத்தில் நம்பிக்கை வைத்தவர் அவர். ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் காஞ்சி பெரியவரும் சொன்னதை ஏற்றுக் கொண்டார். அதை அப்படியே சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்த எண்ணினார். தன்னிடம் எவ்வளவு பணம் வந்தாலும், அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருந்தவர்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை என்பது அப்பர் அடிகளின் வாழ்க்கையைப் போன்றது. ஆர்.எஸ்.எஸ் என்பது தனி அமைப்பு. அதை அவர் எதிர்க்கவில்லை. மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றது குறித்துப் பேசிய எம்.ஜி.ஆர், ' என் அம்மாவின் முகத்தை மூகாம்பிகையிடம் பார்க்கிறேன்' என்றார். ' உழைப்பவரே உயர்ந்தவர்' என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். பழைமையை ரீ மாடல் செய்து வாழ்ந்தவர். அதற்கேற்ப, ஆட்சி, கட்சி, வாழ்வு ஆகியவற்றை அமைத்துக் கொண்டவர். அவருடைய நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட முதல்வர் திட்டம் வைத்திருந்தார். அதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். அவர் நலமடைந்து வந்ததும் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கும்" என்றார் உறுதியாக. 

- ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close