Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களை குறி வைக்கும் கும்பல்..! ஒரே வாரத்தில் 8 கொலைகளால் அதிரும் சென்னை

சென்னையில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து கொலைகள் நடப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னை மாநகரத்தில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 8 கொலைகள் அரங்கேறியுள்ளன. இது பொதுமக்களையும், போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொலைகளோடு கொள்ளைச் சம்பவங்களும், வழிப்பறிச் சம்பவங்களும் தொடர்ந்து நடந்துள்ளன. அக்டோபர் 29ல் தீபாவளித் தினத்தன்று சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 3 கொலைகள் நடந்தன. அந்த சம்பவத்தின் ஃபளாஸ்பேக்.

கஞ்சா மோதல் 

கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கலியா என்ற ரஞ்சித்குமார். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செங்கோட்டையன். பிரபல ரவுடிகளான இவர்கள் இருவரும் கஞ்சா மொத்த விற்பனையில் கொடிகட்டிப் பறந்தனர். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. தீபாவளியையொட்டி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினரும் கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மோதினர். இதில் ரஞ்சித்குமார் பலியானார். அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்கோட்டையனின் நண்பர் சக்திவேல் இறந்தார். இதற்கிடையில் செங்கோட்டையன் தரப்பைச் சேர்ந்த செபஸ்டின் வெட்டி கொலை செய்யப்பட்டார். மூன்று கொலைகள் நடந்ததால் கண்ணகி நகர் பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கண்ணகிநகர் போலீசார் இரண்டு தரப்பை சேர்ந்த மணிமாறன், தமிழரசன், அற்புதராஜ், ராஜன், ஆகாஷ், வீரா, ராஜீ, கொசு ஆகிய 8 பேரை கைது செய்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கண்ணகிநகர் சம்பவத்தால் போலீஸாரும், மக்களும் தூக்கத்தை இழந்துள்ளனர்.

பழிக்குப்பழி

இந்த சம்பவத்தின் ரத்தக்கறைகள் காய்வதற்கு முன்பே சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனி 1-வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி பழனி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழனி மீது, 2013ல், வியாசர்பாடியைச் சேர்ந்த முத்து பாட்ஷா கொலை வழக்கு; 2014ல், புழல் சரவணன் கொலை வழக்குகள் உள்ளன.

தனியாக வசித்த பெண்கள்

அக்டோபர் 31-ம் தேதி சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்த சாந்தி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நவம்பர் 2-ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம், குமரன்நகர், தேவன் காலனி, முத்தாரம்மன் கோயில் தெருவில் குடியிருந்த வழக்கறிஞர் லட்சுமி சுதா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர், கணவரை 30 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியாக வசித்த இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர். மூன்றாவதாக இன்று ஆயிரம் விளக்கு மக்கிஸ்கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் பழனியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருவாய் ஆய்வாளர்

சென்னை ஜி.கே.எம். காலனி சத்யவாணி முதல் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன். வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவர், 27-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அதுதொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் மணிமாறன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலையில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் மகேஷ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காரணம் என்ன?

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பெறுவதால் அவரது பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளதே காரணம் என்கின்றனர் போலீஸ் வட்டாரம். குற்றவாளிகளைக் குறித்து தகவல் தெரிவிக்கும் மாநில, மாநகர உளவு பிரிவு போலீஸார் அப்போலோவிலேயே முடங்கி விட்டதால் சென்னை மாநகர போலீஸாரின் அன்றாடப் பணி தொய்வடைந்துள்ளது. இதுவே ரவுடி கும்பலையும், சமூக விரோதிகளையும் கட்டஅவிழ்த்து விடப்பட்டுள்ளதாக போலீஸ் உயராதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சென்னையில் உள்ள போலீஸாரின் ரோந்து வாகனங்கள் சரிவர செயல்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறுத்தப்படுகின்றன. இதுவும் கிரைம் ரேட் அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம். சென்னை போலீஸார் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதற்கிடையில் சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் பட்டப்பகலில் மூகமுடி அணிந்து கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதவிர வழிப்பறி சம்பவங்களும் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன.

தொடர் கொலைகள் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வீடுகளில் தனியாக குடியிருக்கும் முதியோர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அந்த திட்டத்தில் 4 ஆயிரத்து 600 முதியோர்கள் தங்களது பெயர்களை தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்துக்கு ‘1253’ என்ற இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமும் முதியோர்கள் உதவி பெறலாம். கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதால் சென்னை நகரில் கூடுதல் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளையும் கண்காணித்து வருகிறோம்" என்றார். 

நமது நிருபர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close