Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘என் செயலுக்காக கலைஞர் கண்ணீர் வடித்தார்..!’ - ரயில் பயண நினைவைப் பகிரும் வைகோ

தி.மு.க-வின் முன்னணி தலைவராக அன்று அவர் இருந்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு முதல்  தமிழர் பிரச்சனைகள் வரை பாராளுமன்றத்தில் அவரின் குரல் ஒலிக்காமல் இருந்தது கிடையாது. டெல்லியில் தி.மு.க-வின் அடையாளமாக பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சி வந்தவர்தான் வைகோ. தி.மு.க-வின் அதிகார சக்தியாக இருந்து, ம.தி.மு.க என்ற கட்சியை துவங்கும்வரை 'கருணாநிதியின் போர்வாள்  வைகோ' என்றே தி.மு.க-வினர் சொல்லிவந்தனர்.

 தி.மு.க-வில் இருந்து ஒருகட்டத்தில் வைகோ கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டு வந்த நிலையில், தி.மு.க தலைவரான கருணாநிதியிடம் இது குறித்து கேட்கப்பட்டது. “வைகோ எனது உறைவாள்.. அதனை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்போது அதனைப் பயன்படுத்துவேன்” என்றார் கருணாநிதி. ஆனால் அந்த உறைவாளால் என் உயிருக்கு ஆபத்து என்று அடுத்த சில மாதங்களிலேயே அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார் கருணாநிதி.  ம.தி.மு.க என்ற இயக்கம் உருவாக காரணமாகவும் ஆகியது அந்த நிகழ்வு.

வைகோ-வின் வளர்ச்சி தி.மு.க-வில் கருணாநிதிக்கும் கொஞ்சம் நெருடலைத்தான்  ஏற்படுத்தியது. தி.மு.க-வின் பவள விழா மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் 91-ம் ஆண்டு நடைபெற்றது. இளைஞர் அணிச் செயலாளராக ஸ்டாலின் வெண்மை உடையில் பவனி வர, ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது. மேடையில் இருந்த கருணாநிதி புன்னகைத்தவாறே தனது மகனைப் பார்த்துக் கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், மேடையில் இருந்த மற்றத் தலைவர்களும் ஸ்டாலினுக்கு கை அசைத்தனர். சிறிது நேரத்தில் கூட்டத்தில் விசில் சத்தம் காதை கிழித்தது. அங்கே, கூட்டத்தின் மத்தியில், தான் அணிந்திருந்த கருப்புத் துண்டை  கையில் பிடித்துக்கொண்டே கை அசைத்துக் கொண்டு வந்தார் வைகோ. ஸ்டாலினுக்கு எழுந்த ஆரவாரம், வைகோ-வின் வருகையின்போது காணாமல் போனது. வைகோ அனைவரையும் பார்த்துக் கை அசைத்தார். அவரை மேடையில் இருந்த யாரும் கண்டும் காணாமல் இருந்தார்கள். நாஞ்சில் மனோகரன் மட்டும், வைகோவுக்கு மறுமொழியாக கை அசைத்தார். இதுபோன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகுதான் கொஞ்சம், கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டு இறுதியில் கட்சியில் இருந்தே 93-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார் வைகோ

இந்த நிகழ்வுகள் நடைபெற்று இருபத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் வைகோ. கருணாநிதியைப் பற்றி பேசினாலே கொஞ்சம் உருக்கம் காட்டுகிறார். ''என்னை நினைத்து ஒரு நேரம் கண்ணீர்விட்டவர் அண்ணன் கலைஞர் '' என்கிறார் வைகோ.

“நான் தி.மு.க எம்.பி.யாக இருந்தபோது, மதுரையில் இருந்து தலைவர் கலைஞரும், தயாளு அம்மாளும் சென்னை வருவதற்கு ரயிலில் ஏறினார்கள். அதே ரயிலில் அப்போது அமைச்சராக இருந்த ஒருவருக்கும் கூபே புக் செய்து இருந்தார்கள். அந்த அமைச்சர் ரயில் புறப்படும்வரை வராமல் போனதால், அந்தக் கூபேயை கலைஞருக்குக் கொடுத்தார்கள். கலைஞரும், தயாளு அம்மாளும் கூபேயில் படுத்துக் கொண்டார்கள். திண்டுக்கல்லுக்கு ரயில் வந்தபோது, அந்த அமைச்சர் திண்டுக்கல்லில் ஏறிவிட்டார். அவரிடம் ரயில் அதிகாரிகள், உங்களுக்கு புக் செய்யப்பட்ட கூபேயில் கருணாநிதி இருக்கிறார். நீங்கள் அடுத்த கூபேயில் தங்குங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால், அந்த அமைச்சர், 'முடியாது, எனக்கு புக் செய்த கூபேயில்தான் தங்குவேன்' என்றார். நானும் அந்த அமைச்சரிடம் பேசிப் பார்த்தேன். 'பக்கத்து கூபேயில் ஒரு நபர் மட்டும் தங்கியுள்ளார். முன்று படுக்கைகள் காலியாக உள்ளன. அங்கு தங்குங்கள்' என்று சொல்லிப்பார்த்தேன். அவர் 'முடியாது' என்று மறுத்துவிட்டார். அதோடு கருணாநிதி இருந்த கூபேயின் கதவைத் திறக்கப் பார்த்தார்கள். 'இந்தக் கதவில் கைவைத்தால், நான்  பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன்' என்றேன். அதன் பிறகு பக்கத்துக் கூபேயில் படுத்திருந்தவரை நான் எழுப்பி 'நான் தி.மு.க எம்.பி. எனது தலைவரும் அவருடைய மனைவியும் பக்கத்து கூபேயில் உள்ளனர்

அமைச்சர் ஒருவரும் அவர் உதவியாளரும் தங்க இடம்வேண்டும் என்பதால், நீங்கள் செகண்ட் க்ளாஸ் ஏசியில் எனக்கு உள்ள இடத்தில் படுத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டேன். அவர் ஒரு மருத்துவர். உடனே 'ஒ.கே.' சொன்னவர் தனது பெட்டியோடு எனது இடத்துக்குச் சென்றுவிட்டார். அமைச்சரிடம் 'காலியாக உள்ள இந்த கூபேயில் நீங்கள் படுத்துப் புரளுங்கள்' என்று சத்தமாக சொன்னேன். காலையில் கூபேயின் கதவைத் திறந்த கலைஞர் நான் வாசலில் நிற்பதைப் பார்த்து 'நீ இங்க என்ன பண்ற... துாங்கவில்லையா?' என்றார். நான் இரவு நடந்த விவரங்களைச் சொன்னதும், என்னைப் பார்த்துக்கொண்டே இருந்த கலைஞரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.  எனக்காக கண்ணீர்விட்ட அந்தத் தலைவர்தான்  இறுதியில் என்மீது கொலை பழி சுமத்தி வெளியேற்றிவிட்டார்' என வேதனைப்படுகிறார் வைகோ!

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close